என் மலர்
உள்ளூர் செய்திகள்

காலை நேரங்களில் வரும் கனரக வாகனங்களால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல்- கடலூர் மக்கள் அவதி
கடலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் பல்வேறு பகுதிகளில் கடும் அவதி ஏற்பட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாநகராட்சியிலும் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை கடலூர் லாரன்ஸ் சாலையில் காலை முதலே இந்த போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பஸ், ஆட்டோ மற்றும் தனது ஸ்கூட்டரில் செல்வதுண்டு. இருந்த போதிலும் காலை 7 மணி முதலே லாரி, டாரஸ். கண்டெய்டனர் போன்ற பெரிய வாகனங்களில் மணல், ஜல்லி மற்றும் பிற இதர பொருட்களை கொண்டு செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் செல்வதால் அவர்களுக்கு இடையூறாக இந்த கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பிற வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகின்றனர்.
இவர்களுக்கு இடையூறாக செல்வதால் மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடிவதில்லை. மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பலர் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் இந்த போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகின்றனர்.
பெரிய அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக ஏற்பட்டு சாலைகள் சேதமாகிறது. மேலும் இந்த வாகனங்களில் மணல், ஜல்லி போன்றவை கொண்டு செல்வதால் அதிலிருந்து வெளியேறும் தூசி புகை வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி படுகின்றனர்.
இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கண்களில் தூசி புகை படுவதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை கன ரக வாகனங்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடலூர் மாநகராட்சி பகுதியில் அப்படி இல்லை. விதிகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால்தான் காலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி தக்க தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






