என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஏராளமானோர் இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையில் இருந்து பல நாட்களாக கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
    • இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஸ்டாலின் காட்டேஜ் உள்ளது.இங்கு பல்வேறு மிக்சர் கடைகள், வக்கீல்கள் அலுவலகம், இலைக்கடை,மற்றும் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இதனால் ஏராளமானோர் இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கு செயல்பட்டு வரும் கட்டண கழிப்பறையில் இருந்து பல நாட்களாக கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆகவே சாலையில் ஓடும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
    • தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு:

    நிலக்கோட்டை அருகே சத்திரம் தெருவை சேர்ந்தவர் பத்திரிநாராயணன் (42). இவர் சோப்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பழைய கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே வியாபாரம் செய்துவிட்டு நடந்து வந்தபோது சின்னாளபட்டி கோட்டைபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் தலையில் படுகாயமடைந்த பத்திரி நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட பேரிக்காய் போன்ற பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .
    • பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி, செண்பகனூர், சின்ன பள்ளம், பெரும்பள்ளம் , நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்லும் பழங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்ட இந்த வகை பழங்கள் தற்போது மலைப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சலானது முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது .

    சில இடங்களில் மட்டுமே பேரிக்காய் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மரங்களில் உள்ள நோய்கள் குறித்தும் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.
    • கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 மாதமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.

    இதனால் துவரம் பருப்பு பதுக்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மொத்த கடைகள் மற்றும் டீலர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் நகரில் 4 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர்.

    கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆத்துமேடு டாஸ்மாக் கடை அருகே வந்த போது அங்கு சாலையோரம் நின்றிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைக்குமாறு கூறினார். மேலும் பட்டாசு வெடித்துக் கொண்டு ஆடிப்பாடி வந்தவர்களை ஓரமாக செல்லுமாறு கூறினார்.
    • போலீஸ்காரருக்கும் ஆட்டம் போட்டு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் சிலர் பட்டாசைக் கொளுத்தி போலீஸ்காரர் பாலமுருகன் மீது வீசினர். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளினர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகரில் மாரியம்மன், மதுரைவீரன் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் கரகத்தை ஆற்றில் விடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    ஆத்துமேடு டாஸ்மாக் கடை அருகே வந்த போது அங்கு சாலையோரம் நின்றிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தி வைக்குமாறு கூறினார். மேலும் பட்டாசு வெடித்துக் கொண்டு ஆடிப்பாடி வந்தவர்களை ஓரமாக செல்லுமாறு கூறினார்.

    இதில் போலீஸ்காரருக்கும் ஆட்டம் போட்டு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் பட்டாசைக் கொளுத்தி போலீஸ்காரர் பாலமுருகன் மீது வீசினர். மேலும் அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளினர்.

    இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    போலீஸ்காரரை தாக்கிய தம்மனம்பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி (30), காசாநகரைச் சேர்ந்த குமரேசன் (32), அண்ணாநகரைச் சேர்ந்த காட்டுப்பூச்சி என்ற மாரிமுத்து (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய குங்குமகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வடிவேல் (35), அய்யனார் நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) ஆகியோரை தேடி வந்தனர். இதில் ராஜபாண்டியின் செல்போன் சேனன் கோட்டை காட்டுப்பகுதியில் கிடந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இந்த தாக்குதலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தேடி வந்தனர். இன்று காலையில் வடிவேலை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்

    • கைக்குழந்தை என்பதால் தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி இமாக்குலேட்ரூபி (35). இவர்களுக்கு ஜெனோவா என்ற 2 மாத பெண் குழந்தை இருந்தது. கைக்குழந்தை என்பதால் ரோமன் மிஷன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.

    இந்த குழந்தையை நேற்று குளிக்க வைத்து அதன் உடலில் சூரிய ஒளி படும் வகையில் மொட்டை மாடியில் அவரது தாய் வைத்திருந்தார்.

