என் மலர்tooltip icon

    கடலூர்

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    • குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூர் ஊராட்சி உள்ளது. இது பெரிய ஊராட்சி என்பதால் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து குப்பைகள் அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் குப்பைகள் அதே பகுதியில் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு, குப்பைகளின் கூடாரமாக மாறி வருகின்றது. இங்கு வரும் கால்நடைகள் குப்பைகளை கிளறி தங்களுக்கு தேவையான உணவுகளை உட்கொண்டு வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மக்காமல் சிதறி கிடக்கின்றது.

    அவ்வழியே வாகனத்தில் செல்வோர் மீது காற்றில் பறந்து பிளாஸ்டிக் குப்பைகள் விழுகின்றது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இது மட்டும் இன்றி அவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் வகையில் துர்நாற்றம் வீசி வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி சுகாதாரத்தை பேணிக்காத்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது.
    • தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதேயில்லை. இதுபோன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறாது. நமது நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி பணிதான் முக்கியமென ராமேஸ்வரத்திற்கு வந்து நடைபயணத்தை தொடங்கி பேசியுள்ளார். தமிழையும், திருக்குறளையும் பா.ஜ.க.தான் வளர்ப்பது போல அவர் பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற பா.ஜ.க. முன்வருமா, தமிழகத்தில் தமிழ் குறித்து பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். என்,எல்.சி.யில் நடைபெற்ற சம்பவம் வருத்தத்திற்குறியது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்.எல்.சி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகலாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்கவும் முன்வரவேண்டும். நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டுமென பா.ம.க.வினர் வலியுறுத்தினர். அவ்வாறு என்,எல்.சி. நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேறினால் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்படும். ஆகவே, என்.எல்.சி. பிரச்னையை சரி செய்து, பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் அனைவரும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என நீதிமன்றம் கூறியுள்ளதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. இதனை பயன்படுத்தி தமிழக கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.
    • இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் முத்து மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் மேலதாலங்கள் முழங்க வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டும், தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாதனை நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தாமஸ்லிகோரி தனியார் தொலைக்காட்சியில் சென்னையில் பணி செய்து வந்தார்.
    • வேப்பமரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்கு பாளையம் மெயின்ரோட்டில் வசிப்பவர் தாமஸ்லிகோரி (வயது 23). இவர் தனியார் தொலைக்காட்சியில் சென்னையில் பணி செய்து வந்தார். இந்நிலையில் விடுப்பு எடுத்துக்கொண்டு நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது பெற்றோர் அவரை தேடி சென்றபோது, அப்பகுதியில் இருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேத்தியாத்தோப்பு போலீசார், தாமஸ்லிகோரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்பரசனை பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.
    • ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவரது தம்பி மகன் அன்பரசனை புதுச்சேரி மாநிலம் மடுகரையை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் தரப்பினர் கடத்திச் சென்று கடந்த மே மாதம் கொலை செய்து புதைத்தனர்.

    இந்த கொலை வழக்கின் விசாரணைக்கு யாரும் சாட்சி சொல்ல வரக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட அன்பரசனின் உறவினர் சேகர் என்பவரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கத்தியை கழுத்தில் வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் அய்யனார் என்கின்ற தாடி அய்யனார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யனாரை அதிரடியாக கைது செய்தனர்.

    • பலியானவர்கள் அஜித், மதுமிதா என்பதும் மற்ற 2 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
    • விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.கம்பனியில் பணிபுரிந்து வந்தார்.

    அஜித் சென்னையில் இருந்து காரில் தனது மனைவி மதுமிதா (23), மகள் ஜனனியா பிரித்தி (2), மாமியார் திண்டுக்கல் நாகல் நகர் ரெயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (47) ஆகியோருடன் ஆண்டிபட்டி சென்றார். காரை அஜித் ஓட்டினார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே கார் வந்த போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

    இதில் பலத்த காயமடைந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, மகள் ஜனனியா பிரித்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழ்செல்வியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

    வேப்பூர் போலீசார் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாததோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

    போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • நடைபயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக கால்தடுமாறி கே.எஸ்.அழகிரி கீழே விழுந்தார்.
    • கே.எஸ்.அழகிரிக்கு ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பணிநத்தம் ஆகும். நேற்று காலை 6.30 மணிக்கு அவர் அங்குள்ள தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அவரது மகன் சம்பந்தம், கே.எஸ்.அழகிரியை சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கே.எஸ்.அழகிரிக்கு ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இடுப்பு எலும்பில் உள்ள சவ்வில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. எனவே கண்டிப்பாக 15 நாட்கள் ஓய்வு எடுக்க கே.எஸ்.அழகிரிக்கு டாக்டர் அறிவுரை கூறினார்.

