என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மாற்றம் உருவாகிறது.

    கடலூர் மாவட்டத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்ட நிலையில் ஓரிரு நாட்களில் இரவு முழுவதும் மழை பெய்து வந்தது. இருந்தபோதிலும் இதுதவிர ஓரிரு நாட்களில் காலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

    இந்த பருவநிலை மாற்றத்தால் காலையில் கடும் பனிப்பொழிவு மதிய நேரத்தில் கடும் வெயில் மற்றும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்து வருகிறது. இது மாறி மாறி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இன்று அதிகாலை முதலே கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, வான்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், வெள்ளக்கரை, பில்லாலி தொட்டி, திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், கோண்டூர், பெரியகங்கனாங்குப்பம், நகர் பகுதியான கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், வண்டி பாளையம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    இந்த பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளின் எதிரே வரும் வாகனங்கள் எது என்று தெரியாமல் குழம்பினர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

    இந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். வருகிற 15-ந் தேதி பங்குனி மாதம் தொடங்குகிறது. அன்று முதல் சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும்.

    கடலூர் மாநகராட்சியிலும் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை கடலூர் லாரன்ஸ் சாலையில் காலை முதலே இந்த போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் பல்வேறு பகுதிகளில் கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

    அதன்படி கடலூர் மாநகராட்சியிலும் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை கடலூர் லாரன்ஸ் சாலையில் காலை முதலே இந்த போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பஸ், ஆட்டோ மற்றும் தனது ஸ்கூட்டரில் செல்வதுண்டு. இருந்த போதிலும் காலை 7 மணி முதலே லாரி, டாரஸ். கண்டெய்டனர் போன்ற பெரிய வாகனங்களில் மணல், ஜல்லி மற்றும் பிற இதர பொருட்களை கொண்டு செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் செல்வதால் அவர்களுக்கு இடையூறாக இந்த கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பிற வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகின்றனர்.

    இவர்களுக்கு இடையூறாக செல்வதால் மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடிவதில்லை. மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பலர் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் இந்த போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகின்றனர்.

    பெரிய அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக ஏற்பட்டு சாலைகள் சேதமாகிறது. மேலும் இந்த வாகனங்களில் மணல், ஜல்லி போன்றவை கொண்டு செல்வதால் அதிலிருந்து வெளியேறும் தூசி புகை வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி படுகின்றனர்.

    இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கண்களில் தூசி புகை படுவதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை கன ரக வாகனங்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் அப்படி இல்லை. விதிகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால்தான் காலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி தக்க தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் பதவி விலகினார்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றன.

    கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லீம்லீக், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை தலா 1 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி தி.மு.க. உத்தரவிட்டது. வி.சி.க.சார்பில் கிரிஜா திருமாறன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

    இதையடுத்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தலைவர் பதவியை இழந்த வி.சி.க.வின் கிரிஜாதிருமாறன் துணை தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார். ஆனால் துணை தலைவர் பதவியும் தி.மு.க.வை சேர்ந்த ஜெயபிரபா மணிவண்ணன் வசம் சென்றது. இதனால் வி.சி.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் நெல்லிக்குப்பம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரான சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெற்றிபெற்ற தி.மு.க. நிர்வாகிகளிடம் பதவி விலகசொல்லி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணை தலைவர் பதவியை மட்டும் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ. கணேசன் தலைமையில் நகராட்சி தலைவராக வெற்றிபெற்ற ஜெயந்தி, அவரது கணவர் ராதா கிருஷ்ணன், துணை தலைவராக வெற்றிபெற்ற ஜெய பிரபா, அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோர் நேற்று சென்னை சென்றனர்.

    விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து உறுதி அளித்தனர். திருமாவளவனும் இந்த முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து அனைவருக்கும் சால்வை அணிவித்தார்.

    இன்று நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் ஜெயபிரபா மணிவண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்று தெரிகிறது. இதனால் மீண்டும் நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சியின் வசம் செல்கிறது.
    குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் குடும்பத்துடன் விஷ மருந்து பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திட்டக்குடியை சேர்ந்த கவிதா, அவரது தாயார் எழிலரசி, மகன் முத்து வெங்கட், மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் நேரில் வந்தனர்.

