என் மலர்
கடலூர்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள மனு வழங்கி வருகின்றனர்.
இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதி தலைமையில் 6 திருநங்கைகள் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் திருநங்கைகளாக இருந்து வருவதால் எங்களது பெற்றோர்கள் அவர்களுடன் இருக்க விடாமல் தள்ளி வைத்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் தங்குவதற்கு எந்தவித வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். மேலும் பலர் தங்களை மரியாதை குறைவாக நடத்தி வருவதால் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை குட்டைதெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எதற்காக சிறுமி விஷம் குடித்தார் என்பது தெரியாத நிலையில் பண்ருட்டி போலீசில் சிறுமியின் தந்தை நடராஜன் புகார் செய்தார்.
போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சிறுமி பள்ளிக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கேலி, கிண்டல் செய்து வந்தது தெரியவந்தது.
இதில் மனமுடைந்த அந்த சிறுமி விஷம் குடித்ததாக போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியை கிண்டல் செய்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியில் 45 அரசாணை படி தற்போது பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், தமிழக முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் கடந்த 11 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு போராட்டங்களை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த 21-ந்தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மருத்துவமனை வளாகத்தில் முழங்காலிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்களம் புது நத்தம் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (23), மணிகண்டன் (21) ஆகியோருடன் வேலை நிமித்தமாக ஆவினங்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மணிகண்டன் (32) பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பலத்த காயமடைந்த 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவரது மனைவி சுஜாதா (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேப்பூர் அருகே பில்லூர் பகுளத்தில் விவசாய நிலம் ஒன்றை வெங்கடேசன் குத்தகைக்கு எடுத்தார். எனவே குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி குத்தகைக்கு எடுத்த நிலத்தில் விவசாயம் செய்துவந்தார்.
இங்கு வந்தும் தொடர்ந்து அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்துவந்தது. இந்தநிலையில் நேற்று அந்த குத்தகை நிலத்தில் உள்ள கிணற்றில் சுஜாதா பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த சுஜாதாவின் தாயார் வளர்மதி வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சுஜாதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மற்றும் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பி வழிந்தது. இதனால் வீராணம் ஏரி பாசன பகுதியில் நெல் அறுவடை முடிந்துள்ளது. எனவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. என்றாலும், சென்னை மாநாகர் குடிநீருக்காக தினசரி தண்ணீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று 42.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. அது இன்று 42.45 அடியாக குறைந்தது. ஏரிக்கு நேற்று 241 கனஅடி நீர் வந்தது. அது இன்று 181 கன அடியாக குறைந்தது.
சென்னை மாநகர் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 61 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
பண்ருட்டி:
பண்ருட்டியில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வறுத்து எடுப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. எனவே எப்போது மழை பெய்யும் என்று மக்கள் எதிர்ப்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் வங்க கடலில் மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை பண்ருட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் திடீர் மழை பெய்தது. இதனால் மண்ணும் குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்து. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55). இவர் சம்பவத்தன்று பாஸ்கர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்குச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்த பாஸ்கர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம், விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார். பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






