என் மலர்
திண்டுக்கல்
- எப்பொழுதெல்லாம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறதோ அந்த சமயங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகள் முளைப்பது வாடிக்கையாக உள்ளது.
- மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவருந்த வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பிரதான சாலைகளில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் கூட சில நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஏரிச்சாலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சாலை ஆக்கிரமிப்புகளால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எப்பொழுதெல்லாம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறதோ அந்த சமயங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் திடீர் ஆக்கிரமிப்பு கடைகள் முளைப்பது வாடிக்கையாக உள்ளது.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த சாலைகளை கடப்பதில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏரி பாலம் அருகே தொடங்கும் சாலைகளில் ஆரம்பித்து வெள்ளி நீர்வீழ்ச்சி வரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகள் எங்கே என தேடும் நிலை உள்ளது.
ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் உகாத்தே நகர் முதல் ஏரி பாலம் அருகே செல்லும் வரை கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மூஞ்சிக்கல் பிரதான சாலையில் பயணிப்போர் படும் இன்னலுக்கு அளவே இல்லை. மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவருந்த வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பிரதான சாலைகளில் நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் கூட சில நேரங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதேபோல் இரவு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் வரை இருபுறமும் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பள்ளி மாணவ - மாணவிகளும், பொது மக்களும் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் சேதமடைந்த சாலைகளால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை ஊராட்சி பூஞ்சோலை தெற்கு சின்னகரட்டுப்பட்டி, பெரியகரட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன.
அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் சிக்கி இரவு நேரத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பைக்குகளில் செல்பவர்கள் அதிக அளவில் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். டிப்பர் லாரிகளால் சாலை தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நத்தம்:
நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது59). இவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்த விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் நத்தம் போலீசார் மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் போதிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கருணாநிதி ராமலிங்கத்துக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
- முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
- நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர், துணைத் தலைவர் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
பழனி:
பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை, வீடு வீடாக சென்று தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வசதியாக பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனங்கள் வாங்க திட்டமிட்டனர். முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
மேலும் நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர் ராமர், துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. நகர் நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெறும்.
- ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு.
பழனி:
பழனியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வருகிற 17-ம் தேதி பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் நடத்தப்படும் பேச்சு போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காமராசர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் தலைவர் காமராசர், காமராசரின் சமுதாய பற்று, 9 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்துக்கு முன்னும் சுதந்திரத்துக்கு பின்னும் தமிழகத்தின் கல்வி நிலை, உயர்கல்வியில் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற தலைப்புகளில் பேசலாம்.
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதி உண்டு. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் மூலமாக பெயரை 13-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். 17-ம் தேதி காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழும், வெற்றிப் பெற்றவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார்.
- சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.
- பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம்.
பழனி:
பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மத சார்புடையதுதான். அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருகிறார்.
உதாரணமாக கள்ளிமந்தையம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இங்குள்ள பல மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டிற்கு அனுப்பப்படுகிறது. பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர்பாபு முயற்சி செய்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது இந்து மக்களுக்கு சொந்தமானது.
பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது கேலிக்குரியது.
பா.ம.க. தொண்டர் வெட்டிக்கொலை, விசாரணை கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதலமைச்சருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சி.பி.ஐ. நுழையுமோ? என்ற அச்சம், துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சி.பி.ஐ. தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது.
தி.மு.க. ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம். குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38 நாட்களாக ஒரு அமைச்சரை ஆஸ்பத்திரியில் வைத்துள்ளதும் மற்றும் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்தும் இதுவரைதெளிவாக தெரியவில்லை. சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனி கிளையில் இருந்து அரசு பஸ்சை இயக்கி வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களாக பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்நிலையில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பலமுறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தும் தொழிற்சங்க நிர்வாகிகளின் தூண்டுதலால் தனக்கு ஓய்வில்லாத அளவிற்கு பணி வழங்குவதாகவும் கூறினார்.
எனவே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது மரணத்திற்கு காரணம் போக்கு வரத்துக் கழக மேலாளர் கார்த்திகேயன் என்பவரே என கூறி வீடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த சக பணியாளர்கள் ராஜ்குமாரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் துர்காதேவி (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று தோட்டத்துக்கு சென்று பூ எடுத்து வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமானார்.
அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி பாண்டிச் செல்வி (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முத்துக்குமார் தனது மனைவியை காணாமல் திடுக்கிட்டார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.
- அதன் பிறகு நேற்று மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாகிக் கொண்டே சென்றது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.
10-ந் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென வானம் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.
மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை பின்னர் மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை பெய்தது.
இதனால் கடந்த சில நாட்களாக நகரில் வாட்டி எடுத்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி யடைந்தனர். மழையால் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 91.2 மி.மீ மழை அளவு பதிவானது. திண்டு க்கல் 26.2, கொடைக்கானல் 19.5, பழனி 3, நத்தம் 14, நிலக்கோட்டை 2, வேட சந்தூர் 3.2, காமாட்சிபுரம் 1.4, பிரையண்ட் பூங்கா 18.7 மி.மீ மழை அளவு பதி வானது.
- கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்பகுதி யில் மேளம் இசைக்க அனுமதியில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.
- கோவில் உள்பகுதியில் மேளம் இசைத்து பக்தர்கள ஆட முற்பட்டபோது ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள், அலகு குத்தி வரும் பக்தர்கள் அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பே மலைக்கோவி லுக்கு செல்கின்றனர். அதேபோல் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருஆவினன்குடியில் வைத்து காவடி ஆட்டம் ஆடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் வளாக பகுதியில் மேளம் இசைப்பது தொடர்பாக இரு பக்தர்கள் குழு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்பகுதி யில் மேளம் இசைக்க அனுமதியில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து திருஆவினன்குடிக்கு வந்தனர். பின்னர் கோவில் உள்பகுதியில் மேளம் இசைத்து ஆட முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் தரப்பில் கோவில் வளாகத்தில் ஆடக்கூடாது என தெரிவித்தனர்.
இதற்கு சில பக்தர்கள் கோவில் அதிகாரி களிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். தகவல றிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 2 மணி நேரமாக பெய்த கன மழையால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.
- வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.காலையில் மாணவ- மாணவிகள், பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நேற்று மதியம் திடீரென பெய்த சாரல் மழை, கன மழையாக மாறியது. சுமார் 2 மணி நேரமாக பெய்த கன மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகள், அன்றாட பணிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.
ஒரு சில வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது. மேலும் நள்ளிரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.நேற்றைய திடீர் மழையால் கொடைக்கானல் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப்பணிகள் பாதிப்படைந்தனர்.
மழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள் பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குள்ளளக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.