    பின்னர் மனு அளிப்பது போல் உள்ளே சென்றபோது போலீசார் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது பூச்சிமருந்து பாட்டிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் விவசாய நிலத்திற்கு வரும் குடிநீர் குழாயை 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி விட்டார். இதுசம்பந்தமாக மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் மீண்டும் குழாய் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது ‌.
    நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், மேல்பட்டாம்பாக்கம், பாலூர், பண்ருட்டி, தூக்கனாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.
    கடலூர்:

    தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் இன்று வரை டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது.

    கடலூரில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை மீனவ கிராமங்களின் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

    கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ஆள் உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்தன. அலைகளின் சீற்றத்தால் தடுப்புக்காக கொட்டப்பட்டிருந்த கற்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டன.

    நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மாலை முதல் இன்று அதிகாலைவரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் லேசாக தூறிக்கொண்டே இருந்தது.

    நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், மேல்பட்டாம்பாக்கம், பாலூர், பண்ருட்டி, தூக்கனாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

    இம்மாதம் தொடக்கம் முதலே கடலூர் மாவட்டம் முழுவதிலுமே அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவும், நண்பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலுமாக சீதோஷ்ணநிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தொடரும் சாரல் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
    திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் மிக முக்கியமாக அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் இணைந்து திருச்சியில் நடைபெறும் மாநாடு சம்பந்தமாக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே 5-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள வணிகர் தின மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக நலிவடைந்த நிலையில் இந்த மாநாடு தீர்வு காணும் வகையில் அமையும்.

    மேலும் அந்த மாநாட்டு மேடையில் முதலமைச்சர் வணிகர்களின் பல்வேறு பாதிப்புகளுக்கு தீர்வுகள் அறிவிப்பார் என லட்சக்கணக்கான வணிகர்கள் நெஞ்சில் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆங்கிலேயர்கள் ஆண்ட பிறகு தற்போது வரை கடலூர் மாவட்டம் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை வருவதற்கு அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் துறை முகத்தில் வேகமாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொழில் வளம் மற்றும் தொழில் வளர்ச்சி அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார்.

    மேலும் மிக முக்கியமாக கருதப்படும் மார்க்கெட்களில் உள்ள கடைகள் மிகக் குறைந்த அளவில் கட்டிடம் உள்ள நிலையில் அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் கட்டிடத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும். மேலும் வணிகர்களுக்கு வங்கி மூலம் குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்க வேண்டும்.

    திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் மிக முக்கியமாக அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வணிகர் சங்க நிர்வாகிகளை இணைக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை உள்ள கடைகளுக்கு சீரான வாடகையை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். வணிக வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் ஜி.எஸ்.டி இல்லாத வணிகர்களையும் இணைத்து வருகிறோம். மேலும் இதில் சேர்மன் கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது உற்பத்தியாளர்கள் விளைவிக்கும் சாமானியர்களுக்கு ஒரு விலையும், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஒரு விலையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்வதை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பல லட்சம் வியாபாரிகள் நலிவடையும் நிலை ஏற்படும். தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் முதல்-அமைச்சர் சீரிய முயற்சியால் தற்போது மஞ்சப்பை எடுத்துச் செல்ல நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் நூல் மற்றும் பொருட்களுக்கு வரிகளில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையை உடனடியாக சீரமைத்து அனைவரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மண்டலத் தலைவர் சண்முகம், நகர தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், ஆனந்த பவன் குரூப்ஸ் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன், நகர பொருளாளர் தேவி முருகன், மாவட்ட இணைச் செயலாளர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடலூர்:

    வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

    இதனால் நேற்று முதல் நாளை (7-ந் தேதி) வரை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

    அதன்படி கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்ததின்பேரில் கடலூர் மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது கிராமங்களிலேயே முடங்கினர். 2-வது நாளாக இன்றும் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் தங்களது படகுகளை கடலூர் முதுநகர் துறைமுக பகுதியில் பாதுகாப்பாக அவர்கள் நிறுத்தி உள்ளனர்.

