என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ஈரோடு, மேட்டூர் மெயின் ரோடு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    பவானி:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். பொதுமக்களும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அண்ணாமலை ஏற்கனவே தனது 2 கட்ட நடைபயணத்தை முடித்து நேற்று அவிநாசியில் தனது 3-வது கட்ட நடைபயணத்தை தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கோவையில் இருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானிக்கு என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை வந்தார். பவானி கூடுதுறை பிரிவு ரோட்டில் வந்த அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

    அதனைத்தொடர்ந்து அண்ணாமலை பவானி கூடுதுறை பிரிவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு இருந்த குழந்தைகள் அண்ணாமலைக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பெண்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    ஈரோடு, மேட்டூர் மெயின் ரோடு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது பொதுமக்களை சந்திக்கிறார். பின்னர் அந்தியூர் பிரிவு ரோட்டில் திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    அதன் பிறகு இன்று மாலை 4.30 மணியளவில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலையில் இருந்து அண்ணாமலை மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்குகிறார். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் பாதயாத்திரையை முடித்து கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.

    • ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர்.
    • மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது‌.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கான மத்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமான 'ஜல்ஜீவன்' இணைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் சில தினங்களுக்கு முன்பு விடப்பட்டது.

    இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சிவகங்கையில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு பணிகள் விட்டது தொடர்பான டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமூர்த்தி வாகனத்திலிருந்தும் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்படி மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை இன்று அதிகாலை சுமார் 3 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து அந்த பணம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு உள்ளது.

    இந்நிலையில் ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதைப்போல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர்-மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலனி தடங்கள் இருந்தன.

    இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு பகுதியில் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் ரமேஷ் காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்து வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது நாட்டு துப்பாக்கியைத் தேடி அதே பகுதியை சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் நண்பர்கள். மேலும் 2 பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது.

    வேட்டைக்கு செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்டையன், ராமர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 

    • வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
    • புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அடுத்த மோள பாளையம் பகுதியில் கீழ் பவானி வாய்க்கால் செல்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் நேற்று இரவு நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவ லாக மழை பெய்தது. தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மோளபாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலத்திற்கு (26-வது மைல்) கிழக்கே வாய்க்காலின் இடது கரையில் நேற்று இரவு திடீரென மண் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கரையில் மண் சரிவு ஏற்பட்டு மண் கரை சேதமானது.

    இது குறித்து தெரிய வந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    இதையடுத்து கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுப் பணித்துறையினர் விரைந்து மண் கொட்டி சீரமைக்க வேண்டும். மண் அரிப்பை சரி செய்யாவிட்டால் சேதாரம் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    வாய்க்காலில் முழு கொள்ளளவு (2300 கன அடி) தண்ணீரை திறக்கும் பட்சத்தில் கரை உடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த அரிப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்த போது இந்த பகுதியில் மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. புதிய மண் என்பதால் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மண் அரிப்பு இன்று சரி செய்யப்படும் என கூறினர்.

    இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பணியாளர்கள் மூலம் மண் அரிப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    • உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
    • காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இருந்து வருபவர் தங்கவேலு.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு சி.சி.ஏ. என்ற வழக்கில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 26.6. 2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    அந்த உத்தரவு நகலை ஈரோடு மாவட்ட எஸ்.பி., வழக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேலு ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு 26.6.2023-ந் தேதி கடந்த பின்பும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இன்று (16-ந் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின் காரணமாக அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் ஆண்டிபாளையம் ரோட்டில் செங்கல் சூளை பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டம் அருகே சின்ன கிளை வாய்க்கால் செல்லும் பாலம் மீது இன்று காலை சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில கிடந்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். இதில் அவருக்கு உடலில் ரத்த காயங்கள் மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் அவர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 46) என்பதும், அவர் சமையல் தொழிலாளி என்றும், அவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தட்சின் (18), கிஷோர் (16) என்ற 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை நடந்த இடத்திற்கு வீரா என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீபாவளிக்கு தேவையான புதிய ரக ஜவுளிகளுக்கான துணி கொள்முதல் கடந்த 15 நாட்களுக்கு முன்பே முடிந்தது.
    • ரயான் காட்டன் காடா துணி உற்பத்தி குறைந்து பல ஆயிரம் தறிகள் வேலை இன்றி முடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகளில் 4 லட்சம் தறிகளில் காட்டான் மற்றும் ரயான் காடாத்துணிகள் உற்பத்தியாகி வருகிறது. மற்றவைகளில் அரசின் இலவச வேட்டி-சேலை, பள்ளி சீருடை, வேட்டி, துண்டு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு காடா துணியில் இருந்து டையிங், ப்ளீச்சிங் உள்ளிட்ட மதிப்பு கூட்டும் பணிக்கு பூஜ்ய நிலை டிஸ்சார்ஜ் பிரச்சினை அதிகம் உள்ளதால், இவற்றை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு அனுப்பி மதிப்பு கூட்டி மீண்டும் கொண்டு வந்து விற்பனைக்கு அனுப்பப்படும்.

