search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை
    X

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காணலாம்

    காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை

    • ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர்.
    • மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது‌.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கான மத்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமான 'ஜல்ஜீவன்' இணைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் சில தினங்களுக்கு முன்பு விடப்பட்டது.

    இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சிவகங்கையில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு பணிகள் விட்டது தொடர்பான டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமூர்த்தி வாகனத்திலிருந்தும் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்படி மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை இன்று அதிகாலை சுமார் 3 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து அந்த பணம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×