என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதனை சுற்றிசித்தேரி, பூதவராயன்கோட்டை, மயிலாம்பூர், பூவாலை உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சைபயறு விளைவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பொங்கல் சீசனில் பயிர் விதைப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்ததால் விளைச்சல் செழிப்பாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது அறுவடை காலம் தொடங்கி உள்ளது. ஆனால் அறுவடை செய்வதற்கு போதுமான விவசாய கூலி தொழிலாளிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் எந்திரம் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்து, அதன்படி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அறுவடை பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்கிறோம். ஆனால் செலவு ஏறக்குறைய ஒன்றாகத் தான் இருக்கிறது.
இந்த ஆண்டு விளைச்சல் நல்லபடியாக இருக்கும் என்று நம்புகிறோம். சுமாராக ஏக்கருக்கு 2 மூட்டைகளில் இருந்து 8 மூட்டைகள் வரை உளுந்து மற்றும் பச்சைபயறு கிடைக்கும். இதனால் போதுமான லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா 20210- 2022 அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தின் சார்பில் முதலாம் ஆண்டு இளநிலை (வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பாடப்பிரிவுகள்) மற்றும் பட்டயப் படிப்புகள் தொடக்க விழா சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் சுதின்ராஜ் வரவேற்றார். வேளாண் புல முதல்வர் முனைவர் சுந்தர வரதராஜன் தலைமை தாங்கி பேசினார்.
விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நல வாழ்வு இயக்குநர் முனைவர்.ராமகிருஷ்ணன், பால் காந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் புதிய மாணவர்கள் வேளாண் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற இளநிலை வேளாண் மாணவர்களுக்கு பாராட்டும் வழங்கப்பட்டது. முடிவில் மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், மற்றும் துணைவேந்தரின் நேர்முக செயலர் முனைவர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பட்டயப்படிப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடலூர் மாநகர குழு சார்பில் அரசுத்துறை நிறுவனங்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
என்.எல்.சி.யில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். என்.எல்.சி, சி.எஸ்.ஆர் நிதியை மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம் சென்னை, கோவை, புதுச்சேரி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் சைக்கிள் பேரணியாக சென்றனர்.
இவர்களில் புதுச்சேரி பயண குழு கடலூர் சாவடி பகுதியிலிருந்து சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி செம்மண்டலம் லாரன்ஸ் ரோடு வழியாக பாதிரிகுப்பம் மற்றும் திருச்சிக்கு மே 1-ம் தேதி சென்றடைய உள்ளனர். பின்னர் பிரச்சார பயணம் தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பயணக் குழு தலைவரும் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கடலூரில் வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் சிங்காரவேலன், மாநில துணை தலைவர் ஜோதிபாசு, புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆனந்த், கடலூர் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்மணி, துறைத்தலைவர் வினோத்குமார், துறை தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் பரமசிவம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், கடந்த முறை விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற முறையில் மனு ஏற்கப்பட்டது என்கிற எண்ணிக்கை அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று விவசாயிகள் கடந்த முறை நாங்கள் வழங்கப்பட்ட மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மேலும் இது தொடர்பாக எங்களுக்கு எந்தவித கடிதமும் பெறவில்லை. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் மனு ஏற்கப்பட்டது என தெரிவித்தால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு என்ன நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளார்கள்.
மேலும் கடந்த காலங்களில் மனுக்கள் வழங்கினால் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தது குறித்து அதிகாரியிடம் இருந்து கடிதம் தரப்படும். ஆனால் தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீங்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் விவசாயிகள் வழங்க கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய விவசாயிகளுக்கு தெரிய படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, தனியாக அறை ஒதுக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, துணை மேயருக்கான அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக துணை மேயர் தாமரைச்செல்வன் வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, நகர தி.மு.க. செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாநிலக்குழு பாரா.முரளி, நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் சரிதா, அருள் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர்கள் உளுந்தாம்பட்டு பத்மநாபன், கவியரசன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர், அப்பொழுது உளுந்தாம்பட்டு ஏரியின் உள்ளே பலகை கல்லில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டறிந்தனர்,
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-
உளுந்தாம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பம் ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 70 செ.மீ, அகலம் 35 செ.மீ, ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள்.
தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனைஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள், மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் கட்டப்பட்டுள்ளது.
பின்புறம் சூலாயுதம் இருக்கிறது. இடதுபுறம் கலைமான் வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின்கரங்களில் எறிநிலைசக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபய முத்திரையில் உள்ளது. கைகளில் வளையல் உள்ளது, கொற்றவையின் கால் அருகே தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக்கொள்ளும் நவக ண்டவீரன் ஒருவன் இருக்கிறான். இடது பக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார். கால்களில் கழலும், சிலம்பும் உள்ளது. காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது என்றார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் மாணவர்கள் போராட்டம் தொடருகிறது. தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் செய்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் விக்கி (எ) சிவசந்திரன் (வயது23). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இது தவறான செயல் என்று சிறுமியின் தாயார் கண்டித்துள்ளார்.
இதனால் கோபம் கொண்ட விக்கி அந்த குடும்பத்தை பழி வாங்கும் நோக்கத்தில் தனது செல்போனில் அந்த சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைபடத்தை தயார் செய்து தன்னுடைய வாட்ஸ்அப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியவர இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை இதுதொடர்பாக பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி அறிந்த விக்கி போலீசின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பொது மக்களுக்கு இடையூறுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உருவானால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அது குறித்து உடனடியாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், புதிய காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.
அந்த எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில். கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்து வோரை கட்டுப்படுத்தும் விதமாக காவல் அதிகாரிகள் , காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் போலீசாரின் அறிவுரையை பின்பற்றாத 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்தி விட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. வழியில் தொழுதூர் அருகே உள்ள ஆ.பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலம் சாலையில் சென்றது. எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலத்தில் பஸ் புகுந்தது. இதில் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சாமி சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த சில இளைஞர்கள் அரசு பஸ்சின் டிரைவர் பெரியசாமியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை சுமார் 40-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்காமல் நிறுத்திவிட்டனர். டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திட்டக்குடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என்று பொதுமக்கள் பலரும் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகினர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் அரசு பஸ் டெப்போ மேலாளர் மாரியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் டிரைவரை தாக்கியவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து சிலமணிநேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.
திடீரென இன்று காலை அரசு பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






