search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லிக்குப்பம் நகராட்சி
    X
    நெல்லிக்குப்பம் நகராட்சி

    நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரபா என்பவர் பதவி விலகினார்.
    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றன.

    கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களில் வெற்றிபெற்றது. அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி, பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லீம்லீக், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை தலா 1 இடங்களிலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி தி.மு.க. உத்தரவிட்டது. வி.சி.க.சார்பில் கிரிஜா திருமாறன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார்.

    இதையடுத்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. தலைவர் பதவியை இழந்த வி.சி.க.வின் கிரிஜாதிருமாறன் துணை தலைவர் பதவிக்கும் போட்டியிட்டார். ஆனால் துணை தலைவர் பதவியும் தி.மு.க.வை சேர்ந்த ஜெயபிரபா மணிவண்ணன் வசம் சென்றது. இதனால் வி.சி.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் நெல்லிக்குப்பம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரான சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெற்றிபெற்ற தி.மு.க. நிர்வாகிகளிடம் பதவி விலகசொல்லி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணை தலைவர் பதவியை மட்டும் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ. கணேசன் தலைமையில் நகராட்சி தலைவராக வெற்றிபெற்ற ஜெயந்தி, அவரது கணவர் ராதா கிருஷ்ணன், துணை தலைவராக வெற்றிபெற்ற ஜெய பிரபா, அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோர் நேற்று சென்னை சென்றனர்.

    விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து உறுதி அளித்தனர். திருமாவளவனும் இந்த முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து அனைவருக்கும் சால்வை அணிவித்தார்.

    இன்று நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் ஜெயபிரபா மணிவண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்று தெரிகிறது. இதனால் மீண்டும் நெல்லிக்குப்பம் நகராட்சியின் துணை தலைவர் பதவி விடுதலை சிறுத்தை கட்சியின் வசம் செல்கிறது.
    Next Story
    ×