என் மலர்
திண்டுக்கல்
- திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
- காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.
வடமதுரை:
மழை காலத்தில் இடி, மின்னல் அடிக்கும் போது காளான் முளைப்பதுண்டு. கிராமப்புறங்களில் இந்த காளான்களை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வழக்கம் நகர் புறங்களிலும் தொடரவே செயற்கை முறையில் காளான்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
காளான்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் உடலில் பல்வேறு நோய்களை தீர்ப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதன் மீதான ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. செங்குளத்துப்பட்டியில் உள்ள சுந்தர மகாலட்சுமி என்பவரது தோட்டத்தில் இன்று காலை 2 கிலோ எடையுள்ள மிகப்பெரிய காளான் முளைத்திருந்ததை அவரது மகன் கவின் பார்த்தார்.
இதுகுறித்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவவே அந்த காளானை ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் அந்த காளானை வேரோடு பறித்து வீட்டிற்கு சமையலுக்கு எடுத்துச் சென்றனர்.
- தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.
- 180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு தொழில்களுக்காக தமிழர்கள் சென்றனர். இதில் தாயகம் திரும்பிய தமிழர்கள் நெய்மிளகாய் கொண்டு வந்தனர். இந்த மிளகாய்களை கொடைக்கானல் மலைக்கிராமங்கள், ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில சாகுபடி செய்தனர். சீதோசன நிலை நெய்மிளகாய் வளர்வதற்கு ஏற்றதாக இருந்ததால் ஆண்டு முழுவதும் மலை ஸ்தலங்களில் நெய்மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
பம்பரம் போன்று தோற்றமளிக்கும் நெய்மிளகாய் நாட்டு மிளகாயை விட காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை இருக்கும். குழம்பில் போடும்போது நெய்போன்று வாசனை கமகமக்கும். கொடைக்கானலில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்ட போதும் மழைக்காலமே இதன் சீசனாகும். தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.
180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் ஒருசில விவசாயிகள் மட்டுமே நெய்மிளகாய் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகவே விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் சமையலில் பயன்படுத்தினால் நெய் சேர்த்தது போல் ருசியாக இருக்கு ஒருதடவை சுவைத்து பார்த்தவர்கள் மீண்டும் அதனை தேடி வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது சீசன் தொடங்கி உள்ளநிலையில் மேலும் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது.
- கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு 9.30 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
பின்னர் 10 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியது முதலே இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக நத்தத்தில் 7 செ.மீ மழை பதிவானது. மேலும் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும் விழுந்தன.
பெரியகுளத்தில் இருந்து 18 கி.மீ தூரத்தில் அடுக்கம் கிராமம் உள்ளது. இங்கிருந்து 12 கி.மீ தூரம் கடந்தால் பெருமாள்மலை வந்தடையும். இப்பகுதி மக்களுக்கு இந்த சாலை மட்டுமே முக்கிய வழித்தடமாக உள்ளது.
கனமழை காலங்களில் இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதே போல் இன்றும் அடுக்கம் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலையின் நடுவே விழுந்த பாறையை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் 27.40, காமாட்சிபுரம் 53, நத்தம் 72.50, நிலக்கோட்டை 25, சத்திரப்பட்டி 10.20, வேடசந்தூர் 49, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 46, பழனி 20, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 16.50, பிரையண்ட் பூங்கா 15 மி.மீ என மாவட்டத்தில் ஒரே நாளில் 335.20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி
- பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இன்று 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 397 பேருக்கு நேரடியாகவும், 6238 பேருக்கு பல்கலைக்கழகம் மூலமாகவும், 16 பேருக்கு பதக்கம் என மொத்தம் 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே கடந்த 2 பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்க வில்லை. தொடர்ச்சியாக இன்று கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் கோவிசெழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் காரணமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை என தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை இங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். செயலாளர் சந்திரமவுலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து பொருளாளர் ராமசுப்பிரமணியம், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார்.

அதன் பின் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
தோல்வியை கண்டு துவளாமல் பின் வாங்கிச் செல்லாமல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்து அதனையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளராக ஜொலிக்க முடியும்.
வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் நேர மேலாண்மை , கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இயற்பியல் பாடத்தை இயற்கை மற்றும் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.
எனது வெற்றிக்கு முதல் காரணம் என் தாயின் அறிவுரைகள் தான். எனவே மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலும் அதற்கு பிறகும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு உயர்வானதாக இருந்தால் உங்கள் பள்ளிக்கும், உங்கள் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித் தரும்.
இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
- கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக கவர்னர் ரவி வருகை புரிந்தார். இன்று கொடைக்கானலில் உள்ள சங்கரா வித்யாலயா பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
கவர்னர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி. தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி விடப்பட்டு இருந்ததை பல்வேறு கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வந்தனர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தின் அந்த வரிகள் பிரபலமடைந்து வருகிறது. இன்று கொடைக்கானல் வந்த கவர்னர் ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் இடம் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டன. நேற்று இரவு வரை இந்த போஸ்டர்கள் தெரியாத நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டதால் அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.
- கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
- கவர்னர் வருகையை முன்னிட்டு 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 56-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் கார் மூலம் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் இன்று மாலை கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
இன்று இரவு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கும் ஆர்.என்.ரவி நாளை காலை சங்கரா பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பின் நாளை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 31-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
அதன் பின் பிற்பகல் 3 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கவர்னர் வருகையை முன்னிட்டு கொடைக்கானலில் 66 நக்சல் தடுப்பு பிரிவு படையினர் உள்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
- கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் சாரல்மழை பெய்தது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அடிக்கடி சாரல் மழை பெய்தது. நகர்பகுதியில் தரை இறங்கும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மாறுபட்ட வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏரியில் நனைந்தபடி படகு சவாரி செய்தும், குடை பிடித்தபடியே ஏரிச்சாலையில் நடந்து சென்றும் பொழுதை கழித்து வருகின்றனர். இது மட்டுமின்றி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இதை ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் மன்னவனூர், பூண்டி கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கும் படையெடுத்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் மலைப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஆங்காங்கே உருவாகி உள்ள புதிய அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
- திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.
பழனி:
பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.
அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.
அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கிருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை உள்ளிட்ட கேரளாவுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடந்து செல்லும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.
நேற்று இரவு சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக சோதனை நடத்த திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் இரவு 2 மணியளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையம் வந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.
மேலும் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு காலையில் முதல் பஸ்சுக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கடைகளையும் அடைக்குமாறு தெரிவித்தனர். மேலும் பஸ் நிலைய நுழைவாயிலில் பேரிக்காடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி திறக்க அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ள போதிலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் அன்பழகனின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தார். அவர் தனது மகனுக்கு கடந்த சில நாட்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டு நாங்கள் சொல்வதை கேட்காமல் இருந்து வருகிறார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு நேற்று காலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வெளியே சென்று வருவதாக என்னிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு தற்போது வரை வரவில்லை. எனது உறவினர்கள் அவரை தேடி வருகிறோம் என்றார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன.
- உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை.
வடமதுரை:
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பியூலா என்ற பெண் தனது 3 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வடை சாப்பிட சென்றார். சிறுவனுக்கு வடையுடன் குருமா ஊற்றி கொடுத்துள்ளனர்.
பாதி வடையை சாப்பிட்ட பின்னர் அதில் பூரான் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது தாயிடம் தெரிவித்தான். அவர் கடைக்காரரிடம் வடையில் பூரான் கிடப்பதை காட்டி கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் நகரில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரம் என்பது துளியளவு கூட கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் பூரான், பல்லி, பூச்சி உள்ளிட்ட விஷ சந்துகள் ஆங்காங்கே ஊர்ந்து வருகின்றது. பெரும்பாலான சாலையோர கடைகளில் உணவு பொருட்கள் தரையிலேயே வைக்கப்படுகின்றன. இதனால் பூச்சிகள் அதில் விழும் அபாயம் உள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இனிப்பு, காரம் உள்ளிட்டவை தயாரிக்கும் திடீர் கடைகளும் முளைத்து வருகின்றன. இதில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என தெரியவில்லை. இதுபோன்ற தரம் குறைந்த உணவுகளை உண்பதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றது.
எனவே திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு படையெடுத்தனர்.
இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும்.
- வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி யம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
இதற்காக பழனி கோவிலில் இருந்து பராசக்தி வேல் கொண்டு வரப்படும். எனவே பக்தர்கள் காலை 11 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து கோவிலில் மதியம் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்ஷை பூஜையும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் நடை அடைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பராசக்தி வேல் புறப்பாடாகி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும். அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் முத்துக் குமாரசாமி புறப்பாடாகி கோதைமங்களம் ஜோதீஸ்வரர் கோவிலை வந்தடைவார். அங்கு வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
மேலும் சிவானந்த புலிப்பாணி பாத்திரசாமிகள் அம்பு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். பராசக்திவேல் முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்பு அங்கு அர்த்த சாம பூஜைகள் நடைபெறும்.
நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






