என் மலர்
கடலூர்
பூலோக கைலாயம் என சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் அழைக்கப்படுகிறது. ஸ்ரீநடராஜர் கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும்.
ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை (24-ந் தேதி) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ரயாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
பண்ருட்டி டைவர்ஷன் சாலையில் அமைந்துள்ளது. திரவுபதி அம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் 18 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல கடந்த 31-ந் தேதிகொடியேற்றத்துடன் 18 நாள் உற்சவம் தொடங்கியது. இதன் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா பண்ருட்டி களத்துமேட்டில் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள், திரவுபதி அம்மன், அர்ஜுனன் ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதனை தொடர்ந்து பூங்கரகம் தீ குழியில் இறங்கிய உடன் பக்தர்கள் தீமிதித்தனர்.
இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீதியுலா காட்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா, விழாக்குழுவினர், பொதுமக்கள், உற்சவதாரர் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதனையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வரலாற்றில் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. தமிழகத்தில் நுழைந்த ஆங்கிலேயர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள புனித டேவிட் கோட்டையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
மேலும் கடலூர் மாவட்டத்தின் மூலமாக அவர்கள் தெற்கு பிராந்தியத்தை ஆட்சி செய்து வந்தனர். தொடர்ந்து கடல்வழி வணிகத்திற்கும் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இதன் மூலமாக கடலூர் நகரம் முதலில் பெரும் நகரமாகவும் அதனைத் தொடர்ந்து நிர்வாக பணிக்காக 1866-ம் ஆண்டு கடலூர் நகரம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதன் எதி ரொலியாக கடலூர் மாவட் டம் இந்தியாவிலேயே முதல் நகராட்சி என்ற சிறப்பு மிக்க அந்தஸ்தைப் பெற்றது.
அதனை தொடர்ந்து 100 ஆண்டுகளை கடந்த கடலூர் நகராட்சி 9.3.1993 -ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும் பின்னர் 2.12.2008-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
இத்தனை வரலாற்று சிறப்புமிக்க கடலூர் பெரு நகராட்சி 25.8.2021-ம் ஆண்டு ஊராட்சி பகுதிகளான அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், நத்தம் பட்டு உள்ளிட்ட 19 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற நாள் முதல் கடலூர் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ரூபாய் 50 கோடிக்கும் மேலாக வரி பாக்கி உள்ளது தெரியவந்தது. இது குறித்து அறிந்த மாநகராட்சி மேயர் உடனே வரி பாக்கியை செலுத்துமாறு கடைக்காரர்களிடம் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் உள்ள வரி பாக்கிகள் மற்றும் இதர வரி பாக்கிகளை உடனே வசூல் செய்ய வேண்டும். அதன் மூலம் கடலூர் மாநகராட்சியில் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், பூங்கா மேம்படுத்துதல், சில்வர் கடற்கரையை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை மேற் கொண்டு கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்ற தேவையான வளர்ச்சிப் பணிகள் நடைபெற வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பின்புறம் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்குஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து உள்பட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படும்.
இன்று காலை ஆயுதப்படை போலீசாருக்கான கவாத்து பயிற்சி நடந்தது. இதில் வழக்கம்போல ஆண், பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்யா (வயது28) என்ற பெண் போலீஸ்காரர் திடீரெனமைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனால் சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக சத்யாவை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர் சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க முடிவு செய்தனர்.
அதன்படி சத்யாவுக்கு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென பெண் போலீஸ் மயங்கி விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.எல்.சி. இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் நடந்தது. என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளரும், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர்சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும், சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைத்திட வேண்டும், என்.எல்.சி.யில் யார்டு, சுரங்க பகுதிகளில் உள்ள பழைய வாகனங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, வாகனப்பற்றாக்குறையை சரி செய்து அதனை இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கடலூர் போலீஸ் மாவட்ட சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று நூதன முறையில் நாப்கின் பேடில் மறைத்து வைத்து விற்பனை செய்த சுரேஷ் (40) அய்யப்பன் (38), வடக்குபாளையம்குமார் (40)ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான பாக்கெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் 14 வயது மகளுடன் ஓசூரில் தங்கி ஓட்டலில் வேலை செய்தார். அப்போது அந்த சிறுமிக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறுமியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது பற்றி சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓசூரில், அதே ஓட்டலில் பணிபுரிந்த திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் சூர்யா என்பவரால் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்தது.
இதுபற்றி பெற்றோர் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து சூர்யாவை கைது செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியின் உறவினர்கள் 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து உறவினர்கள் 2 பேரை பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 5 பகுதிகளில் குளம் தூர்வாரும் பணி நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஊழியர்கள் நியமனம் செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வான்பாக்கம் சாலையில் 26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குளம் தூர்வாரும் பணியை நகர மன்றத் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சசிகலா தலைமையில் நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா நெல்லிக்குப்பம் பகுதிக்கு திடீரென்று வந்தனர். பின்னர் ஏற்கனவே தோண்டப்பட்ட குளத்தையும், புதிதாக குளம் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறதா? அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குளம் தூர்வாரப்பட்டு உள்ளதா? என்பதனை பார்வையிட்டு அதிகாரியிடம் கேட்டறிந்தனர். பின்னர் நகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அரசு உத்தரவின்படி விரைவில் குளங்களை தூர்வாரி மழை நீர் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சிதம்பரம் அருகே தில்லை போலீஸ் சரகம் கலைஞர்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சந்தியா (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது சந்தியா மீண்டும் கர்பமாக உள்ளார். கடந்த 19-ந் தேதியன்று ஆஸ்பத்திரிக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்ற சந்தியா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியாவை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது கணவர் மாரியப்பன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடிவருகின்றனர்.






