என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகி த்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாராவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டணர்.

    • தமிழகத்தை இன்று கடன்கார மாநிலமாக தி.மு.க மாற்றி உள்ளது.
    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.

    அந்தியூர்:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே நேற்று மாலை நடைபயணத்தை தொடங்கிய அவர் தேர்வீதி, ஜி.ஹெச்.கார்னர் வழியாக சென்று அந்தியூர் ரவுண்டானாவில் நடைபயணத்தை நிறைவு செய்தார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    9 ஆண்டுகள் கால மத்திய அரசின் ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாம் குற்றச்சாட்டு வைப்பதற்கு முன்பே 2006-2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் தி.மு.க. ஆட்சி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தற்போதுள்ள 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இலக்கா இல்லாத அமைச்சராக சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு மாத மாதம் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.

    இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் ஊழல் நடக்கிறது. மேலிடம் ஆரம்பித்து கடைக்கோடி வரை ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதை மாற்ற நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தற்போது ரூ.7.53 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

    தமிழகத்தை இன்று கடன்கார மாநிலமாக தி.மு.க மாற்றி உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். ஒரு பக்கம் கடன்கார மாநிலமாகவும், இன்னொரு பக்கம் குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். தமிழகத்தில் மது விற்று 44 ஆயிரம் கோடி ரூபாய் அரசு சம்பாதிக்கிறது.

    இங்கே எல்லாவித தெய்வத்தையும் நாம் கும்பிடுகிறோம். இதுதான் சனாதன தர்மம். மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஏழை என்ற ஜாதியை ஒழிப்பேன் என்று கூறினால் நாங்களே ஆதரவு தருகிறோம். அனைவரும் ஏழை என்ற ஜாதியை ஒழிப்போம். ஆனால் இந்து தர்மத்தை ஒழிப்பேன். சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று முதல்வரும், அவரது மகனும் கிளம்பியுள்ளனர்.

    இதை கண்டிப்பது மட்டுமல்ல. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் அண்ணாமலை சத்தியமங்கலம் கோட்டுவீராம் பாளையத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். மணிக்கூண்டு வழியாக சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் சென்று அங்கு இருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் செல்கிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோபி சத்தி ரோட்டில் நடைபயணத்தை தொடங்குகிறார். கச்சேரிமேடு, மார்க்கெட் ரோடு வழியாக மொடச்சூர் செல்லும் அண்ணாமலை அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    • வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.
    • சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தாமரை செல்வி(30). இவர்களது குழந்தை தக்ஷினி(4). உறவினர் சிவகாமி (30). இந்த நிலையில் நேற்று மதியம் தாமரைசெல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி உடன் ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது வில்லரசம் பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைசெல்வி, சிவகாமி, தக்ஷினி ஆகிய 3 பேருக்கும் வயிற்றுவலி, வாந்தி பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின்பேரில் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இன்று காலை சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டதோடு மறுஅனுமதி வரும் வரை வேறு எந்த உணவு பொருட்களையும் தயாரிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவு பொருட்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    • ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், நீர் திறந்து விட வலியுறுத்தியும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலை மையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளை மாடு சிலை அருகே தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு கர்நாடகா அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி வந்தனர்.

    அப்போது அங்கு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 2 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • சென்னிமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குழந்தைகள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இம்மருத்துவ முகாமில் கை, கால் இயக்க குறைபாடு, மன நல குறைபாடு, காது, மூக்கு, தொண்டை மற்றும் பார்வை குறைபாடு உடைய பிறந்த குழந்தை 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை போன்ற வற்றுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேலும் இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சென்னிமலை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கோபிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.
    • வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு, அக். 17-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நிகமம் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. லோடு வாகன டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா (38). விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று புது வடவள்ளி பட்டவர்த்தி அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தட்டி அறுக்கும் வேலையில் வெண்ணிலா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.

    உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.
    • பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    ஈரோடு, அக். 17-

    ஈரோடு டவுன் சப்-டிவிஷனில் கருங்கல் பாளையம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு டவுன், வீரப்ப ன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, மொடக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த போலீஸ் நிலைய ங்களில் தனித்தனியாக தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தனிப்பிரிவு போலீசாரின் முக்கிய பணி தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் எந்தவித செய்தி நடந்தாலும் அதை போலீ சாருக்கு முன்கூட்டியே தெரிவிப்பது தான்.

    இந்த தனிப்பிரிவு போலீசார் மூன்றாண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடைசியாக நி யமனம் செய்யப்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்களை ஒழிக்க கடும் நட வடிக்கை மேற்கொண்டார். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தினார்.

    புகார் குள்ளாகும் போலீசார் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தற்போது டவுன் சப்-டிவிஷனில் உள்ள கருங்கல்பாளையம், அரசு மருத்துவமனை , ஈரோடு டவுன், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, மொடக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.

    நிர்வாக காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம்.
    • மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்து 715 எண்ணிக்கையிலான ஆயிரத்து 807 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.18.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.29.9 காசுகள், சராசரி விலையாக ரூ.24.96 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.43 ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 695 மூட்டைகள் கொண்ட 34 ஆயிரத்து 47 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில்முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.79.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.82.99 காசுகள், சராசரி விலையாக ரூ.82.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.64.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.79 காசுகள், சராசரி விலையாக ரூ.76.99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 807-க்கு விற்பனையானது.

    இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் ஆயிரத்து 292 மூட்டைகள் கொண்ட 60 ஆயிரத்து 4 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.81.55 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.83.55 காசுகள், சராசரி விலையாக ரூ.83.15 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.91 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.79.89 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.47 லட்சத்து 68 ஆயிரத்து 345-க்கு விற்பனையானது.

    கொடுமுடி மற்றும் எழுமாத்தூர் ஆகிய 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் மொத்தம் ரூ.74 லட்சத்து 74 ஆயிரத்து 755-க்கு தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனையானது.

    • வீட்டின் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் காட்டூர் ரோடு பாண்டியன் வீதியில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    3 அடி நீளம் கொண்ட அந்த சுருட்டை விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு, அக். 17-

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இரவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    பவானியில் அதிக பட்சமாக 11 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் பெருந்துறை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று காலை முழுவதும் மேகம் மூட்டத்துடன் இருந்தது. காலையில் மழை பெய்யவில்லை என்றாலும் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 55.80 மி.மீ மழை பதிவானது.

    இதேபோல் கொடுமுடி, கொடிவேரி, பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, சத்தியமங்கலம், நம்பியூர், மொடக்குறிச்சி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது.

    இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    குண்டேரிப் பள்ளம்-55.80, கொடுமுடி-42, கொடிவேரி-33, பெருந்துறை-28, கோபி-17.20, அம்மாபேட்டை-17, சத்தியமங்கலம்-13, நம்பியூர்-12, மொடக்குறிச்சி-10, வரட்டுப்பள்ளம்-8.20, ஈரோடு-4, பவானி-2.80.


    • நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.
    • பெண்கள் கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நம்பியூர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்கள்.

    இக்கோவில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.

    அதில் 2-வது நாளாக நேற்று பெண்கள் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் பாடி கும்மி அடித்தபடி நடமாடி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு வில்வ பல பொடியினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.45 அடியாக சரிந்து உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 1,014 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.45 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,014 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 1,500 கனஅடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கும், பவானி ஆற்றுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.53 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 8.85 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.67அடியும் உள்ளது.

    ×