    கடந்த சில மாதமாக குஜராத்திலும் மதிப்பு கூட்டும் பணியில் கழிவுநீர் வெளியேற்ற பிரச்சனையால் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. எனவே முழு அளவிலான துணிகளை அங்கு அனுப்ப முடியாமலும், உரிய நாளில் அவர்களால் துணியை திரும்பத் தர முடியாமலும் உள்ளது.

    அத்துடன் ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பு கூட்டிய துணிகளை கொண்டு சென்று திரும்புவதும் அதற்கான பண பரிமாற்றமும் தடைப்பட்டுள்ளது.

    இது தவிர துணிகளில் டையிங் மட்டுமின்றி பிற மதிப்பு கூட்டும் பணி, ஆயத்த ஆடை பணிகள் மேற்கொள்ளப்படும் கொல்கத்தா, குஜராத், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஜோத்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நவராத்திரி உற்சவம் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே இங்கெல்லாம் துணிகளை அனுப்பும் பணிக்கான ஆர்டர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு தேவையான புதிய ரக ஜவுளிகளுக்கான துணி கொள்முதல் கடந்த 15 நாட்களுக்கு முன்பே முடிந்தது. இனி தீபாவளிக்கு பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி உற்பத்தி துவங்கும் போதே காட்டன் மற்றும் ரயான் காடா துணிகள் அல்லது மதிப்பு கூட்டிய துணிகளின் தேவை ஏற்படும்.

    அதுவரை விற்பனை மந்தமாக இருக்கும் என்பதுடன் உற்பத்தி செய்து வைத்த காட்டன் மற்றும் ரயான் காடா துணிகள் இயக்கமும் குறைந்துள்ளது. இதனால் ரயான் காட்டன் காடா துணி உற்பத்தி குறைந்து பல ஆயிரம் தறிகள் வேலை இன்றி முடங்கியுள்ளது.

    வழக்கமாக தீபாவளியின் போது துணி உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற நிலை தற்போது மாறியிருப்பது விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களை பாதித்துள்ளது.

    • கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு, கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கெரிவேரியில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர் கொடிவேரி மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

    இதே போல் கொடிவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கொடிவேரியில் 1200 கன அடி தண்ணீர் செல்கிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    எனவே சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அணையில் தண்ணீர் அளவு குறைவும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நீர் வரத்து குறைந்த பின் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிக்கப்பட்டு இருந்ததது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் பலர் வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து இருந்தனர். ஆனால் உள்ளே செல்லவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதையொட்டி அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு அணையில் குளிக்க முடியவில்லையே என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அடுத்த எஸ்.கே.சி. சாலை முதல் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் மதிவதனசுந்தரம் (31). என்ஜினீயரிங் பட்டதாரி. அவரது தந்தைவுடன் மளிகை கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    சந்திரசேகரனுக்கும், அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்திரசேகரன் ஈரோடு கரூர் சாலை காந்திஜி வீதியில் தனியாக வசித்து வருகிறார். மதிவதனசுந்தரம் கடந்த சில நாட்களாக ஏதோ மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சந்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதிவதனசுந்தரம் கியாஸ் சிலிண்டரில் டியூப் சொருகி, அதனை மூக்கில் வைத்து பின்னர் பிளாஸ்டிக் கவரினை முகத்தில் போட்டு அந்த சிலிண்டர் வாயுவை சுவாசித்து மதிவதனசுந்தரம் தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சந்திரசேகரன் மகன் இருக்கும் நிலைமையை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மதிவதன சுந்தரத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மதிவதனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மதிவதனசுந்தரத்தின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு, அக். 15-

    ஈரோடு பெரியவலசு வள்ளியம்மை முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (49). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று அவரது நண்பர் சுப்பிரமணி என்பவருடன் ஈரோடு சூளை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் கேட்டு சிறிய கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    ஆனால் சுரேஷ்குமார் பணம் தர மறுத்து கூச்சல்போட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் வீரப்பன்சத்திரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த முருகன் மகன் ரவி (23), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சண்முகம் மகன் லோகேஸ்வரன் (19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அருகே மாமரத்து பாளையம் 1-வது தெரு லட்சுமி நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் விஸ்வநாதன் (வயது 79). இவரது மனைவி ஞானசுந்தரி.

    இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஸ்வநாதன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தவர் ஆவார். இதையடுத்து விஸ்வநாதன் அவரது உறவினர் மோகனாம்பாள் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    விஸ்வநாதன் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த விஸ்வநாதன் வீட்டினுள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து மோகனாம்பாள் சித்தோடு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரச்சலூர், தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அவல்பூந்துறை கே.கே.வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பிரமணி (வயது 72),

    தாளவாடி தலமலை பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், கடம்பூர் சுஜில்கரை சிவா என்ற கோழிக் கடை சிவா, கடம்பூர் பகுதியை சேர்ந்த வீரப்பா மகன் குருசாமி,

    சத்தியமங்கலம் கொட்டு வீரப்பம்பாளையம் சேகர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் செம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன், சுந்தர் மகன் பூபதி ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×