என் மலர்
செங்கல்பட்டு
மதுராந்தகம்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 58). டிராக்டர் டிரைவர். இவர் சென்னை செம்பியத்தில் இருந்து நேற்று இரவு புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அச்சரப்பாக்கம் அருகே உள்ள அரப்பேடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது.
அப்போது பின்னால் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டர் நொறுங்கி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ்சின் முன் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டு முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பலியான ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையோர பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கடல் மீன்கள் அனைத்தும் வெள்ளத்தால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.
இதனால் தற்போது பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வலையில் உணவுக்கு பயன்படாத சிறிய வகை மீன்கள் மட்டுமே பிடிபடுகிறது.
இந்த மீன்களை விற்கவும், பயன்படுத்தவும் முடியாததால் மீனவர்கள் அதனை சாலையோரத்தில் குவியலாக கொட்டிவிட்டு செல்கிறார்கள். நெத்திலி மீனை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள்.
இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வலை வீசி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் போதிய வருமானம் இல்லாததால் தவிக்கிறார்கள். பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த மீன்கள் கடலுக்குள் சென்றதால் மீன்கள் சிக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு:
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பயணம் செய்தனர்.
அதிகாலை 6 மணி அளவில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே உள்ள புலிப்பாக்கம் பாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தது.
அப்போது கார் மீது லாரி உரசியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் புலிப்பாக்கம் பாலத்தில் மோதி நின்றது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் காரில் இருந்த வர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை உடனடியாக இயக்க முடியாததால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்தன.
இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானதும் மீண்டும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.






