என் மலர்
கடலூர்
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதிய பஸ் நிலையம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செம்மண்டலத்தில் ஒரு பல்லடுக்கு மேம்பாலமும் , ஜவான்ஸ் பவன் முதல் தினத்தந்தி வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் , முதுநகரில் போலீஸ் நிலையம் முதல் எம்.ஜி.ஆர் . சிலை வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் அமைத்திட வேண்டும்.
கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அரசு இடத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், விவசாயக் கல்லூரியும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகரன், கிருஷ்ணமூர்த்த , நடராஜனன், மாயவேல், இளங்கோவன் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் கோமதிநாயகம், கல்யாண்குமார், ஆறுமுகம், காசிநாதன், ரவிச்சந்திரன், கண்ணபிரான், கோபால், சண்முகம், ரங்கநாதன் பச்சையப்பன், ஜெகன், மாரியப்பன், மஞ்சினி, வீராசாமி, கண்ணன், அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் உதவி பொதுச்செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்டம் கொட்டிகோனான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பணிக்கன்குப்பத்தில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பலாப்பழ மண்டி நடத்தி வருகிறார். அதோடு குடோனும் உள்ளது.
இந்த குடோனில் இருந்து வெளியூருக்கு பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கிராம பகுதியில் அறுவடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பலாப்பழங்கள் குடோனில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு இந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பலாப்பழ மண்டிகள் உள்ளது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கம் உள்ள பலாப்பழ வியாபாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
எனினும் அங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பலாப்பழங்கள், 1 மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால் அருகில் உள்ள பலாப்பழ மண்டிகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது.
இங்கு நேற்று மாலை மது வாங்க மதுவானை மேடு பகுதியைச் சேர்ந்த ரகுபதி மற்றும் இளையராஜா இருவரும் தனது மோட்டார் சைக்கிளில் வந்தனர். மேலும் அம்மன் குப்பம் பகுதியை சேர்ந்த தர்மசாஸ்தா என்பவரும் தனது மினி லாரியில் மது வாங்க வந்தார்.
அப்போது டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ரகுபதி மற்றும் மினி லாரியில் வந்த தர்மசாஸ்தா இருவரது வாகனங்களும் உரசுவது போல் சென்றதால் அவர்களுக்கிடையே வாய்த்த கராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் தர்மசாஸ்தா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரகுபதியை அவருக்கு சொந்தமான கொட்டகைக்கு சென்று தாக்கியுள்ளனர். இதை பார்த்த ரகுபதியின் உறவினர்கள் தர்மசாஸ்தாவை தாக்கினர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் தர்ம சாஸ்தாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்த தர்மசாஸ்தாவின் உறவினர்கள் விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலை அருகே அம்மன் குப்பம் பகுதியில் சாலை மறியல் செய்ய முயற்சித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி. சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்ய முயற்சித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சேமக்கோட்டை கண்ணகி புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி சீதா (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக சீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவருக்கு பேய் பிடித்ததாக கூறி உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தங்க வைத்தனர்.
நேற்று அங்கு இருந்தபோது சீதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் வழியிலேயே சீதா பரிதாபமாக இறந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சீதாவின் பெற்றோர் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்தனர். புகார் மனுவில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிந்து சீதா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்த உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கீழ் பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகள் அஞ்சலி (வயது 12). அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை ஆணையம்பேட்டை பெருமாள் ஏரி பாசன வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:
தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு உணவு வாணிப கழக குடோனில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் ரேஷன் உணவு பொருட்கள் கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறுப்பேற்ற பின்பு சிவில் சப்ளை பிரிவில் தற்போது 4 சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 286 குடோன்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்கூரை, தரை, ஓய்வு அறைகள் கட்ட ரூ. 90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டடிம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும். இதுவரை, 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இறந்த 12 லட்சம்பேரின் பெயர்கள், ரேஷன் அட்டையில் இருந்துநீக்கப்பட்டுள்ளன.போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டததால், அரசின் நிதி சேமிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில், 2021 அக்டோபர் 1 முதல், இம்மாதம் 20ம் தேதி வரை, 353 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் நெல்லை,விற்கின்றனர். நேரடி தி.மு.க., உற்பத்தி செய்த கொள்முதல் நிலையங்களில்ஆட்சிக்கு வந்த பின், ‘ஆன்லைன்’ வழியாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டியல் எழுத்தர்கள், விவசாயிகளுக்கு ‘டோக்கன்’ அளிக்கின்றனர். அதில்,நாள்,தேதி, எந்த நேரத்திற்கு விவசாயிகள் வர வேண்டும் என்பது இருக்கும்.
அந்த நேரத்தில் விவசாயிகள் வருகின்றனர்.நெல் வாங்கியதும், எந்தெந்த விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும் என, மண்டல மேலாளர், தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்தால், 2 நாட்களில் பணம் வழங்கப்படுகிறது. சில கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் பெறுவதாக தகவல் வருகிறது. இதை கட்டுப்படுத்த, அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் உள்ள மனுக்கள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.
இல்லையெனில், உணவுத்துறை செயலர் அல்லது மேலாண் இயக்கு னருக்கு அனுப்பினால், அவர்கள் நடவடிக்கை எடுப்பர். நேரடி கொள்முதல் நிலையங்களில் தவறுசெய்த, 150க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்று, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில், 825 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.30. லட்சத்து 84 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், 93 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் இயங்கும் 29 தொண்டு நிறுவனங்களுக்கு உணவூட்டு மான்யம் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மான்யமாக ரூ.2 கோடி 52 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
7648 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.14 கோடி 94 லட்சத்து 61 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 590 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடி 10 லட்சம் 90 ஆயிரம் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமண உதவித்தொகையாக 16 மாற்றுத்திறனாளிகளுக்கு 7 லட்சம் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு 14 இலட்சம் வங்கி கடன் மானியமாக 61 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 550 வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு ரூ.52 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புவனகிரி:
புவனகிரி குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ள மழை காலங்களில் வீடுகளை சுற்றி நீர் தேங்கி உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக ரூ. 85 லட்சம் செலவில் வடிகால் கட்டும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அங்குள்ள அதிகாரிகளிடம் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தர விட்டார்.
இதேபோல் மேலமணக்குடி செல்லும் நெடுஞ்சாலை வளைவில் அதிகளவு விபத்துகள் நடைபெற்று வருகிறது இதனை தவிர்க்க சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை கூறினார்.
சாத்தப்பாடியில் தாழ்வான பாலம் உள்ளது. மழைகாலங்களில் இந்த பாலத்தை பஸ்கள் ஏதும் கடந்து செல்ல முடியாது. இதனை பல்வேறு அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் ரூ.3 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி 3ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது.
இதனை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுக்கு மழை காலத்தில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் ஜெகன் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






