search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
    X

    தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படும் கொடிவேரி தடுப்பணை.

    கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    • கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு, கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கெரிவேரியில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர் கொடிவேரி மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

    இதே போல் கொடிவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கொடிவேரியில் 1200 கன அடி தண்ணீர் செல்கிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    எனவே சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அணையில் தண்ணீர் அளவு குறைவும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நீர் வரத்து குறைந்த பின் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிக்கப்பட்டு இருந்ததது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் பலர் வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து இருந்தனர். ஆனால் உள்ளே செல்லவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதையொட்டி அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு அணையில் குளிக்க முடியவில்லையே என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×