என் மலர்
உள்ளூர் செய்திகள்

புலிப்பாக்கம் பாலத்தில் கார் மோதி விபத்து: பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்
செங்கல்பட்டு:
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பயணம் செய்தனர்.
அதிகாலை 6 மணி அளவில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே உள்ள புலிப்பாக்கம் பாலத்தில் கார் வந்து கொண்டு இருந்தது.
அப்போது கார் மீது லாரி உரசியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் புலிப்பாக்கம் பாலத்தில் மோதி நின்றது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் காரில் இருந்த வர்கள் லேசான காயத்துடன் தப்பினர். காரை உடனடியாக இயக்க முடியாததால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்தன.
இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக வாகனங்கள் அனைத்தும் சுங்க கட்டணம் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானதும் மீண்டும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.






