என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரயான் துணிகளின் உற்பத்தி கடும் பாதிப்பு- ஆயிரக்கணக்கான தறிகள் வேலையின்றி முடக்கம்
    X

    ரயான் துணிகளின் உற்பத்தி கடும் பாதிப்பு- ஆயிரக்கணக்கான தறிகள் வேலையின்றி முடக்கம்

    • தீபாவளிக்கு தேவையான புதிய ரக ஜவுளிகளுக்கான துணி கொள்முதல் கடந்த 15 நாட்களுக்கு முன்பே முடிந்தது.
    • ரயான் காட்டன் காடா துணி உற்பத்தி குறைந்து பல ஆயிரம் தறிகள் வேலை இன்றி முடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகளில் 4 லட்சம் தறிகளில் காட்டான் மற்றும் ரயான் காடாத்துணிகள் உற்பத்தியாகி வருகிறது. மற்றவைகளில் அரசின் இலவச வேட்டி-சேலை, பள்ளி சீருடை, வேட்டி, துண்டு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு காடா துணியில் இருந்து டையிங், ப்ளீச்சிங் உள்ளிட்ட மதிப்பு கூட்டும் பணிக்கு பூஜ்ய நிலை டிஸ்சார்ஜ் பிரச்சினை அதிகம் உள்ளதால், இவற்றை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு அனுப்பி மதிப்பு கூட்டி மீண்டும் கொண்டு வந்து விற்பனைக்கு அனுப்பப்படும்.

    கடந்த சில மாதமாக குஜராத்திலும் மதிப்பு கூட்டும் பணியில் கழிவுநீர் வெளியேற்ற பிரச்சனையால் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. எனவே முழு அளவிலான துணிகளை அங்கு அனுப்ப முடியாமலும், உரிய நாளில் அவர்களால் துணியை திரும்பத் தர முடியாமலும் உள்ளது.

    அத்துடன் ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பு கூட்டிய துணிகளை கொண்டு சென்று திரும்புவதும் அதற்கான பண பரிமாற்றமும் தடைப்பட்டுள்ளது.

    இது தவிர துணிகளில் டையிங் மட்டுமின்றி பிற மதிப்பு கூட்டும் பணி, ஆயத்த ஆடை பணிகள் மேற்கொள்ளப்படும் கொல்கத்தா, குஜராத், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், ஜோத்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நவராத்திரி உற்சவம் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே இங்கெல்லாம் துணிகளை அனுப்பும் பணிக்கான ஆர்டர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தீபாவளிக்கு தேவையான புதிய ரக ஜவுளிகளுக்கான துணி கொள்முதல் கடந்த 15 நாட்களுக்கு முன்பே முடிந்தது. இனி தீபாவளிக்கு பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி உற்பத்தி துவங்கும் போதே காட்டன் மற்றும் ரயான் காடா துணிகள் அல்லது மதிப்பு கூட்டிய துணிகளின் தேவை ஏற்படும்.

    அதுவரை விற்பனை மந்தமாக இருக்கும் என்பதுடன் உற்பத்தி செய்து வைத்த காட்டன் மற்றும் ரயான் காடா துணிகள் இயக்கமும் குறைந்துள்ளது. இதனால் ரயான் காட்டன் காடா துணி உற்பத்தி குறைந்து பல ஆயிரம் தறிகள் வேலை இன்றி முடங்கியுள்ளது.

    வழக்கமாக தீபாவளியின் போது துணி உற்பத்தி அதிகமாக இருக்கும் என்ற நிலை தற்போது மாறியிருப்பது விசைத்தறியாளர்கள், தொழிலாளர்களை பாதித்துள்ளது.

    Next Story
    ×