என் மலர்
உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்- டிரைவர் பலி
மதுராந்தகம்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 58). டிராக்டர் டிரைவர். இவர் சென்னை செம்பியத்தில் இருந்து நேற்று இரவு புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அச்சரப்பாக்கம் அருகே உள்ள அரப்பேடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது.
அப்போது பின்னால் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டர் நொறுங்கி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பஸ்சின் முன் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டு முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பலியான ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






