என் மலர்
செங்கல்பட்டு
- கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன.
- பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
கூடுவாஞ்சேரி:
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மைசூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு கரடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆண் கரடியின் பெயர் அப்பு ஆகும். இதற்கு 2 வயது ஆகிறது. பெண்கரடியின் பெயர் புஷ்பா. இதற்கு ஒன்றரை வயது ஆகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் 2 கரடிகளுக்கும் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இரவில் பயணம் செய்து கொண்டு வரப்பட்டன. பூங்கா ஊழியர்கள் 2 கரடி குட்டிகளுக்கு காய்கறி, பழங்கள், தேன், ரொட்டி, வேகவைத்த முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கி உபசரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் மைசூரில் இருந்து 2 கரடிகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. பகல் நேர பயணத்தை தவிர்க்க இரவு நேரத்தில் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டது. பயணத்தின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனம் நிறுத்தப்பட்டது. அதற்கு பழங்கள், தேன் வழங்கப்பட்டன. இது கரடிகளின் மன அழுத்தத்தை தவிர்க்க உதவியது. தற்போது இந்த கரடிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விடப்படும். இவற்றிற்கு காலை 11 மணிக்கு பழங்கள், காய்கறிகள், மதியம் 1.30 மணிக்கு ரொட்டி, வேகவைத்த முட்டை, மாலையில் கஞ்சியும் பாலும் வழங்கப்படுகிறது என்றார்.
இதில் ஒரு கரடியின் வயது ஒன்றரை மற்றொரு கரடியின் வயது இரண்டு. இவ்விரண்டு கரடிகளையும் 21 நாள் தனி கூண்டில் வைத்து பராமரித்து பின்னர் மற்ற கரடிகளுடன் பழகிய பிறகு பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
- மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுராந்தகம்:
செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர்.
- மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சுமார் 42 சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அங்கு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 20 போலீசார் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்யில் சேர்க்கப்பட்டு உள்ள சிறுவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர். நேற்று மாலை அவர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் அங்கு கிடந்த கம்பு, கம்பி மற்றும் கையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிறுவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த மோதலில் சேலம், விருத்தாசலம், சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சிறுவர்கள் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சார்பில் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது போன்று மீண்டும் சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் சீர்திருத்தப்பள்ளி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் பகுதி வெண்பாக்கத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது82). இவர், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் குளிக்க சென்ற கன்னியப்பன் நீண்ட நேரம் வரை திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிணற்றில் கன்னியப்பன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
- சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.
வண்டலூர்:
சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 36), இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்து வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசியபோது அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதில் சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜ் மோட்டார் சைக்கிளில் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு சென்றபோது அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் சுந்தரராஜை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி விட்டு அவர் கையில் அணிந்திருந்த 2 தங்க மோதிரம், ஒரு லேப்டாப், ஒரு போன், ஒரு வாட்ச் மற்றும் சுந்தரராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து சுந்தரராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
- கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
- விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வடபழனியை சேர்ந்தவர் நிவேதா (வயது21). மறைமலை நகரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை உடன் வேலைபார்த்து வரும் நண்பர்கள் மனோஜ்குமார், சொர்ணரூபினி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு காரில் சென்றார். காரை அனுஷ் கண்ணன் என்பவர் ஓட்டினார். பொத்தேரியில் உள்ள கல்லூரி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தநர் மாணிக்கம் (57). இவர் ஒரகடம் சாலை சந்திப்பு அருகே ஜி.எஸ்.டி.சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.
- சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
- சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
செங்கல்பட்டு:
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.
செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரிதுறை அதிகாரிகள் சுமார் 10 பேர் இன்று காலையில் சென்றனர். அவர்கள் சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் நிறுவனத்தின் வளாகத்திலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். காலையில் பணிக்கு வந்தவர்கள். மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று இருங்காட்டுக்கோட்டை, சோமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இன்று சோதனை நடைபெற்றது.
சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
- பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தோளில் சுமார் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்தார்.
இதனை கண்டு மதுவாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த முதியவர் லாவகமாக அந்த பாம்பை கையாண்டார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பாம்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது தோளில் நெளிந்து கொண்டு இருந்தது.
இதனை கண்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தி முதியவர் பாம்புடன் நிற்கும் காட்சியை கண்டு ரசித்தனர். சிலர் இதனை தங்களது செல்போனிலும் வீடியோவாக எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து அந்த பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
பின்னர் அவர் அந்த பாம்பை அருகில் உள்ள புலிப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள புதரில் விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் வந்தபோது சாலையின் குறுக்கே இந்த பாம்பு ஊர்ந்து சென்றது. வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதால் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டேன்" என்றார்.
- சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
- 3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.
இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.
ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வைகயில் 2-வது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வள பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சூலேரிக்காட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை அமைக்கும்பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது.
எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது 3-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி முடிய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2-வது, 3-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
- ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர்.
மாமல்லபுரம்:
கடலூர், சேனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது35). மீனவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நேற்று மாலை ஜான்சன், மனைவியுடன் கடலூரில் இருந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அமைச்சர் மெய்யநாதனின் கார் திடீரென எதிரே வந்த ஜான்சனின் மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் ஜான்சனும், அவரது மனைவியும் சுமார் 50 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மனைவி உஷா பலத்த காயம் அடைந்தார். அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
விபத்து நடந்தபோது அமைச்சர் மெய்யநாதன் காரில் பயணம் செய்யவில்லை. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்று இருந்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வருவதற்காக கார் சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
- சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது.
தாம்பரம்:
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் விழுப்புரம் நோக்கி நேற்று 2 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தது.
அந்த கன்டெய்னர் லாரிகளுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 17 பேர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சென்றபோது திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது. லாரியில் இருந்து புகை வந்ததால் டிரைவர் உடனடியாக நிறுத்திவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள சித்த ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் 2 கன்டெய்னர் லாரிகளும் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் பணத்துடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரிகளுக்கு தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தாம்பரம், குரோம்பேட்டை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பழுது சரி செய்யப்படாததால் பழுதான கன்டெய்னர் லாரியை மட்டும் ராட்சத கிரேன் வாகனம் உதவியுடன் கட்டி இழுத்து மீண்டும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரூ.535 கோடி பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
- கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர்.
மதுராந்தகம்:
மரக்காணம், சித்தாமூர் பகுதியில் விஷசாராயம் குடித்து இதுவரை மொத்தம் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி அவரது மாமியார் வசந்தா மற்றும் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெண்ணியப்பன், சந்திரா , மாரியப்பன் ஆகியோர் விஷசாராயம் குடித்ததில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து நேற்று மட்டும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கத்தை சேர்ந்த சங்கர், பெருங்கரணையை சேர்ந்த தம்பு, முத்து ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலி, ராஜீவ் உள்பட 4 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் பா.ஜனதா நிர்வாகி சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சித்தாமூர் அருகே உள்ள விளம்பூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர் பா.ஜ னதா கட்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் ஓ.பி.சி அணியின் தலைவராக இருந்தார். அவருக்கு கள்ளச்சாராயம் விற்ற கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? மெத்தனால் எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? சாராயம் தயார் செய்யப்பட்டதும் எந்தெந்த பகுதியில் விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?யார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக மேலும் கருக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அமாவாசை, பனையூரை சேர்ந்த ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு ஆகிய 4 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் கைதான பா.ஜனதா நிர்வாகி விஜயகுமார் உள்பட 5 பேரையும் சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 6 பரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதான கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளசாராயம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.






