என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் ராமன் காணவில்லை.

    இதனைத்தொடர்ந்து அனிதா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் தொங்கிய பிணத்தை பார்த்த போது அது மாயமான ராமன் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து ராமனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை அரிந்ததும் ராமனின் மனைவி அனிதா மற்றும் அண்ணன் தேவா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய ராமனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அவரது உடல் அழுகியநிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    பின்பு தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் அங்கேயே ராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ராமனுக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவரை யாராவது கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்.எல்.சி. தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பழமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). என்.எல்.சி. தொழிலாளி இவர் சிதம்பரத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் .

    பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 அரை பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகள், மற்றும் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் சில பொருட்களை திருடி கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த நகை, பட்டு புடவைகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து ஊ.மங்கலம் போலீசில் முருகன் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை- பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #Veeranamlake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை யில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.



    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 774 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவான 45.50 அடியாக உள்ளது.

    தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதையொட்டி பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக குறைக்கப்பட்டது. இன்றும் அதேபோல் தொடர்ந்து 45.50 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் திறப்பு

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 676 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சேத்தியாதோப்பு அணைகட்டுக்கு இன்று 1100 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய விட 424 கன அடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #Veeranamlake


    மந்தாரக்குப்பம் அருகே இளம்பெண் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
    மந்தாரக்குப்பம்:

    மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூரை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 30), தொழிலாளி. இவருக்கும், மேல்புவன கிரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகன்ராஜ் அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு, மேல்புவனகிரியை சேர்ந்த காயத்ரி(22) என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆனது முதல் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோகன்ராஜிக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோகன்ராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்த காயத்ரி சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காயத்ரியின் தாய் ஜோஸ்பின்(42) மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகளை மோகன்ராஜ் அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அவரது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. அதனால் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பண்ருட்டியில் 2-வது நாளாக 100 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செட்டிப்பட்டறை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் 2-வது பெரிய ஏரியாகும்.

    இந்த ஏரியில் கடந்த 30 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. மேலும் கரும்பு, நெல் போன்ற விவசாய பயிர்கள் பயிரிடும் இடங்களாகவும் மாற்றம் செய்து பயிரிடப்பட்டு இருந்தன.

    இந்த ஆக்கிரமிப்பால் செட்டிப்பட்டறை ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுநல அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் 3 பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை ஆக்கிரமிப்பு பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் தொடர்ந்தனர்.

    இன்று 100 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டன. மேலும் கரும்பு, நெல் பயிர்களும் அழிக்கப்பட்டன.

    இதையொட்டி அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    விருத்தாசலம் அருகே ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). நெய்வேலி என்.எல்.சி. ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது சொந்த கிராமமான ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது வழக்கம். மற்ற நாட்கள் அந்த வீட்டை பூட்டி விட்டு நெய்வேலி வந்து விடுவார்.

    நேற்று மாலை ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அங்குள்ள வேலைகளை முடித்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு இரவு நெய்வேலி வந்து விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முருகனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், பட்டுப்புடவைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி., குத்துவிளக்கு உள்பட பல பொருட்களை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கொள்ளையர் கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள எம்.பரூர் கிராமத்திலும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டின் பெட்டியில் இருந்த 10 பவுன் நகை, பட்டுப்புடவைகளை கொள்ளையடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம்.

    இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து அதே பகுதியில் உள்ள மருதமுத்து என்பவரின் வீட்டின் முன்பு சென்றனர். அங்கு மருதமுத்து தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தார்.

    இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிராம் தங்க நகையை கொள்ளையடித்தனர். அங்கு வேறு எந்த பொருட்களும் சிக்கவில்லை. 2 கிராம் தங்க நகையோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர் மருதமுத்து வீட்டின் அருகே உள்ள வினோத்குமார் என்பவரது வீட்டையும், நயினார் தெருவில் உள்ள சக்திவேல் என்பவரது வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஏதாவது பொருட்கள் உள்ளதா? என பார்த்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதனை தொடர்ந்து தெற்குத்தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டிலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதேபோல் வெங்கடேசன் என்பவரது வீட்டுக்கும் கொள்ளையர்கள் சென்றனர். அவரின் வீட்டு பூட்டை உடைக்க முடிய வில்லை. இதனால் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது. அதனால் அதனை அங்கேயே போட்டு விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்ற னர்.

    கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான நகையை மர்மநபர் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள திருவெம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி சசிகலா (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம வாலிபர் ஒருவர் சசிகலாவின் அருகே வந்தார். அவர் உனது நகையை கழற்றி கொடு என்று கூறி கத்தியை காட்டி சசிகலாவை மிரட்டினார்.

    ஆனால், அவர் நகையை கழற்றி கொடுக்க மறுத்தார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம வாலிபர் திடீரென சசிகலாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.

    அதிர்ச்சி அடைந்த சசிகலா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டவாறே அந்த வாலிபரை விரட்டி சென்றார். ஆனால், அதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து மங்களம் பேட்டை போலீசில் சசிகலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 550 கனஅடி அதிகமாகும். தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவான 45.50 அடியாக உள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதையொட்டி பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக குறைக்கப்பட்டது. இன்றும் அதேபோல் தொடர்ந்து 45.50 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 676 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சுலோக்சனா (வயது 22). இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    விடுமுறையையொட்டி தனது சொந்த ஊரான மேலராதாம்பூருக்கு சுலோக்சனா வந்தார். பின்னர் கடைக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் சுலோக்சனாவை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் சுலோக்சனாவின் தந்தை செந்தில்குமார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குபதிவு செய்து மாயமான சுலோக்சனாவை தேடி வருகிறார்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டின் கதவை திறந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் சகானந்தா தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 53). இவர் சிதம்பரம் அருகே பரிவிளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவுக்குமேல் வைத்து விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இதையறிந்த வாலிபர் அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தான். பின்பு அவன் வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

    இந்தநிலையில் நேற்று மாலை வெளியூர் சென்றிருந்த சுந்தர்ராஜன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன. உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இந்த சம்பவம் குறித்து அவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் மகன் சரண்ராஜ் (வயது 28) என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சரண்ராஜ் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். அதனைத்தொடர்ந்து போலீசார் சரண்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட 16 பவுன் நகைகளை மீட்டனர்.
    பண்ருட்டி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகிமைதாஸ்(வயது 52). இவர் பண்ருட்டி வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். இவரது மகன் மகேஸ்(33). லாரி டிரைவர்.

    அதேபகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற கிருஷ்ணராஜ்(40). இவரும் லாரி டிரைவர். மகேசும், கிருஷ்ணராஜிம் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் மகேஷ் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின்னர் அவரும் கிருஷ்ணராஜிம் அங்குள்ள கறிக்கடை முன்பு அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மதுகுடித்த மகேசுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ் பரிதாபமாக இறந்தார்.

    அதேபோல் வீட்டுக்கு சென்ற கிருஷ்ணராஜிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் குடித்த மதுவில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. மகேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுவில் யாரோ? வி‌ஷம் கலந்துள்ளது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மகேஷ் உறவினர்கள் மற்றும் கிருஷ்ண ராஜ் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மகேசுக்கு கலையரசி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    அதேபோல் கிருஷ்ண ராஜிக்கு கயல்(30). என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    மதுவில் வி‌ஷம் கலந்து கொடுத்து காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த ஆலடி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடியப்பட்டு கிராமத்தில் இருந்து லாரியில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியின் உரிமையாளர் பாலமுருகன் (வயது 30), டிரைவர் பாலகிருஷ்ணன் (26) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

    பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்து கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×