என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 176 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பு மற்றும் நூதன முறையில் பேசி பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து மர்ம கும்பல் பணத்தை சுருட்டும் சம்பவம் அதிகரித்தது.
இதையடுத்து இந்த வழக்குகள் மீது தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் டேனியல், சுதாகர், குருநாதன், சங்கர், சிவா, கலைவாணன், தேவனாதன், முரளி, லெலின், பரத் மற்றும் பெண் போலீஸ் ராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த 2021 மற்றும் 2022- ம் ஆண்டுகளில் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான 267 வழக்குகளில் மொத்தம் 176 செல்போன்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 176 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஒப்படைத்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறியதாவது:-
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு எதிரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் ரூ.19 லட்சத்து 130 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொது மக்கள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மைதன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். சந்தேக நபர்களிடம் இருந்து வரும் எஸ்.எம்.எஸ் மற்றும் வெப்சைட்களில் வரும் லிங்குகளில் சென்று செல் நம்பர் வங்கி கணக்கு எண், ஒ.டி.பி, டெபிட்- கிரடிட் கார்டு சி.சி.பி. போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலும் சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் பதிவிடவும்.
சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்பு களுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