    அப்போது கை தவறி குழந்தை கீழே விழுந்தது. இதனால் அலறியடித்துக்கொண்டு தனது குழந்தையை இறங்கி வந்து தூக்கிய இமாக்குலேட்ரூபி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒட்டன்சத்திரத்தில் இருந்து கே.சி.பட்டி வரை 42 கி.மீ தூரம் உள்ள சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை மேல் வாகனங்களில் செல்பவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
    • மலைச்சாலையில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலைப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ஒட்டன்சத்திரம்:

    இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட மலைப் பகுதிகளுக்கான சாலைகளில் கொண்டை ஊசி வளைவு காணலாம். வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன்னேறிச் செல்ல இயலாத காரணத்தால் கொண்டை ஊசி வளைவுகள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும். தொடர்ச்சியான இத்தகைய வளைவுகள் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படக் காரணமாக அமையலாம்.

    கொண்டை ஊசி வளைவு என்பது மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் வடிவம் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வடகாடு, பரப்பலாறு அணை, பாச்சலூர், கே.சி.பட்டி வழியாக பெருமாள்மலை சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

    இதில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கே.சி.பட்டி வரை 42 கி.மீ தூரம் உள்ள சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை மேல் வாகனங்களில் செல்பவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

    இந்த வளைவுகளில் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிரர்) பொருத்தினால் விபத்துக்கள் குறைய வாய்ப்பு உண்டு. எனவே மலைச்சாலையில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலைப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.
    • ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூரில் இருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிறு ஓடையாக வரும் நீர் ஆறாக மாறி வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு வருகிறது.

    ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 பெரிய கண்மாய்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.

    இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த அணை நிரம்பியவுடன் கரூர் அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு போக கடலில் கலக்கிறது.

    இந்நிலையில் இடையக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்று ஓரங்களில் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நங்காஞ்சியாற்றில கலப்பதால் மாசடைந்து சாக்கடை போல் மாறி பல இடங்களில்தேங்கி நிற்கிறது.

    மேலும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாய கிணறுகளின் தண்ணீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆற்றில் கழிவுநீர் மட்டும் தேங்கி நிற்கிறது.

    இது குறித்து இடையக்கோட்டை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வக்கீல் கதிரவன் கூறியதாவது:- கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் ஓரங்களில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற அந்த அந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • இறந்து கிடந்த வாலிபர் கருப்புநிற நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அவர் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
    • பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் வடமாநில தொழிலாளர்களே பெரும்பாலும் பணிபுரிந்து வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே புளியம்பட்டியில் நேற்று மாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். கருப்புநிற நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அவர் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.

    இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த மில் தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் வடமாநில தொழிலாளர்களே பெரும்பாலும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இது மட்டுமின்றி பழனியில் சாலையோர வியாபார கடைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் யாரேனும் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கீரனூர் இன்ஸ்பெக்டர் தென்னரசன், சப்-இன்ஸ்ெபக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்றும் அவரது புகைப்படத்தை வைத்து அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழா கூட்டத்ைத பயன்படுத்தி கலைக்குழுவினரிடம் ஒரு வாலிபர் திருட முயன்றார்.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். திருட முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே தென்னம்பட்டி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு உத்தரவுபடி திருவிழா நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த குழுவினர் தென்னம்பட்டி வந்தனர். திருவிழா கூட்டத்ைத பயன்படுத்தி கலைக்குழுவினரிடம் ஒரு வாலிபர் திருட முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். திருட முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் அந்த வாலிபர் பழனியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. 1 கடைக்கு 50 கிலோ வீதம் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது.
    • 10 கடைகளுக்கு மட்டுமே தக்காளி வந்துள்ளதாகவும், மற்ற கடைகளுக்கு பின்னர் வரும் என்றும் அது எப்போது என்று தெரியாது என விற்பனையாளரட்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. திண்டுக்கல் மார்க்கெட்டிலும், உழவர் சந்தையிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு மேல் விற்கப்பட்டதால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி இருந்தனர்.

