என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • மதுபானம் சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுகிழமை) மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினங்களில் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தன.

    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர்.
    • மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியில் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த 100 ஆண்டுகால மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பா.ம.க, பா.ஜனதா கட்சியினர் புகார் செய்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ம.க. நகர செயலாளர் அண்ணாமலை, பா.ஜ.க. நகர செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்து உள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் இருந்த பாழடைந்த பழைய விடுதியை இடித்துவிட்டு நகராட்சி அலுவலகம் மற்றும் வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக போதுமான இடவசதி இருந்தும் அரசு பயணியர் விடுதி வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமை வாய்ந்த வேப்ப மரங்களை தேவையில்லாமல் வெட்டிவிட்டனர். இந்த மரங்கள் இருந்திருந்தால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மரங்களின் நிழலை பயன்படுத்த ஏதுவாக இருந்திருக்கும்.

    தற்போது அரசு அனுமதியின்றி இந்த வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டதால் கோடை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்க கூட இடமில்லாமல் கடும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
    • மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

    இங்கு பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பூதூர், வேடந்தாங்கல், பாக்கம், உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இருந்து, மதுராந்தகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்ட கடைகளை அகற்ற மதுராந்தகம் நகராட்சி, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் மதுராந்தகம் கோட்டாட்சியர், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாநில நெடுஞ்சாலை துறை மதுராந்தகம் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    மதுராந்தகம் நகரில் நேற்று முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • கொள்ளையர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம், கிழக்கு காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் தற்போது சென்னையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அச்சரப்பாக்கத்தில் உள்ள இவரது வீடு பூட்டி கிடந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம கும்பல் சந்திரசேகரனின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளினர்.

    இதற்கிடையே சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் வசிக்கும் வேதகிரி, சிவ சங்கரன் ஆகியோர் எழுந்தனர்.

    சிவசங்கரன், தனது வீட்டின் முன்பு உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது கொள்ளை கும்பல் புகுந்து இருப்பது தெரிந்தது. இது குறித்து அவர் வேதகிரிக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் அச்சரப்பாக்கம் போலீசுக்கு கொள்ளையர்கள் குறித்து கூறினர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சந்திரசேகரனின் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 3 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிப்பட்டவர்கள் சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த செல்வா, பிரான் சிஸ்ராஜ், மூவசரன் பேட்டையை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 2 கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தப்பி ஓடியது கூட்டாளிகளான மடிப்பாக்கத்தை சேர்ந்த சிவா, அந்தோனி, அஜித்குமார் என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி கணபதி நகர் விரிவு 2-வது பகுதியில் மருந்து கடை உள்ளது. நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் மருந்து கடையை உடைத்து கொள்ளை அடித்தனர்.

    மேலும் கொள்ளையர்கள் அருகில் இருந்த மற்றொரு பிளாஸ்டிக் தயாரிக்கும் கடையை உடைத்து லேப்டாப், டி.வி. உள்ளிட்ட பொருட்களை சுருட்டினர்.

    இதைத்தொடர்ந்து வீபாகு நகர் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை விரட்டினர்.

    அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து வந்த போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.

    விசாரணையில் அவர்கள் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலன் என்கிற சின்ன அட்டி, தினேஷ் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே அவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில்வே தண்டவாளம் அருகே தனியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.

    தப்பி ஓடிய கூட்டாளியான சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து டி.வி., லேப்டாப், 3 செல்போன், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
    • மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    வண்டலூர்:

    படப்பை அடுத்த அம்பனாம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது48). தாம்பரம் கிஷ்கிந்தா அருகில் இஸ்திரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா. நேற்று இரவு வேலைகள் முடித்து கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    மண்ணிவாக்கம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியில் சிக்கிய வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். உஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தனது கண்முன் கணவர் வெங்கடேசன் பலியானதை கண்டு உஷா கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர்.
    • மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.

