என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் கண்காணிப்பு.
    • 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    கோவை:

    கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் உயிரிழந்த நிலையில் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்-கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொது சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவை-கேரளா எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    • நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
    • முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பின்னர் மறுகால் பாய்ந்து பவானி ஆற்றை சென்றடைகிறது.

    இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் தற்போது வரை 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி உள்ளது.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் ஒரு முதலை பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால் அந்த முதலையை பிடிப்பது வனத்துறைக்கு சவால் மிகுந்த பணியாக உள்ளது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாத அளவில் வனத்துறையின்ர் வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்வையிட்டனர்.

    அப்போது நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே நீர்வழிக்குட்டையில் தண்ணீர் வற்றத்தொடங்கி உள்ளதால் அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் உடனடியாக நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அண்ணாபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    • மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதற்கு மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

    நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.

    இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறி சிங்காநல்லூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சதீஷ், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வரும் ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஆனால் சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டை எடுத்துள்ளார். நான் வீடியோ எடுத்து பரப்பவில்லை எனவும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் கூறியதாவது:-

    நான் பாரதீய ஜனதாவில் கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை பொறுப்பு வகித்துள்ளேன். கடந்த 31-ந் தேதியே எனது பதவி காலம் முடிந்து விட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்துள்ளார்.

    மற்றொன்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமையும், தேசிய தலைமையும் தான் செய்வார்கள். அதையும் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.

    இந்த பிரச்சனையில் வீடியோ எடுத்தது அங்கிருந்த 4, 5 பேர் தான். நான் அந்த வீடியோவையே இதுவரை சரியாக கூட பார்க்கவில்லை. இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. அந்த தகவலை தான் நான் பிறருக்கு அனுப்பினேன். பார்வேட் செய்தது தவறு என்றால் வீடியோ வெளியிட்ட நபர் மீது கட்சி விரோத நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

    மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
    • மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

    கோவை:

    கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை சுந்தராபுரம், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலத்தை சுற்றிலும் பாடல்கள் பாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் தினத்தின் முக்கிய நிகழ்வாக மலையாள மக்கள் இன்று வீடுகளில் காலையில் கனி கண்டு கடவுளை வணங்கி வழிபாடுகள் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கோவில்களுக்கு சென்றும் ஒருவருக்கு ஒருவர் வழத்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிர்மால்ய பூஜை மற்றும் சீவேலி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலும் 2 ஆயிரம் கிலோ பூக்களால் பிரமாண்டமாக அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் மாவட்ட அளவிலான கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த முறை ஓணம் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. அங்கு வசிக்கும் மலையாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் ஓணம் திருவிழாவின் முக்கியமான ஓணம் விருந்து படைக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். மலையாளிகள் படைத்து இருந்த ஓணம் விருந்து சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்பட பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் மலையாளிகள் வீடுகளில் விருந்துணவை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் ஏராளமான பூக்களை வரவழைத்து இருந்தனர். மேலும் பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலை குறைத்து தான் விற்பனை செய்யப்பட்டது.

    இருப்பினும் கேரள மக்கள் பெருமளவில் வராததால் பூ மார்க்கெட்டுகள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயி களும், பெருமளவில் விற்ப னையை எதிர்பார்த்து இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் நிதியமைச்சரை சந்தித்தார்.
    • அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உணவக நிர்வாகம் விளக்கம் அளித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், "செப்டம்பர் 11ல் நிதி அமைச்சர் உடனான உரையாடல் வைரல் ஆனதால் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அன்னபூர்ணா உரிமையாளர் அவரை சந்தித்தார்

    இந்த தனிப்பட்ட சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நன்றி

    தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். எங்களு ஆதரவு அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கிறது.

    அதேபோல பன்னுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. பன் உள்ளே வைக்கும் கிரீமுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிப்பது ஏன்? என வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.

    இதனால் கடை நடத்த முடியவில்லை மேடம். இந்த முரண்பாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஜி.எஸ்.டியை வையுங்கள் என நகைச்சுவை தொனிக்க கூறினார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் தனியாக சந்தித்து பேசிய வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளரை வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்து இருப்பதாக கூறி, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.கவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசிய வீடியோவை பா.ஜ.கவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. முரண்பாடு குறித்து உணவக உரிமையாளர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பூங்கா ரவுண்டானாவில் பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளனர்.

    • அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், "உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா?"

    "மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது. உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.

    • யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் நரசீபுரம், ஓணாப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதமாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    குடியிருப்புக்குள்புகும் யானை, வீடுகளை சேதப்படுத்துவது, தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, மக்களை தாக்குவது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அருகே அட்டுக்கல் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 7 மணிக்கு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை யானை, தேவராஜை தாக்கி தூக்கி வீசியது. மேலும் காலால் மிதித்தும் கொன்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சத்தம் கேட்டு, மக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை பார்வையிட்டு, அந்த பகுதியில் யானை நடமாட்டத்தையும் கண்காணித்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார்.
    • மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார்.

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க. எம்.எல்ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனையில் ஈடுபட்டதோ இல்லை.

    * மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.

    * ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தாமாக முன் வந்து மன்னிப்புக்கேட்டார்.

    * தான் பேசியதை இணையத்தில் வேறுமாதிரி பரவிடுச்சி. நான் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர் என்று சொல்லி குடும்பத்தை பற்றி எல்லாம் பேசினார்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். 

    • நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.
    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

    சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், மேட்டுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் தேங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.55 வரை விலை போகும்நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை கிடைக்கிறது என்றனர்.

    ×