    தக்காளியைத் தொடர்ந்து வெங்காயம் கிலோ ரூ.170க்கு திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனையானது. இதே போல் இஞ்சி ரூ.300, என்ற விலையிலும் அவரைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளும் ரூ.80க்கு மேல் விற்பனையானது. இதனால் சாமானிய மற்றும் ஏழை மக்கள் காய்கறிகளை வாங்கி சமைத்து உண்ண முடியாத நிலையில் இருந்தனர்.

    குறிப்பாக அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி, வெங்காயம் விலை உயர்வு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை போக்க தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

    ஆனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுேம ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனையாகவில்லை. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று ரூ.120க்கு தக்காளி விற்பனையானது. வெளிக்கடைகளில் ரூ.130 மற்றும் அதற்கு மேல் விற்கப்பட்டது.

    இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, லயன்தெரு, ராமநாதபுரம், தொந்தியாபிள்ளை சந்து, உள்ளிட்ட 10 கடைகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. 1 கடைக்கு 50 கிலோ வீதம் ஒரு கார்டுக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் தக்காளி சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

    இதனிடையே ரேசன் கடையில் தக்காளி விற்பனையாவது குறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலானோர் தங்கள் கார்டுக்கு தக்காளி வாங்கலாம் என்று ஆவலாக சென்றனர். ஆனால் 10 கடைகளுக்கு மட்டுமே தக்காளி வந்துள்ளதாகவும், மற்ற கடைகளுக்கு பின்னர் வரும் என்றும் அது எப்போது என்று தெரியாது என விற்பனையாளரட்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

    சுழற்சி முறையில் அனைத்து கடைகளுக்கும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும்.
    • தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் வாஷ் மற்றும் யுனிசெப் நிறுவனம் சார்பில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த முதல்நிலை பயிற்சியாளர்கள் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பினை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    துப்புரவு பணியாளர்களின் பணி ஈடு இணையற்றது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலையிலும், துப்புரவு பணியாளர்கள் வெளியே வந்து களத்தில் இறங்கி பணிபுரிந்தது, மிகவும் உன்னதமான செயலாகும். அப்படிப்பட்ட துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.

    தமிழ்நாட்டில் துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது. கிராமபுற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புரவு, கழிவு சுத்திகரிப்புக்கான பணிகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். ஊரக பகுதியில் 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் 2,588 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 961 தொகுதிகளில் 1,922 எண்ணிக்கை மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கான உரக்குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை பிரித்தல் மற்றும் சேகரித்து வைப்பதற்கான கொட்டகை மற்றும் மண்புழு உரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகர்புறத்திற்கு அருகாமையில் உள்ள 16 ஊராட்சிகளில் இயற்கை உரத் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கும், மக்காத குப்பைகளை வீடு வீடாக, பொது இடங்கள், சந்தை, நிறுவனங்களிலிருந்து சேகரித்து, பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத மறுசுழற்சி செய்யதக்க குப்பைகளை விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் தூய்மைக் காவலர்களுக்கான சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தூய்மை பணி மேற்கொள்வதற்கான கருவிகள் வழங்கப்படுகின்றன. 306 கிராம ஊராட்சிகளுக்கு 3,503 குப்பை வண்டிகள், 3,313 குப்பைத் தொட்டிகள், 374 மின்கலன் வண்டிகள், 76 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நெகிழிக் கழிவுகளை அரவை இயந்திரம் மூலம் சிறுசிறு துகள்களாக அரைத்து தார் சாலைகள் அமைக்கவும், நெகிழி பொருட்கள் செய்வதற்கான கட்சா பொருளாகவும் மாற்றுகின்றனர். 14 ஊராட்சி ஒன்றியங்களில் 14 நெகிழிக்கழிவு மேலாண்மை அலகுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    கழிப்பறை பராமரிப்பு, தூய்மை பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டாலும், அதனை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றி உள்ளனர். இப்பணியாளர்களின் சமூக அந்தஸ்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, யுனிசெப் ஆலோசகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×