    அப்போது வெண்ணை உருண்டைக்கல் வளாகத்தில் தப்பாட்டம் குழுவினர் இசைத்து கொண்டிருந்தபோது, தப்பாட்ட கலைஞர்களிடம் மேளங்களை வாங்கி வெளிநாட்டு விருந்தினர்கள் தப்பாட்டம் இசைத்து மகிழ்ந்தனர். ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்த பிறகு, மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கு நுழைவு வாயில் பகுதியில் தரையில் வரையப்பட்ட வண்ண கோலங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்தனர்.

    பிறகு கடற்கரை கோவிலுக்குள் வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் பாரம்பரிய வேட்டி அணிந்து மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களின் வரலாற்று தகவல்களை முழு விவரங்களுடன் எடுத்து கூறினர்.

    அவர்களின் வரலாற்று தகவல்களை உற்று நோக்கி கேட்டறிந்த வெளிநாட்டினர் ஒவ்வொரு சிற்பங்களின் வடிவமைப்பு, அதன் தொன்மைகள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த முழு விவரங்களை கேட்டு வியப்படைந்தனர். பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும்போது ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோவிலின் அழகை வெளிநாட்டினர் பலர் ரசித்து குழு, குழுவாக நின்று அங்கு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட உலோக, மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.

    பின்னர் கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். அப்போது சிற்பங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்று கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் வெளிநாட்டினருக்கு விளக்கினர்.

    வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஐந்துரதம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
    • வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கி இருக்கும் ஷெரட்டன் விடுதியில் தமிழ் பாரம்பரிய சரித்திர நாடகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நாளை வரை இது நடைபெறுகிறது. கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார்கள்.

    அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதிகளை பார்வையிட உள்ளனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள டோல்கேட் மூடப்பட்டது.

    சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு புராதன சின்னங்கள் ஜி20 லோ கோவுடன் மின்னொளியில் மின்னியது அனைவரையும் கவர்ந்தது.

    வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், டி.ஐ.ஜி பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

    விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்று விடுதி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    மாலை 3 மணியளவில் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிடும் ஜி 20 பிரதி நிதிகளுக்கு வட நெம்மேலியில் உள்ள ஷெரட்டன் கடற்கரை விடுதியில் இரவு விருந்து அளிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்திய மற்றும் சர்வதேச நாட்டு உணவுகளாக 50 முதல் 60 வகைகள் இடம் பெறுகின்றன.

    தற்போது சிறுதானிய ஆண்டு கடை பிடிக்கப்படுவதால் சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகளும் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடற்கரை விடுதியில் உணவு தயார் செய்யும் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கி இருக்கும் ஷெரட்டன் விடுதியில் தமிழ் பாரம்பரிய சரித்திர நாடகம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனையான வீரமங்கை வேலுநாச்சியாரின் நாடகம் நடத்தப்பட இருக்கிறது. சுமார் 60 கலைஞர்கள் வேலு நாச்சியாரின் சரித்திர நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காட்ட உள்ளனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் கூறும்போது, புராதன சின்னங்கள் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்தை சுற்றி 7 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

    • அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநாட்டினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இ.சி.ஆர். சாலையில் இம்மாநாடு நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    பா.ம.க. மற்றும் வன்னிர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. மாமல்லபுரத்தில் இடவசதியின்மை மற்றும் தொல்லியல் துறை தடை உத்தரவு காரணமாக இந்த சித்திரை முழு நிலவு மாநாடு 2013-ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக நடத்தப்படவில்லை.

    தற்போது பா.ம.க. தங்களது கட்சியின் பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையிலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சித்திரை முழு நிலவு மாநாட்டினை தமிழக அளவில் தொண்டர்களை அதிகளவில் திரட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலையில் உள்ள திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள 200 ஏக்கர் காலி மைதானத்தில் பிரமாண்டமாக இந்த சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது. இ.சி.ஆர். சாலையில், இம்மாநாடு நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    உடன் செங்கல்பட்டு மத்திய மாவட்ட முன்னாள் பா.ம.க. செயலாளர் காரணை தி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு அருகில் 2001-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் இந்த சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பணம் பறிப்பில் ஈடுபட்ட பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான ரஞ்சிதா அழகுக் கலை நிபுணர். அவர் மாமல்லபுரம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    திருப்போரூர்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (40). தொழில் அதிபர். இவர் மறைமலை நகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தொழிலாளர்களின் 'பி.எப்.' பணத்தை அவர்களின் கணக்கில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர் அஞ்சூரை சேர்ந்த பிரபாகரன், அம்மனம் பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் ஆகியோரிடம் கூறினர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோர் திருப்போரூரை அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியை சேர்ந்த பிரசன்ன பாலாஜியுடன் சேர்ந்து தொழில் அதிபர் பாஸ்கரிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு உடந்தையாக பிரசன்ன பாலாஜி தனது காதலியான வடகடம்பாடியை சேர்ந்த ரஞ்சிதாவை பயன்படுத்த திட்டமிட்டார்.

