என் மலர்
கோயம்புத்தூர்
- உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி செந்தில்குமாரின் கண்ணில் பட்டது.
- டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் அங்களக்கரைபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடைக்கு வந்தார்.
அவர் கடையில் இருந்த செந்தில்குமாரிடம் 2 பீர்பாட்டில்கள் தருமாறு கேட்டார். இதையடுத்து செந்தில்குமாரும் பாட்டில்களை எடுத்து வந்தார்.
பின்னர் அந்த பாட்டில்களில் ரூ.10க்கான ஸ்டிக்கர் ஒட்டினார். ஒரு பாட்டிலில் ஒட்டி, அதனை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பாட்டிலில் ரூ.10க்கான ஸ்டிக்கரை ஒட்டி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பீர்பாட்டில் உடைந்தது.
உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி, செந்தில்குமாரின் கண்ணில் பட்டது. இதில் கண்ணாடி அவரது கருவிழியை கடுமையாக தாக்கியது.
வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அப்போது, கருவிழியில் கண்ணாடி கடுமையாக தாக்கியதில் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமாரை கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும் அவருக்கு உரிய சிகிச்சை விரைவாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி சென்றனர். இதற்கிடையே வெயிலின் தாக்கத்தாலேயே பீர்பாட்டில் வெடித்ததாக கூறப்படுகிறது.
- 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
- 26-ந்தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நடக்கிறது.
கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை(திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமம், முகூர்த்தகால், சிறப்பு அபிஷேகம், கிராமசாந்தி, பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 20-ந் தேதி அக்னிசாட்சி நிகழ்ச்சி, 21-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 22-ந் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது.
27-ந் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 28-ந் தேதி தமிழில் லட்சார்ச்சனை, 30-ந் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும் திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.
- விக்னேஸ்வரனை தேடியபோது அவர் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது உறவுப் பெண் வீட்டில் பதுங்கி இருந்தார்.
- 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை திருமண ஆசை காட்டி விக்னேஸ்வரன் கடத்திச் சென்றுள்ளார்.
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
விசாரணையில் அரிசிபாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20) என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. விக்னேஸ்வரனை தேடியபோது அவரும் மாயமாகி இருந்தார். இதனால் விக்னேஸ்வரன் தான் மாணவியை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் என போலீசார் கருதினர்.
இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனை தேடியபோது அவர் வடவள்ளி பகுதியில் உள்ள அவரது உறவுப் பெண் வீட்டில் பதுங்கி இருந்தார். அங்கு மாயமான மாணவியும் இருந்தார். மாணவியை போலீசார் மீட்டனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை திருமண ஆசை காட்டி விக்னேஸ்வரன் கடத்திச் சென்றுள்ளார். பழனிக்கு அழைத்துச் சென்று கோவிலில் வைத்து மாணவியை அவர் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் மருதமலை கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து வடவள்ளியில் உள்ள உறவுப்பெண் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று தங்கி இருந்துள்ளார். அதைத்தொடர்ந்து தான் போலீசுக்கு புகார் சென்று சிக்கிக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
- தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கால் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
- தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
வடவள்ளி:
கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.
பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி வனப்பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ பற்றி எரிந்த தகவல் வந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் வனம் முழுவதும் தீ பரவி விட்டதால் தீயை அணைப்பதில் வனத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களுடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து மேற்கு தொடச்சி மலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கால் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டது. இருந்த போதிலும் அதற்கு முதலுதவி சிகிச்சை எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ வேகமாக வனத்தில் பரவி எரிந்ததால், தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகமும் வனத்தில் பரவிய காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்த விமானப்படையிடம் அனுமதி கோரியது.
இதையடுத்து தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்த விமானப்படை அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் தீ பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்தது.
பின்னர் மலைக்கு பின்புறம் உள்ள மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி நடந்தது.
காலை 8.30 மணி வரை இதுபோன்று 3 முறை ஹெலிகாப்டரில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, காட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் தீ எரிவது சரியாக தெரியவில்லை எனவும், இதனால் மாலையில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டது.
தற்போது இருட்டுப்பள்ளம், மதுக்கரை வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகம் உள்ளது.
இதுவரை சுமார் 15 ஹெக்டேர் செடிகள் எரிந்துள்ளன. தற்போது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
- ெபாதுமக்கள் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும் என்றனர்.
- இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
குனியமுத்தூர்.
கோவை சுந்தராபுரத்தை 32 வயது வாலிபர். இவர் நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள உக்கடம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.
அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். பின்னர் வாகனத்தை எடுத்து இயக்க முயற்சித்த போது அவரால் முடியவில்லை.
இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் காலையில் தான் அவர் 3 லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்துள்ளார்.
ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார்.
கோவையில் அண்மை காலங்களாக மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:-
உக்கடம் பஸ் நிலையத்தையொட்டிய பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும். கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெட்ரோல் திருட்டு தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
- ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்
- போலீசார் 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.
கோவை,
கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தி்ற்கு கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- கணவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது.
- பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவரது மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது. இதனால் இளம்பெண் தனது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்து உறவினர்களிடம் புலம்பி வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
- கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கோவை,
அ.தி.மு.க சார்பில் கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், சுகுணாபுரம், சுண்டக்காமுத்தூர், மதுக்கரை ஆகிய இடங்களில் நீர்-மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
குனியமுத்தூரில் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நீர்-மோர் பந்தல் அருகே அம்பேத்கரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டம், மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் போடுவது போன்ற அனைத்து திட்டங்களுமே மெதுவாக நடந்து வருகிறது.
மேலும் கோவைக்கு புதிதாக எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. எனவே கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது எந்த ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட வில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறிகிறார். அவை எல்லாம் வெளியே தெரிவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
- கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
கோவை,
எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணா மலை தெரிவிக்கிறார்.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3.75 லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார்ரூம்மில் இருந்து வருகிறதா ? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா ?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4.50 லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாக அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணா மலைக்கு என்ன தயக்கம்?
அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுகிறீர்கள். படையப்பா படத்தில் ரஜினி காந்த் பேசும் டயலாக்போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைபோல பயன்படுத்துவது எல்லாம் நான் தான். ஆனால் கொடுப்பது எல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கிறது அவரது பேச்சு.
என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன். தமிழகத்தில் நேற்று ஒரு நாள் அதிகபட்ச மின் நுகர்வு 400 மில்லியன் யூனிட்டை கடந்து இருக்கிறது. முதல் முறையாக இந்த அளவு கடந்து இருந்தாலும் எந்தவித மின்தடையும் இல்லாமல் மின்வாரியம் செயல்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்பேசினார்.
அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
- இத்திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதை அடுத்து, போராட்ட குழுவினர் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அம்மனுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனதை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதில் ஒன்றாக அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள், மேட்டுப்பாளையம் அடுத்த வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.
அந்தந்த கிராமங்களில் கோவிலில் உள்ள அம்மன் சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என 8 ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி, அன்னூர் தாலுகாவை சேர்ந்த ராய்கவுண்டன்புதூர், வடுகனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு வந்தனர்.
ஆற்றில் தீர்த்தம் எடுத்து குடத்திற்கு மாலையிட்டு பூஜை செய்தனர். பின்பு விநாயகர், வனபத்ரகாளியம்மனை வழிபட்டனர்.
பின்னர் அவரவர் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
- தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
- கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை,
கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.
தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.
மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.
இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






