என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    நெல்லையில் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராய கல்வித்துறை உத்தரவிட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆதிதிராவிட நலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது

    இதில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் 41 பழுதடைந்த கட்டிடங்கள், பொதுப் பணித்துறை பராமரிப்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 119 பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் , ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 666 பழுதடைந்த கட்டிடங்கள் என மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 173 கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பதவி வகித்து வருபவர் கவுரி சங்கர் (வயது 40). இவர் தொழில் வாய்ப்பு உருவாக்கி தரும் நிறுவனம் நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

    இவர் வேலை வாங்கி தருவதாக பல நபர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டது. இதனால் இவர் அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

    இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். தனது கம்பெனியில் முதலீடு செய்தால் லாபத்தில் பெரிய அளவு பங்கு தரப்படும் என்று கவுரிசங்கர் விளம்பரப்படுத்தினார். இதனால் இவரது கம்பெனியில் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமானோர் முதலீடு செய்தனர். முதலீடு செய்த யாருக்கும் லாபத்தில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக புகார்கள் எழுந்தன.

    இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 175 பேர் வரை புகார் கொடுத்தவர்கள் பட்டியலில் உள்ளனர். தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ரூ.30 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கவுரிசங்கர் தான் நடத்தி வந்த கம்பெனியின் இயக்குனராக இருந்தார். நிர்வாக இயக்குனர்களாக பெரும்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் சுரேந்திரன் (40), சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த லட்சுமி (35) ஆகியோர் செயல்பட்டனர். கவுரிசங்கர், சுகுமார் சுரேந்திரன் மற்றும் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் டேங்கர் லாரியில் ஏற்பட்ட ஆசிட் கசிவால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று அதிகாலை, 1 மணியளவில் பாண்டிச்சேரியில் இருந்து மணலியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கெமிக்கல் ஏற்றிய டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென லாரியில் இருந்து புகையுடன் ஆசிட் கசிவு ஏற்பட்டது. இதனை பாத்ததும் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். இதனால் லாரியை பின் தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

    அவர்கள் வாகனங்களை திருப்பி கல்பாக்கம் நோக்கி திரும்பி சென்றனர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து புகையுடன் கசிவான ஆசிட் லாரி மீது தண்ணீரை பீச்சியடித்து, புகையை கட்டுப்படுத்தினர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணுஉலை பாதுகாப்பு பகுதி அருகில் டேங்கர் லாரியில் கெமிக்கல் கசிவு ஏற்பட்டதால் அணு மின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் அங்கு வந்தனர்.

    டேங்கரில் திடீரென சிறு ஓட்டை விழுந்ததால் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. லாரி தீப்பிடித்து எரிந்திருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து ஏற்படவில்லை. பின்னர் மாற்று டேங்கர் லாரியில் போலீஸ் பாதுகாப்புடன் கெமிக்கல் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
    செங்கல்பட்டு அருகே கத்தி முனையில் பணம், செல்போன் பறித்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர், மீன் வாங்குவதற்காக கோவளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, ஒரு ஆட்டோவில் இவரை பின் தொடர்ந்து வந்த 8 பேர் திடீரென வேல்முருகனை வழிமறித்தனர்.

    பின்னர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்து கொண்டு, வந்த ஆட்டோவிலேயே கண்இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து வேல்முருகன் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்தனர்.

    மர்ம நபர்கள் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் கண்ட போலீசார் தாம்பரம், மண்ணிவாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் பதுங்கி இருந்த மண்ணிவாக்கம், முடிச்சூர் பகுதிகளை சேர்ந்த பாரத் (19), விஷால் (19), சந்தோஷ் (19) மற்றும் 18 வயதான 4 பேர், 17 வயதான ஒருவர் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.
    புதுப்பட்டினத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி நகை மற்றும் ஒரு செல்போன் போன்றவை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் புவனேஸ்வர் நகரை சேர்ந்தவர் காலுஷா (வயது 64) இவர் கடந்த 9-ந் தேதி பூந்தமல்லி பகுதியில் உள்ள தனது மகன் மற்றும் மகளை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றுமுன்தினம் பிற்பகல் புதுப்பட்டினத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அவரது வீட்டின் ஜன்னலை யாரோ மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி நகை மற்றும் ஒரு செல்போன் போன்றவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கால தாமதமாக ரெயில் வருவதை கண்டித்து செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மின்சார ரெயில்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணம், திருமால்பூர், காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று மாலை சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் பயணம் செய்த பொதுமக்கள் பாலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது இறங்கி தண்டவாளத்தில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் பயணிகளிடம் கேட்டபோது, தினந்தோறும் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில் கால தாமதமாக இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்ல முடியவில்லை எனவும், ஆங்காங்கே ரெயில்களை நிறுத்தி வைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையயத்திலும் பயணிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் 2 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையிலான ரெயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் பயணிகள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்று இரவு திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திடீர் மறியல் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

    போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 74 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,543 ஆக உயர்ந்துள்ளது. 567 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 207 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அமைச்சர் எ.வ.வேலு உத்தரவை தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக 2 மணி நேரத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.
    செங்கல்பட்டு:

    கடந்த மாதம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருங்குன்றம் பகுதியில் உள்ள பாலாற்று மேம்பாலம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த பாலமானது கட்டப்பட்ட நிலையில், தற்போது பெய்த கனமழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு கடுமையான சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

    இதனால் இங்கு பயணிக்கும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதால் நாள்தோறும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். அப்போது இப்பாலம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்தார். இந்தநிலையில் அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக 2 மணி நேரத்தில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.


    தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    தாம்பரம்:

    சென்னையையொட்டி உள்ள தாம்பரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாகன பெருக்கத்தின் காரணமாக தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்வதற்கு வசதியாக சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக முன்மொழியப்பட்ட ஆய்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அரசு ரூ.50 லட்சத்தை அறிவித்துள்ளது.

    கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை தேசிய சாலையில் வருகிறது. இதன் மூலம் சேலையூர் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் போக்குவரத்திற்கு காத்திருக்காமல் எளிதில் கடந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    கூடுவாஞ்சேரி போலீஸ்நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    கூடுவாஞ்சேரி:

    சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் சென்றிருந்தார்.

    நேற்று மாலை அவர்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரில் பெண்கள் உள்பட 4 பேர் இருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை 7.45 மணியளவில் கூடுவாஞ்சேரி போலீஸ்நிலையம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த இசக்கி உள்பட 4 பேரும் உடனடியே கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் தீப்பற்றியவுடன் அதில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மறைமலைநகரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    வண்டலூர்:

    மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் மற்றும் மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி, கீழக்கரணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
    ×