    அவர்களது திட்டப்படி ரஞ்சிதா கடந்த ஒரு மாதமாக செல்போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் பாஸ்கரிடம் நட்பாக பழகினார். மேலும் காதலிப்பதாகவும் கூறி ஏமாற்றினார்.

    இதனை உண்மை என்று நம்பிய பாஸ்கர், ரஞ்சிதாவுடன் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றினார். ரஞ்சிதாவின் அழகில் மயங்கி அவருக்கு தேவையான பண உதவிகளும் செய்தார்.

    இதற்கிடையே கடந்த 27-ந்தேதி பாஸ்கரும், ரஞ்சிதாவும் திருப்போரூர் அருகே உள்ள சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றனர். அவர்கள் தனிமையில் இருந்த போது திடீரென பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் பாஸ்கரை சரமாரியாக தாக்கினர். அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.28 ஆயிரத்தை 'கூகுள் பே' மூலம் பறித்தனர். பின்னர் அவரது 2 செல்போன்களையும் பறித்துவிட்டு இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அப்போது ரஞ்சிதாவை அவர்கள் தெரிந்தவர் போல் காட்டிக் கொள்ளவில்லை. மேலும் ரஞ்சிதாவும், பாஸ்கரும் சேர்ந்து இருப்பது போல் தங்களது செல்போனில் படம் எடுத்து விட்டு தாங்கள் கேட்கும் போது பணம் தர வேண்டும் என்று மிரட்டி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் வெளியில் சொல்ல முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். ரஞ்சிதாவும் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து பாஸ்கர் திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் வழிப்பறி கும்பல் தாக்கியதாக கூறினார். எனினும் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது தான் பாஸ்கர், இளம்பெண் ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த போது இந்த வழிப்பறி சம்பவம் நடந்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து ரஞ்சிதாவை அழைத்து தனியாக விசாரித்தனர். அவரது செல்போனையும் ஆய்வு செய்தனர். அப்போது பாஸ்கரிடம் இருந்து 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பப்பட்ட செல்போன் எண் ரஞ்சிதாவின் செல்போனில் இருப்பது தெரிந்தது.

    அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையின் போது ரஞ்சிதா தனது கூட்டாளிகளான பிரபாகரன், கன்னியப்பன் மற்றும் காதலன் பிரசன்ன பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டில் பாஸ்கரை காதல் வலையில் வீழ்த்தி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். சினிமா பட பாணியில் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறித்து இருப்பது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து பணம் பறிப்பில் ஈடுபட்ட பிரபாகரன், கன்னியப்பன், பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் கைதான ரஞ்சிதா அழகுக் கலை நிபுணர். அவர் மாமல்லபுரம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கணவரை பிரிந்த அவர் பிரசன்ன பாலாஜியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

    பணம் பறிக்கும் கும்பலுக்கு உதவி செய்து தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.

    கைதான ரஞ்சிதா உள்ளிட்ட 4 பேரும் இதேபோல் மேலும் பலரிடம் பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • இந்த கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள மலையின் மீது பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அடிவாரத்தில் பக்தவச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தைப்பூச நாளன்று இந்த கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச நாளான வருகிற 5-ந்தேதி சன்னதிதெருவில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

    மறுநாள் (6-ந்தேதி) பக்த வச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ரிஷப தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதில், உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தெப்ப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்

    • கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
    • 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள், பிற வகை கோழிகளுக்கு, கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் நாளை 1-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×