என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் புதிய பஸ் நிலைய இடத்தை மாற்றுவதை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றுவது கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கழக துணை பொது செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம், அக்ரி முருகேசன் , மோகன், அய்யனார், ஞானமூர்த்தி, கோமுகி மணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். 

    கடலூர் அருகே லாரி மோதி 3 வயது குழந்தை உள்பட 2 பேர் படுகாயமடைந்தது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வன்னியர் பாளையம் சேர்ந்தவர் சுகாசினி (வயது 32). இவரும் இவரது தாயார் அறிவழகி (வயது 61), மகள் தியா (வயது 3) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் பால் ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அறிவழகி மற்றும் 3  வயது குழந்தை தியா ஆகியோர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சபீர்முகை தீன். அவரது மகன் ரியாஸ் (வயது 24). பட்டதாரி வாலிபர். இவருக்கு குடிபழக்கம் உண்டு.

    இவர் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். எனவே பெற்றோர் ரியாசை கண்டித்தனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ரியாஸ் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதனால் மனமுடைந்த ரியாஸ் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது நண்பர்களுக்கு தெரிவித்தனர்.

    அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாஸ் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து உடனடியாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்தனர். தூக்கில் தொங்கிய ரியாசை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தது தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே குடிகாடு பகுதியில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தை சேர்ந்த கணபதி என்றும் செங்கல்பட்டு பகுதியில் லாரி ஓட்டுனராக வேலைக்கு சென்றது தெரியவந்தது.

    ஆனால் நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து உள்ளார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே வீட்டில் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கடலூர்:

    கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா சங்கர். இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது வீட்டில் செல்லமாக ஜாக்கி என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த நாயை கடந்த 2 வருடங்களாக வளர்த்து வருகிறார். 2 வயதான ஜாக்கிக்கு தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் வளைகாப்பு செய்ய விரும்பிய ஷங்கர் ஜீவா குடும்பத்தினர் தங்களது நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தனது செல்லப் பிராணிக்கு சீர்வரிசைகள் வைத்தும் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவித்து மாலை அணிவித்தனர். 

    பின்னர் பழவகைகள் பலகாரங்களை வைத்து ஒவ்வொரு பெண்களும் குங்குமம் இட்டு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 
    வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு பாசார் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், (வயது 58) என்பவர் சிறுபாக்கம் அடுத்த அடரி துணை மின் நிலையத்தில் கட்டுப்பாடு பிரிவு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், இரவு பணியிலிருந்த போது, இரவு 11:30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் டைல்ஸ் கடை அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
    சிதம்பரம்:

    சேலம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). இவர் அந்த பகுதியில் டைல்ஸ் மற்றும் கிரானைட் கடை வைத்துள்ளார். இவரது மாமனார் துரைசாமி. இவர் மயிலாடுதுறை அருகே மாதானம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டுக்கு டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் செல்வக்குமார் மாதானம் நோக்கி நேற்று இரவு புறப்பட்டார். இந்த லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் நகுலேந்திரன் (28) என்பவர் ஓட்டினார். லாரியில் செல்வக்குமாரின் மனைவியின் தங்கை கற்பகவள்ளி (27), செல்வக்குமாரின் மகன் மிதுன் (4) ஆகியோர் சென்றனர். மினி லாரியின் பின்புறம் தொழிலாளர்கள் 4 பேர் அமர்ந்து இருந்தனர்.

    இந்தமினி லாரி இன்று அதிகாலை சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கூத்தங்கோவில் சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழி சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற லாரி மீது டைல்ஸ் ஏற்றி சென்ற மினிலாரி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மினிலாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் செல்வக்குமார் அவரது மகன் மிதுன், கற்பகவள்ளி, லாரி டிரைவர் நகுலேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் டைல்ஸ் ஏற்றிவந்த லாரியின் பின்புறம் அமர்ந்திருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் வலியால் அலறினர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது-

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது.

    எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், செம்மண்டலம், கடலூர், அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பிரம்ம உற்சவ விழாவில் சிறிய அளவிலான தேரில் சாமி எழந்தருளி தேர்த்திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தது. 

    தற்போது வருகிற ஜூன் 1-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று காலை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், கோவில் செயல் அலுவலர் மகாதேவி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் வாசு, கோவில் கணக்கர் சரவணன், கவுன்சிலர்கள் செல்வகுமார், மலையான் மற்றும் பலர் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள தேர் வெள்ளோட்டத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்வையிட்டனர்.

