என் மலர்
கடலூர்
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் முருக வேல் தலைமை தாங்கினார். மாவட்ட குழு விவசாய தொழிலாளர் சங்கம் சிதம் பரம்இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு மணிவாசகம் மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஜெயராமன் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணி யாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் ரூ.281 சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பேசினார்கள்.
திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு விவசாய தொழிற் சங்க நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். பெரு மாள்,முருகன், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு சுப்பி ரமணியன், வட்ட செய லாளர் முருகன், மாவட்ட குழு உலகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரை யாற்றினார். இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு அதன் கீழ் செயல்படும் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனை தற்போது கடலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் படித்துவரும் மாணவ-மாணவிகள் பிற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்கவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் புதிதாக சேரும் மாணவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வாங்கப்படுகிறது.
ஏற்கனவே படித்துவரும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தங்களுக்கும் திருத்தப்பட்ட புதிய அரசு கல்விகட்டணத்தை வசூலிக்கவேண்டும் என்று இந்த கல்லூரியில் பயிலும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 10-ந் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதிவரை அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவகல்லூரி வளாகம் மற்றும் மருத்துவகல்லூரி புலமுதல்வர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 21-ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளார். முதலாண்டு மற்றும் 5-ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு மாணவர்கள் அணைவரும் விடுதிகளை காலிசெய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதிகளை காலி செய்ய மறுத்து இன்று காலையும் மாணவ-மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்படும் காலை உணவு நிறுத்தப்பட்டது. ஆனாலும் வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிட்ட மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் இந்த போராட்டம் தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அதன்பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை மாணவ- மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமா என்பது தெரியும்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம், புதுவை அருகே உள்ள மணமேடு, கே.என்.பட்டி, மருதூர், வானமாதேவி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் ஒரு வேனில் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த வேன் கடலூர் அருகே சோனாஞ்சாவடி என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறி கெட்டு ஓடிய வேன் 7 அடி ஆழ தரைப்பாலத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கதறி கூச்சலிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து வேனில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அவர்களில் ஒருவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப் புத்துறையினர் அனைவரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் விழுப்புரம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆனந்த் (வயது 50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் வானமாதேவியை சேர்ந்த சந்தோஷ் (22), ஜான்சிராணி (20), நாராயணன் (22), வளர்மதி (39), பெருமாள் (47), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அரவிந்த் (30), கீதாலட்சுமி (31), சாலினி (24), மருதூரை சேர்ந்த செல்வி (41), மணமேட்டை சேர்ந்த காஞ்சனா (47), அருண் (20) மற்றும் குழந்தைகள் ரேஷ்மா (6), புவனேஷ் வரண் (5), சிவனேஷ் (1½) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து கடலூர் சோனாஞ்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நடைபெற்றது. சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டுகளித்து தரிசித்தனர்.
உலக நன்மை வேண்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் சித்திரை மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு மகாருத்ர ஜப பாராயணம் மற்றும் யாகம் கணபதி பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடராஜர் கோவிலில் வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சித்சபையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு 8 மணிக்குள் உச்சிகால பூஜை நடைபெற்றது. பின்னர் 10 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் கனகசபையில் எழுந்தருளினார்.
ஆயிரங்கால் மண்டபம் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பந்தலில் யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 1 மணி முதல் 4 மணி வரை லட்சார்ச்சனையும், 300 பேர் பங்கேற்ற மகாருத்ர யாகம் நடைபெற்றது.
பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கனகசபைக்கு சென்ற பின்னர் மகாபிஷேகம் நடைபெற்றது.
மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.
ஆடல் வல்லான் நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்கள் ஆறு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.
சித்திரை திருவோணம் நாளான நேற்று திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு இந்த ஆண்டின் முதல் மகாஅபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து சிறப்புமலர் அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தீபாராதனையின்போது அப்பர் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் மண்டபத்தில் எழுந்தருளி தரிசன காட்சி நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், டாக்டர் ராம்பிரசாத் கவுன்சிலர்கள் ராமலிங்கம், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், சித்திரை திருவோண உபயதாரர் ஜெயஸ்ரீதர் மற்றும் சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள் ஆலய அர்ச்சகர்கள் சிறப்பாக செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை-பவானி ரோடு, சோளிபாளையம் பகுதியில் சாகர் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த உக்கரவேல் என்பவரது மகன் கலையமுதன் (வயது 16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் முதல் மாணவர் கலையமுதனை காணவில்லை.
இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் சுந்தர்ராஜன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகிறார். பள்ளியில் தங்கி படித்த மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






