என் மலர்
செங்கல்பட்டு
திருநீர்மலையில் ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 19-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கோவிலை சுற்றி உள்ள 4 மாட வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேரோட்டம் நடைறெ உள்ள சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்பட்டன. இதனால் திருத்தேரை 4 மாட வீதிகளில் பக்தர்கள் இழுத்து செல்வதில் சிரமம் ஏற்படும் சூழல் இருந்தது.
இதனால் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் ரூ.9.60 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கிழக்கு, வடக்கு மாட வீதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் பூங்காவில் சுமார் 2400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பூங்காவில் உள்ள 13 வயதுடைய வெள்ளை புலிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் கால்களின் இயக்கமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.
மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது வெள்ளை புலிக்கு அட்டாக்ஸியா நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வெள்ளை புலியை தனியாக கூண்டுக்குள் வைத்து கடந்த 2 வாரத்துக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே உணவு சாப்பிட முடியாமலும், அதன் கால்களின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கின.
இதனால் வெள்ளை புலியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வெள்ளைப் புலி பரிதாபமாக இறந்தது.
அதன் உடலை பரிசோதனை செய்தபோது ஏதேனும் நோய் தாக்குதல் இருந்ததா? என்று கண்டறிய வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரை தூய்மை பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் தினகர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கல்பாக்கம் அணுசக்தித் துறை, கழிவு மேலாண்மை பொறியாளர் உட்பட 13 கடலோர பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அரசு நிதியுதவியுடன் 13 கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை அள்ளுவதற்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட, கடல் மண்ணிலும், நீரிலும் புதையாத வாகனத்தை., அடுத்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கிழக்கு கடற்கரை சாலை கடலோர கிராமம் பட்டிபுலத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள புராதன சின்னங்கள் அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு, அருகே உள்ள கடம்பாடி, வெண்புருஷம் கிராமங்களுக்கு சைக்கிள்உலா சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை பார்த்து செல்வது வழக்கம்.
கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக , சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டவர் வருகை தடைபட்டு சுற்றுலா தொழில் முடங்கியது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மாமல்லபுரம் பகுதிக்கு வெளி நாட்டினர் சுற்றுலா வருவது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா கார் டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டினர் வருகையால் மாமல்லபுரத்தில் மீண்டும் சுற்றுலா தொழில்களைகட்ட தொடங்கி உள்ளது.
வேளச்சேரி:
மேடவாக்கம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணியின்போது மேடவாக்கம் ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள ராமதாஸ் தெரு ராமதாஸ் குறுக்கு தெரு, சோழன் தெரு, பாண்டியன் தெரு ஆகிய இடங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. 8 மாதத்திற்கு மேல் ஆகியும் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் 1-வது வார்டு உறுப்பினர் அம்மு கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் லாரிகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (29). இவருடைய சகோதரர் சத்யா என்கிற ஹெட்லைட் சத்யா (20).
சத்யா மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் வழிபறி, அடிதடி, கொலை முயற்சி போன்ற 11 வழக்குகள் உள்ள நிலையில் சத்யாவிற்கும் அவரது அண்ணன் முருகேசனுக்கும் தென்காசியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவதத்தில் சத்யா சகோதரரை கொலைசெய்யும் நோக்கில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதில் முருகேசேனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளியான சத்யாவை கைது செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 65). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை 9 மணியளவில் அவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது மர்ம கும்பல் திடீரென உமாபதியை வழிமறித்தனர். அவரை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உமாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு உமாபதி தனது சொத்துக்களை மகளின் குழந்தைகளுக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதற்கு உமாபதியின் மகன் சரவணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் உமாபதிக்கும் அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கன்னிவாக்கத்தில் மகனுடன் இருந்த உமாபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயரம்பேடு பகுதியில் உள்ள வீட்டில் பேரன் பேத்திகளோடு தனியாக தங்கி இருந்தார்.
இந்த நிலையில் உமாபதி வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உமாபதியின் மகன் சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் பின்னரே கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து தெரியவரும்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அருகே இறால் பண்ணை உள்ளது. இங்கு காவலாளியாக பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது49) வேலை பார்த்து வந்தார்.
சீனிவாசனின் குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இதனால் அவர் மட்டும் இறால் பண்ணையில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இறால் பண்ணையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சீனிவாசன் மர்மமாக இறந்து கிடந்தார். பணிக்கு வந்த மற்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் உள்ளன.
இதனால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. சீனிவாசனின் சாவு குறித்து பெங்களூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவலாளி சீனிவாசனுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்து இறால் பண்ணை தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நடனத்துடன் மதுவிருந்து நடப்பது அதிகரித்து உள்ளது.
போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி மது விருந்து நடத்தும் ஓட்டல்கள், வீடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பனையூர் அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று இரவு மது விருந்தில் கலந்து கொண்ட 500 பேர் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் மது விருந்து நடப்பதாக நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் அந்த விடுதிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மது போதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மது விருந்தில் பங்கேற்ற அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆவர்.
இரவு முதல் விடிய, விடிய பெண்கள் நடனத்துடன் மதுவிருந்து நடந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இந்த சோதனையில், மது விருந்தில் நடனமாடிய 50 பெண்களும் சிக்கி உள்ளனர். விடுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிகமானோர் மொத்தமாக கூடி மதுவிருந்து நடத்திய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மது விருந்தில் பங்கேற்று பிடிபட்ட அனைவருடைய தகவல்களையும் போலீசார் சேகரித்து பதிவு செய்தனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் தனியாக அமர்ந்து மது விருந்தில் பங்கேற்றவர்களிடம் விவரங்களை கேட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்டமாக காணப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். மதுவிருந்து நடத்திய விடுதி மேலாளர் சைமனை போலீசார் கைது செய்தனர். மேலும் சொகுசு விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பு மற்றும் நூதன முறையில் பேசி பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல் பணத்தை சுருட்டும் சம்பவம் அதிகரித்தது.
இதையடுத்து இந்த வழக்குகள் மீது தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் டேனியல், சுதாகர், குருநாதன், சங்கர், சிவா, கலைவாணன், தேவனாதன், முரளி, லெலின், பரத் மற்றும் பெண் போலீஸ் ராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த 2021 மற்றும் 2022- ம் ஆண்டுகளில் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான 267 வழக்குகளில் மொத்தம் 176 செல்போன்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 176 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஒப்படைத்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறியதாவது:-
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் ரூ.19 லட்சத்து 130 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொது மக்கள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மைதன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். சந்தேக நபர்களிடம் இருந்து வரும் எஸ்.எம்.எஸ் மற்றும் வெப்சைட்களில் வரும் லிங்குகளில் சென்று செல் நம்பர் வங்கி கணக்கு எண், ஒ.டி.பி, டெபிட்- கிரடிட் கார்டு சி.சி.பி. போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலும் சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் பதிவிடவும்.
சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்பு களுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