    இதையடுத்து அவர் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    • பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.
    • போலீசார் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பா.ம.க. தொண்டர்களை கலைந்து செல்ல கூறினார்கள்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.

    அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது.

    மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும்

    நடைபெற்று வருகிறது.

    இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

    இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார்.

    கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார்.

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று. விடமாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாலு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கார்த்திக், முத்து கிருஷ்ணன், செல்வமகேஷ், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், மாநில ஊடக பிரிவு நிர்வாக வினோபா, மாநில மகளிரணி செயலாளர் சிலம்பு செல்வி, மாநில விவசாய சங்க தலைவர் ஆலயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.

    முற்றுகை போராட்டம் முடிந்த பின்னர் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அந்த வாகனத்தை தொண்டர்கள் தாக்கினர். அதன் பின்னர் வேறு வாகனத்தில் அன்புமணி அழைத்து செல்லப்பட்டார்.

    இதையடுத்து தொண்டர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் ஆங்காங்கே கற்களாக காட்சி அளித்தது. அதேபோல் தண்ணீர் பாட்டில், கைகளில் வைத்திருந்த கொடிக்கம்பம் ஆகியவற்றை போலீசாரை நோக்கி வீசினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.

    தடியடியில் பா.ம.க. தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பா.ம.க. தொண்டர்களை கலைந்து செல்ல கூறினார்கள்.

    ஆனால், அன்புமணி ராமதாசை வெளியே விட்டால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து தொண்டர்களை கட்டுப்படுத்தும் விதமாக வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த சம்பவத்தால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
    • கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தில் ஜோதீஸ்வரர், மாரியம்மன், அய்யனார், விநாயகர், கம்ப பெருமாள் உள்ளிட்ட கோவில்களுக்குச் சொந்தமாக சுமார் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் சொத்துக்களில் உரிமை கோரி பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதன் காரணமாக கோவில் சொத்துக்கள் முறையான பராமரிப்பின்றி இருந்தது. திருவேங்கடம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்ததால், அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.

    இதையடுத்து 2019-ம் வருடம் முதல் கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனடிப்படையில் கோவில் சொத்துக்களை குத்தகை ஏலம் விடுவதற்காக, நேற்று அறநிலையத்துறை அதிகாரிகளான கோவில் தக்கார் சிவப்பிரகாசம், கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் வந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டசெயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பிச்சப்பிள்ளை, செல்வம் உள்ளிட்டோர், ஜோதீஸ்வரர் கோவில் இருக்கும் இடமே தெரியவில்லை. கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்த பின்பு தான், கோவில் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அதிகாரி களுக்கும், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் சொத்துக்களை ஏலம் விடுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர்.
    • ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடுகு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ராமு என்கிற உண்டி ராமு (வயது 35). இவர் உண்டியலை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வம் மகன் கஜேந்திரன் (21), மூர்த்தி மகன் கணேசன் (26) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் ராமு மீது தாக்குதல் நடத்தினர். இதில் கைகளில் கத்தி வெட்டு காயங்களுடன் ராமு தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ராமு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தில்லைக் காளியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வந்த ராமு, ஒரு ஓட்டலில் அமர்ந்து டிபன் சாப்பிட்டார். இதனை அறிந்து வந்த கஜேந்திரன், கணேசன் ஆகியோர் ராமுவை சுற்றி வளைத்து உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்டினர். இதில் நிலை குலைந்த ராமு, பலத்த காயங்களுடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன், கணேசன் ஆகியோர் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, நகர போலீசார் விரைந்து சென்றனர். கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ராமுவின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது,

    ×