search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடி- ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கைது

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.30 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பதவி வகித்து வருபவர் கவுரி சங்கர் (வயது 40). இவர் தொழில் வாய்ப்பு உருவாக்கி தரும் நிறுவனம் நடத்தி வந்தார். ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.

    இவர் வேலை வாங்கி தருவதாக பல நபர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் கூறப்பட்டது. இதனால் இவர் அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

    இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். தனது கம்பெனியில் முதலீடு செய்தால் லாபத்தில் பெரிய அளவு பங்கு தரப்படும் என்று கவுரிசங்கர் விளம்பரப்படுத்தினார். இதனால் இவரது கம்பெனியில் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமானோர் முதலீடு செய்தனர். முதலீடு செய்த யாருக்கும் லாபத்தில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக புகார்கள் எழுந்தன.

    இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 175 பேர் வரை புகார் கொடுத்தவர்கள் பட்டியலில் உள்ளனர். தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ரூ.30 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கவுரிசங்கர் தான் நடத்தி வந்த கம்பெனியின் இயக்குனராக இருந்தார். நிர்வாக இயக்குனர்களாக பெரும்பாக்கத்தை சேர்ந்த சுகுமார் சுரேந்திரன் (40), சிங்கப்பெருமாள் கோவிலை சேர்ந்த லட்சுமி (35) ஆகியோர் செயல்பட்டனர். கவுரிசங்கர், சுகுமார் சுரேந்திரன் மற்றும் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×