search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கடத்தி கொலை
    X

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கடத்தி கொலை

    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் ராமன் காணவில்லை.

    இதனைத்தொடர்ந்து அனிதா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் தொங்கிய பிணத்தை பார்த்த போது அது மாயமான ராமன் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து ராமனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை அரிந்ததும் ராமனின் மனைவி அனிதா மற்றும் அண்ணன் தேவா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய ராமனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அவரது உடல் அழுகியநிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    பின்பு தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் அங்கேயே ராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ராமனுக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவரை யாராவது கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×