என் மலர்
கடலூர்
- காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்ததும் இரவு அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினர். தாங்கள் வந்த போலீஸ் வேனை வடக்குத்து போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த வேனின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்த வேனை பார்வையிட்டார்.
வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இத் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பிபேட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அங்கு இருந்த பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் தாக்கி அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இந்த மோதலில் தம்பிபேட்டை சேர்ந்த அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பி பேட்டைைய சேர்ந்த செந்தமிழ் செல்வன், வீர பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே மோதலை தடுக்க சென்ற போலீசாரின் ஜீப் கண்ணாடி உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- தொடர்ந்து சீற்றம் ஏற்பட்டு வருவதால் சவுக்கு மரங்கள் ஏராளமானவை கடலில் அடித்து செல்லப்பட்டது.
- மீனவர்களின் வலை மற்றும் படகுகளும் சேதமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த 2004 -ம் ஆண்டு கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு வந்ததோடு, 600-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கடலில் தற்போது வரை அடிக்கடி ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திடீரென்று கடல் சீற்றம், கடல் முன்னோக்கி வருதல், அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி ஏற்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொடர் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்து சென்றதும் குறிப்பிடத்தக்கதாகும். இது மட்டும் இன்றி கடலூர் தாழங்குடா, சுப உப்பலவாடி பகுதிகளில் சுனாமி பேரலைக்குப் பிறகு வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கடற்கரை ஓரமாக சவுக்கு மரங்கள், தோப்புகள் ஏற்படுத்தி பாதுகாத்து வந்தனர்.
தற்போது கடலில் தொடர்ந்து சீற்றம் ஏற்பட்டு வருவதால் சவுக்கு மரங்கள் ஏராளமானவை கடலில் அடித்து செல்லப்பட்டது.இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட கடல் முன்னோக்கி வருவதோடு மண்ணரிப்பும் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே மண்ணில் புதைந்திருந்த சிமெண்ட் கட்டைகள் தற்போது தொடர் மண்ணரிப்பு காரணமாக வெளியில் வந்துள்ளது. மேலும் கடல் முன்னோக்கி வருவதால் கடற்கரை முகப்பு பகுதியில் இருந்து தற்போது கடல் நீர் இருக்கும் பகுதி சற்று நெருங்கி வந்தது போல் இருக்கிறது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக பைபர் படகு நிறுத்துவதை தற்போது மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி செல்வதையும் காணமுடிகிறது. மேலும் அவ்வப்போது கடல் அலைகள் திடீர் சீற்றம் காரணமாக மீனவர்களின் வலை மற்றும் படகுகளும் சேதமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். கடலில் அடிக்கடி திடீர் மாற்றம் காரணமாக கடலூர் மாவட்ட கடற்கரை ஓரமாக உள்ள மீனவர்கள் வழக்கத்தை விட அதிக அளவில் பீதியுடன் காணப்பட்டு வருகின்றனர்.
- கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
- ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி புதுநகர் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அஸ்வினி (வயது 20), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். மாலை வீடு திரும்ப வில்லை. கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் தந்தை கணேசன் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி அஸ்வினியை தேடி வருகின்றனர்.
- சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
- நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
- என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித் தேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும், முன்னாள் எம்.பி. சந்திர காசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகமாறன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
- அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் டீக்கடை மீது கல் வீசி தாக்கினார்கள். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மேலும், 2 கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அந்த மர்மகும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
- 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
- தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
கடலூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார் புரத்தில் மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு, அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளை கண்ணு என்பவர் வீட்டிற்கு சென்று பிரபாகர் சோதனை செய்த போது, அரசு அனுமதி இன்றி நாட்டு வெடி 1½ மூட்டை இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த நாட்டு வெடி சமீபத்தில் சிவனார்புரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்த கோசலா மற்றும் சேகர் ஆகியோர் தயாரிக்கும் இடத்திலிருந்து கொண்டு வந்து வெள்ளைகண்ணு வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வெடி வைத்திருந்த மூட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் பறிமுதல் செய்து, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளை கண்ணு, முத்தம்மாள், கோசலா, சேகர் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
- இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.
கடலூர்:
பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.
இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
- இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஆனந்தி (வயது 18) இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை சக்திவேல் புகார் அளித்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறனர்.
- மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க. நிர்வாகிகள் 56 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே பா.ம.க.மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்திரசேகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி பா.ம.க. நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.






