என் மலர்
திண்டுக்கல்
- மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
- மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக பகல் நேரத்தில் மலைப்பாதை மேகமூட்டமாக காட்சி அளித்தது. இதனால் பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதற்கிடையே கனமழைக்கு பெருமாள்மலை வழியாக அடுக்கம்-கும்பக்கரை செல்லும் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து மலைப்பாதையில் விழுந்த பாறைகள், கற்கள், மண்குவியல்களை அகற்றினர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து முதல் அடுக்கம் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைப்பாதையில் மழைக்காலத்தில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அடுக்கம் மலைப்பாதையை விரைவில் முழுமையாக சீரமைத்து போக்குவரத்து தொடங்க வேண்டும். தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தினால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.
- ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது20). இவர் வேலம்பட்டியை சேர்ந்த பாலாஜி (19) மற்றும் ஒரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோபால்பட்டியை அடுத்த ஜூஸ் தொழிற்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த தினகரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜூஸ் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்தும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
- விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
- மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர்.
மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிவடைந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.
இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாதவிநாயகர் கோவில் அருகே தகவல் மையம், முதல் உதவி மையம், குழந்தைகள் பாலூட்டும் அறை பூஜை செய்து திறக்கப்பட்டது.
இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
நவராத்திரி விழாவை யொட்டி பெரிய நாயகியம்மன் கோவில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோவிலில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
- கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.
திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
- பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்புக்கட்டப்பட்டது.
பின்னர் மதியம் உச்சிகால பூஜைக்குப் பின்பு மலைக்கோவிலில் உள்ள முருகபெருமான், துவார பாலகர்கள், வாகனம் ஆகியவற்றிற்கு காப்புக்கட்டு நடைபெற்றது.
இதேபோல் உப கோவில்களிலும் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற உள்ளது.
கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு இதில் சிறுவர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.
10ம் நாளாக வருகிற 12ம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதனை தொடர்ந்து முத்துக்குமார சாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்களம் சென்று வில், அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் முத்துக்குமார சாமி பெரியநாயகி அம்மன் கோவில், பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார்.
- சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா. இவரும் ஜம்புளியம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுக்க குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே இருந்த கதவின் பூட்டும் கம்பியால் நெளிக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும், இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு நகைகள் இருப்பதை நோட்டமிட்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் மோப்பநாயை வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. அந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
- இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனை எடப்பாடி பழனிசாமி மீது வீசினார். அந்த செல்போன் இ.பி.எஸ். காதில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அவர் திடீரென பதட்டமடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரீகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைவாக கூடாது. வன்முறையை தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மிகுந்த கவனமுடனும், விழிப்புடணும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியும் கூறி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என அன்போடு அழைத்து ரவீந்திரநாத் பதிவிட்டு இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ரோப் கார் சேவை மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் கார் சேவை வருகிற 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாகவும் படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம்.
- இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு வருடம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மட்டுமின்றி, விரைவாக செல்ல ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பழனி மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த பிறகு அங்குள்ள தங்க கோபுரம் மற்றும் ராஜேகோபுரத்தை தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு ஜன.27ம் தேதி பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து 48 நாட்கள் நடந்த மண்டல பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ராஜகோபுரத்தில் சேதம் என்ற புகைப்படம் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது 5 கோபுர கலசங்களுக்கு இடையில் இருக்கும் அலங்கார வளைவு உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். விரைவில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.
இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதுரை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் பவனேஷ் (வயது 17). இவர் தனது அம்மா ஞானம், அண்ணன் சுனில் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரி சிவன் கோவிலில் சிற்ப வேலைக்காக சென்றார்.
பின்னர் கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல்லை கடந்து மொட்டணம்பட்டி அருகே ரெயில் சென்ற போது எதிர்பாராதமாக நிலை தடுமாறி பவனேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பவனேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
- சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியைச் சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில், ஜே.சி.பி. வாகனங்களை வாங்கி விற்பனை செய்தும் வந்துள்ளார்.
இவர் மனைவி முத்துமாரி (35) நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு குமரன் (8) என்ற மகனும், முருகதனம் (11) என்ற மகளும் உள்ளனர். மாசிக்கு சொந்தமாக பெருமாள் கவுண்டன்பட்டியில் தோட்டம் உள்ளது.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த தொழிலாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் மீண்டும் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்க முயன்றனர்.
இதனால் பயந்து போன மாசி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். தனது பைக்கை அங்கேயே விட்டு விட்டு ஓட முயன்ற போது விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டினர்.
இதில் மாசியின் ஒரு கை துண்டாகி கீழே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாசியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் கொலைக்குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இரவு 11 மணி வரை அவர்கள் அதே இடத்தில் நகராமல் இருந்ததால் பதட்டமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாசியின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அங்கு திரண்டு இருந்தவர்கள் மாசியின் உடலை இங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், திண்டுக்கல் எடுத்துச் செல்லக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றால்தான் அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதம் செய்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வடமதுரை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






