என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ஊழல் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
- தமிழகத்தை இன்று கடன்கார மாநிலமாக தி.மு.க மாற்றி உள்ளது.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
அந்தியூர்:
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே நேற்று மாலை நடைபயணத்தை தொடங்கிய அவர் தேர்வீதி, ஜி.ஹெச்.கார்னர் வழியாக சென்று அந்தியூர் ரவுண்டானாவில் நடைபயணத்தை நிறைவு செய்தார். அங்கு பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
9 ஆண்டுகள் கால மத்திய அரசின் ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்று தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
நாம் குற்றச்சாட்டு வைப்பதற்கு முன்பே 2006-2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் தி.மு.க. ஆட்சி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தற்போதுள்ள 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இலக்கா இல்லாத அமைச்சராக சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு மாத மாதம் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தமிழகத்தில் திரும்பிய இடமெல்லாம் ஊழல் நடக்கிறது. மேலிடம் ஆரம்பித்து கடைக்கோடி வரை ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதை மாற்ற நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தற்போது ரூ.7.53 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
தமிழகத்தை இன்று கடன்கார மாநிலமாக தி.மு.க மாற்றி உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். ஒரு பக்கம் கடன்கார மாநிலமாகவும், இன்னொரு பக்கம் குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். தமிழகத்தில் மது விற்று 44 ஆயிரம் கோடி ரூபாய் அரசு சம்பாதிக்கிறது.
இங்கே எல்லாவித தெய்வத்தையும் நாம் கும்பிடுகிறோம். இதுதான் சனாதன தர்மம். மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஏழை என்ற ஜாதியை ஒழிப்பேன் என்று கூறினால் நாங்களே ஆதரவு தருகிறோம். அனைவரும் ஏழை என்ற ஜாதியை ஒழிப்போம். ஆனால் இந்து தர்மத்தை ஒழிப்பேன். சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று முதல்வரும், அவரது மகனும் கிளம்பியுள்ளனர்.
இதை கண்டிப்பது மட்டுமல்ல. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் அண்ணாமலை சத்தியமங்கலம் கோட்டுவீராம் பாளையத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். மணிக்கூண்டு வழியாக சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் சென்று அங்கு இருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் செல்கிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோபி சத்தி ரோட்டில் நடைபயணத்தை தொடங்குகிறார். கச்சேரிமேடு, மார்க்கெட் ரோடு வழியாக மொடச்சூர் செல்லும் அண்ணாமலை அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.






