என் மலர்
கடலூர்
சென்னை அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கும், புதுவைக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பிறகு மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறு மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது.
சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில் படுத்து தூங்கும் அளவுக்கும், உட்கார்ந்து இருக்கும் அளவுக்கும் இடம் இருக்கும்.
இந்த அறையில் டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை உள்ளிட்ட வசதிகள் உலகத்தரத்தில் இடம்பெற்று இருக்கும்.
ரெயில் பயணிகள் 12 மணி நேரம் தங்குவதற்கு இந்த அறையில் ரூ.999 கட்டணமாகும். 24 மணி நேரத்திற்கு ரூ.1,999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த அறைகளில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்டிரலில் இந்த ‘போட்’ ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியை அடுத்த வாணாதி ராயபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக இந்த பள்ளி கட்டிடத்தின் சுற்றுவர் மழையில் நனைந்து சேதமடைந்தது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. வாணாதிபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதன் காரணமாக அந்த பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின்காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்று வாணாதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.
கனமழைக்கு பள்ளி கட்டிடம் இடிந்த தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மேலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 3 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் மோதி சென்றன.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும் கடலூர் மாவட்டத்துக்கு கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது.
அதன் பின்னர் லேசாக மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே பொதுமக்கள் குடை பிடித்த படியும் வாகன ஓட்டிகள் சிரமத்துடனும் வாகனங்களில் சென்று வருவதையும் காண முடிந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்து இருந்த மழைநீர் தற்போது தான் வடிந்து பொது மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பரபரப்பாக காணப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் புகுந்த ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி அணிந்து வந்த அந்த நபர், 2 முககவசம் அணிந்து இரும்பு கம்பியால் உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் (வயது35) என்பது தெரிந்தது. பி.இ படித்துள்ள சிவச்சந்திரன் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார்.
இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில் தன்னுடன் வேலைபார்த்தவரை 2-வதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.
வேலை இழப்பு மற்றும் செலவிற்கு பணம் இல்லாதது, மனைவி பிரிந்து சென்றது போன்ற காரணங்களினால் மனம் உடைந்து காணப்பட்ட சிவச்சந்திரன் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்தப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்தவற்கு இந்த ஆற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
தற்போது அந்த பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அந்த பகுதி பொதுமக்கள் இறந்த சங்கரனின் உடலை சுமந்தவாறு ஆற்றில் நீந்தி மறுகரைக்கு சென்று மயானத்தில் சங்கரனின் உடலை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு வெள்ளாற்றை கடந்து தான் மயானத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்களுக்கு வெள்ளாற்றை கடந்து செல்ல இந்த பகுதியில் பாலம் அமைத்து தரவேண்டும். இல்லை என்றால் எங்கள் பகுதியிலேயே மயானத்துக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்மந்தபட்டதுறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் வெள்ளாற்றில் இறங்கி நீந்தியபடி இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்து வருகிறோம்.
இதே நிலை நீடித்தால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை:
கொரோனா கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி தொடர்ந்து இருந்து வருகிறது.
நாட்டில் தற்போது நோய் தொற்று குறைந்து இருந்தாலும் கட்டுப்பாடுகளை முற்றிலும் விலக்கவில்லை. எனவே முகக்கவசம் தொடர்ந்துஅணிய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பலர் இப்போது முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். கொரோனா பயம் இல்லாததால் முகக்கவசத்தை தூக்கி எறிந்து விட்டு சாதாரணமாக நடமாடுகிறார்கள்.
இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்பவர்கள் போலீசார் பிடிப்பார்கள் என்பதால் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள். மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பஸ்கள், ரெயில்களில் பொதுமக்களில் பலர் முகக்கவசம் இல்லாமலே காணப்படுகிறார்கள்.
அப்படி முகக்கவசம் அணிந்திருந்தாலும் அது முழுமையாக மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைப்பது போல் அணிவதில்லை. பெரும்பாலானோர் கழுத்தில் தொங்கப்போட்டு செல்கிறார்கள்.
இதற்கு முன்பு முகக்கவசம் அணியாதவர்களை பலர் கடைகளில் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது கடைக்காரர்கள் கண்டு கொள்வதில்லை. சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி இதையெல்லாம் கண்காணித்து வந்தனர். ஆனால் இப்போது இந்த கண்காணிப்பு முடங்கி விட்டதால் மக்கள் மிகவும் அலட்சியமாக காணப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்த வரையில் வடசென்னை பகுதியில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலேயே இருக்கிறார்கள். அந்த பகுதியில் நெருக்கடியான கடைவீதிகள் இருக்கின்றன. கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
முகக்கவசம் அணியாமல் செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, “கொரோனா பணிகளை தீவிரமாக கவனித்து வந்த நிலையில் தற்போது வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனவே அதில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். எங்களது குழுக்கள் தற்போது வெள்ளப்பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் கொரேனா விவகாரங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தொற்றுநோய் தடுப்பு துணை இயக்குனர் பிரபா தீப் கவுர் கூறும்போது, “தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி மக்களிடம் முகக்கவசம் அணிந்திருப்பது குறைந்திருக்கிறது. வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது கண்டிப்பாக நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
யார் தடுப்பூசி போட்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியாது. எனவே முகக்கவசம் அணிந்தால் தான் நம்மை காப்பாற்றி கொள்ள முடியும் குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.
பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, “ தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேல் உள்ள தடுப்பூசி போடாதவர்கள், ஒரு ஊசி மட்டும் போட்டவர்கள் மத்தியில் நோய் பரவி உயிரிழப்பது அதிகமாக இருக்கிறது. அதேபோல இணை நோய் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதால் பல்வேறு சுவாச நோய்களை தடுக்க முடியும்” என்று கூறினார்.
மற்றொரு சுகாதார அதிகாரி கூறும்போது, “முகக்கவசம் அணிவது குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இதை கட்டாயமாக அணிவதுடன் கொரோனா பாதுகாப்பு முறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது” என்று கூறினார்.
நகரங்களை பொறுத்த வரையில் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கணக்கின் படி குடிசைப்பகுதிகளில் 40 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 48 சதவீதம் பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தெரிய வந்துள்ளது.
இதையும் படியுங்கள்...காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு 21-ந்தேதி வரை விடுமுறை







