என் மலர்
செங்கல்பட்டு
- கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது.
- ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
கோயம்பேடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணி நடந்து வருகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் அருகிலேயே ஆம்னி பஸ்நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ்நிலைய பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்து உள்ளன. இதனை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வந்தார். எனவே இந்த மாதத்தில் புதிய பஸ்நிலையம் திறப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பஸ்நிலையத்தின் பின்புறத்தில் அய்யன்சேரி வழியாகச் சென்று ஊரப்பாக்கம் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சாலை அமைத்தால் வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும்போது ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் மாற்று சாலையை கருத்தில் கொண்டு அந்த சாலை பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பஸ்நிலைய பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை.
தேங்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஸ்நிலையத்தின் முன்பகுதியிலும் பஸ்கள் செல்ல சாலைப்பணி இன்னும் முழுமையாக முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும்போதும், பயணிகளை ஏற்றி சென்று மீண்டும் செல்லும் போதும் அந்த வாகனம் இரண்டு முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் நிலை உள்ளது. எனவே ஆம்னி பஸ் நிலைய இடத்தையும் கைவிட்டு உள்ளனர். ஆம்னி பஸ்களுக்கான இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதேபோல் பஸ்நிலைய மேற்கூரை பணிகளும் பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம் மற்றும் கடைகள் பணியும் முடிவடையாததால் கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது.
- மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் தற்போது அதிகளவில் வலைகளில் சிக்கி வருகிறது.
இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றது. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. பலாசி மீன்கள் விலை போகாததால் அவைகளை கரையோரம் வீசி விடுவார்கள். இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிதித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதை அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது.
- காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார்.
இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை தன்மை இருப்பது உறுதியானது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவுப்படி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தில் மேலும் அதிரடி விசாரணை நடத்தினர்.
இதில் காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து வீரமணியை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பகத்தை போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வந்ததால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- கடற்கரை ஓரங்களில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உருவாகி வருகிறது.
- கட்டிடங்கள் கடல்நீரால் சேதமடையாமல் இருக்க ஏற்கனவே கருங்கற்கள் போடப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் காலையில் இருந்தே விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலைகள் வேகமாக எழுந்ததால் கடற்கரை ஓரங்களில் உள்ள ஹோட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உருவாகி வருகிறது.
கடலோரத்தில் இருக்கும் கட்டிடங்கள் கடல்நீரால் சேதமடையாமல் இருக்க ஏற்கனவே, கட்டிடங்கள் அருகில் கருங்கற்கள் போடப்பட்டது. இன்று அதையும் தாண்டி அலைகள் மோதின.
இதுபோன்று கடல் சீற்றங்களால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் தூண்டில் வளைவு கட்ட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
- தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
மேடவாக்கம் அடுத்த ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). எலக்ட்ரீசியன். இவர் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம், கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
- பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.
செங்கல்பட்டில் இப்போது உள்ள பஸ் நிலையம் மிகுந்த நெருக்கடியான இடத்தில் உள்ளது. இதனால் அங்கு புதிய பஸ் நிலையம் வெம்பாக்கம் ஏரி அருகே மெயின்ரோட்டுக்கும் பி.வி.களத்தூர் ரோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்திற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே. சேகர்பாபு ஆகிய இருவரும் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.
பஸ் நிலையம் 14 ஏக்கரில் அமையும் பகுதியில் ரோட்டுக்கு மருத்துவக் கல்லூரி மைதானம் அருகே எதிர்புறம் காலி இடம் ஏக்கர் கணக்கில் உள்ளதால் அங்கு 5.64 ஏக்கரில் பஸ் டெப்போ (பணிமனை) அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ்கள் வந்து செல்லவும் பணிமனைக்கு செல்லவும் தாராளமாக இடவசதி இருப்பதால் இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செங்கல்பட்டில் புதிதாக அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணி மனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது.
மேலும், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டது.
- காஞ்சிபுரத்தில் 28.40 மி.மீட்டர் மழை பதிவானது.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டியது.
மாமல்லபுரத்தில் 2-வது நாளாக இன்றும் காலையில் இருந்தே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது படகு, வலைகளை உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடல் அலைகள் கடற்கரை ஓர கட்டிடங்கள் வரை வேகமாக வருவதால் கரையோரங்களில் உள்ள ஓட்டல், விடுதிகளில் கடல்நீர் புகும் நிலை உள்ளது.
விடுமுறைநாளான நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டது. கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, கோவளம் சாலை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கழுக்குன்றத்தில் 48 மி.மீட்டர் மழை பதிவானது. செங்கல்பட்டில் 21 மி.மீட்டர், செய்யூர்-16மி.மீட்டர், கேளம்பாக்கம்-6.8மி.மீட்டர், மாமல்லபுரம்-38 மி.மீட்டர், மதுராந்தகம்-26மி.மீட்டர், திருப்போரூர்-6மி.மீட்டர், தாம்பரம்-2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு திடீரென பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மேட்டு தெரு, டோல்கேட் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. இன்று காலையும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 28.40 மி.மீட்டர் மழை பதிவானது. உத்தரமேரூரில்-10மி.மீட்டர், வாலாஜாபாத்-26.20மி.மீட்டர், ஸ்ரீபெரும்புதூர்-10.40மி.மீட்டர், செம்பரம்பாக்கம்-2மி.மீட்டர் மழை பெய்து உள்ளது.
- மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
- சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ரகமத் மகால் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடக்கிறது.
மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்களும், எம்.எல். ஏ.க்களுமான இ.கருணாநிதி எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மநாகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், கழக அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
மதுராந்தகம்:
திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
காலை 5.30 மணியளவில் அரசு பஸ் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லேசாக மழை பெய்தது.
இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென முன்னாள் சென்று கொண்டு இருந்த திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்சின் பின்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் கணேஷ் நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 46) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த திருவண்ணாமலை போகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சதீஷ், சைதாப்பேட்டை கேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரவண சங்கர், மாரியப்பன், சென்னை சூளையை சேர்ந்த வினோத் குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அதிகாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த 2 பஸ்களையும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதமானதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- போலீசார் வழிப்பறி வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவரை கைது செய்தனர்.
மறைமலைநகர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசார் வழிப்பறி வழக்கில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
- இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
டாக்டர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, ஒத்தடம், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இதில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.
- முகாமில் விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
தேசிய மருத்துவர்கள் தினமான இன்று மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள், பாசி, மணி விற்கும் நரிக்குறவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, மசாஜ், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.