    சிதம்பரம் அருகே மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (வயது 32), இவரது கணவர் ரவிச்சந்திரன். 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரேமா சிவாயத்தில் உள்ள தனது தாய் அஞ்சம்மாள் வீட்டில் தங்கியிருந்தார்.

    மளிகை பொருட்கள் வாங்கி வருவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற பிரேமா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பிரேமா கிடைக்காத நிலையில் இதுகுறித்து சிதம்பரம் சரக போலீசில் அஞ்சம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோல சிவகங்கை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் பிரீத்தி (வயது 19). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கடந்த 28-ந் தேதி முதல் பிரீத்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சங்கர் ஊரிலிருந்து புறப்பட்டு சிதம்பரம் வந்து பார்த்தபோது பிரீத்தியை காணவில்லை. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் சங்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரீத்தியை தேடி வருகின்றனர்.

    பெண்ணாடம் அருகே ஆங்கில வைத்தியம் பார்த்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி பகுதியில் சித்த மருத்துவம் படித்து விட்டு ஒரு வாலிபர் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி ஆங்கில வைத்தியம் பார்ப்பதாக திட்டக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் செல்வேந்திரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அதிகாரிகள் குழுவினர் முருகன்குடிக்கு சென்றனர். அங்கு மொத்த மருந்து விற்பனை கடை ஒன்றில் கார்த்திகேயன் என்ற வாலிபர் நோயாளிகளுக்கு ஊசி, மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

    அவரிடம் விசாரித்தபோது, சித்த மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவமும் மட்டுமே படித்த அவர் தனது மனைவியின் பெயரில் நடத்தும் மருந்து கடையில் விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரிகள் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை, பருவ காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் 3 முறை வீராணம் ஏரி நிரம்பியது.

    தற்போது கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. அதோடு கோடை வெயிலும் தொடங்கியதால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை.

    ஆனால் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி 1,068 கனஅடி நீர் வருகிறது. நேற்று 42.70 ஆக இருந்த நீர்மட்டம் இன்று 42.75 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகர குடிநீருக்காக 65 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. நேற்று 63 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் ஊ.அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

    கம்மாபுரம் ஒன்றியம் ஊ.அகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறேன். எனது ஊராட்சிக்குட்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக எனது கணவரும், துப்புரவு பணியாளராக நானும் பணியாற்றினேன்.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக நான் போட்டியிட்ட போது எங்களை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். இந்த நிலையில் அதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக உள்ள சுந்தரராஜன் அவருக்கு ஆதரவான ஒருவரை என்னை எதிர்த்து போட்டியிட்ட வைத்ததில் தோல்வி அடைந்தார்.

    இந்த முன்விரோத காரணத்தினால் என்னை கேவலமாக திட்டி வருகிறார். மேலும் ஊராட்சி செயலாளர் சுந்தரராஜன் பணியாளர்களை அரசு பணியை சரிவர செய்ய விடாமல் தடுத்து வருகிறார். மேலும் கடந்த 2-ந் தேதி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர் வேலைக்கு வரவில்லை.

    இது சம்பந்தமாக கேட்டபோது சரியான முறையில் பதிலளிக்கவில்லை. அப்போது இது தொடர்பாக சுந்தரராஜன் என்னை தொடர்பு கொண்டு எனது உறவினர் பெண் என தெரிந்தும் இது சம்பந்தமாக ஏன் கேட்டீர்கள் என கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஒரே இடத்தில் 25 வருடங்களாக வேலை செய்து வருகிறேன்.

    ஆகையால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருகிறார். ஆகையால் என் பணியை செய்யவிடாமல் தடுப்பதோடு இழிவாக பேசி எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாக்கிவரும் சுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    ராமநத்தம் அருகே கோவில் விழாவில் 2 பெண்களிடம் 8½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி அன்னக்கொடி (வயது 62), வாகையூரை சேர்ந்த ராமசாமி மனைவி கல்யாணி (55) ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் அன்னக்கொடியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையையும், கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகைகளையும் அபேஸ் செய்து சென்று விட்டனர். பறிபோன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களிடம் நகையை அபேஸ் செய்து சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
    ×