    பின்னர் முக்கிய மாட வீதியில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், குண்டும், குழியுமான சாலைகள் இருக்கும் பட்சத்தில் சரி செய்யும் படியும், மின் பாதைகள் ஏதேனும் தாழ்வாக செல்கிறதா? பொதுமக்கள் அதிகளவில் திரண்டு தேர் வெள்ளோட்டத்திற்கு வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.
    பெண்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளோம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் ஒன்றிய நகர திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டி தெருவில் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சண்முகம், அவைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்கே. பன்னீர்செல்வம் மற்றும் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ஜெயராஜ், தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    இதில் ஒன்றிய துணை செயலாளர் கே.டி பாலமணிகண்டன், ஒன்றிய குழுத்தலைவர் சகதியா பர்வீன் நிஜார், பூக்கடை செந்தில், நகரபொருளாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளோம் . பெண்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளித்ததால் இன்று பெரும்பாலானோர் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளில் பெண்கள் பாதி உள்ளனர்.

    கடந்த காலங்களில் பெண்கள் மணவறைக்கு பின்னால் இருந்தனர். ஆனால் தற்போது மணவறைக்கு முன்னால் உள்ளனர். முதலமைச்சரின் நிர்வாகத்திறன் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன்களை அடைத்து முன்னேறி வருகிறோம். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை அளிப்போம் என உறுதியளித்தார். இதுவரை தமிழக அரசு இந்த ஓராண்டில் 22,000 கோடி அளவிற்கு சலுகைகளையும் தள்ளுபடிகளை பொது மக்களுக்கு வழங்கி உள்ளோம் என தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் லால்பேட்டை அருகே கலைஞரின் உழவர்சந்தை விரைவில் 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் முடித்துவிட்டு வேலை பார்க்கும் போது தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என பேசியவர் இப்போது தமிழகத்தின் நலன்களைப் பற்றி பேசுகிறார்.

    தமிழக முதல்வருக்கு 72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என சவால் விடுகிறார். தமிழக முதலமைச்சர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி தான் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அண்ணாமலையின் சவால் முதல்வருக்கு சாதாரணம். கரூரை தாண்டி அண்ணாமலையால் வெளியில் வர முடியுமா? முதலில் அதை செய்யட்டும். கரூரில் இருந்து அவருடைய மக்களையும் சேர்த்து அழைத்துவந்து வரட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என சவால் விட்டார். தமிழகத்தில் பாஜக மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் கூறினார். இந்திய பிரதமராக இருப்பதன் காரணமாகவே அண்ணாமலை இதுபோன்று சவால் விட்டு வருகிறார். இந்த சவால்களை எல்லாம் திமுக பார்த்து வளர்ந்த கட்சி என கூறினார் . திமுகவிற்கு மிரட்டவும் தெரியும். அண்ணாமலை சவால்களை முதலமைச்சர் தெளிவாக சந்திப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் கஞ்சா, போதை தடுப்பு விழிப்புணர்வு , வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் கஞ்சா, போதை தடுப்பு விழிப்புணர்வு , வாகன விபத்தை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா அய்யந்தூர் கிராமம் கோவில் திருவிழாவில் இரவு நாடகம் நடைபெற்றது. 

    நாடக மேடையில் அப்பகுதி கிராம பொதுமக்கள் , இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கமாக நடந்து கொள்வது, சாதி மோதல் ஈடுபட கூடாது அதனால் வாழ்க்கையின் நிலைமையே மாறிவிடும் , மாணவர்கள் பேருந்து படியில் பயணம் கூடாது, சட்டவிரோத செயல்கள், சமூக விரோதிகள் பற்றி தகவல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என நாடக மேடையை விழிப்புணர்வு மேடையாக பயன்படுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    கடலூர் அருகே மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    வங்கி எழுத்தர் பணிக்கு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து திராவிட கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாணவர் கழகம் மண்டல செயலாளர் பண்பாளன், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், இளைஞரணி செயலாளர் வேலு, மகளிர் அணி பாசறை தலைவர் தமிழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை அற்றினார். இதில் நிர்வாகிகள் தாமோதரன், தண்டபாணி, சிவகுமார், மணிவேல், ரமா பிரபா ஜோசப், தமிழன்பன், இராவணன், பெரியார் செல்வன், முனியம்மாள், எழிலேந்தி, இராமநாதன், மாணிக்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன முடிவில் நகர செயலாளர் சின்னதுரை நன்றி கூறினார்.
    ×