என் மலர்
செங்கல்பட்டு
சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டி புண்ணியம், பகத்சிங் நகரை சேர்ந்தவர்கள் மோகன் (வயது18), பிரகாஷ் (19), அசோக்குமார் (20).
இவர்கள் 3 பேரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நின்றனர். அப்போது அவர்கள் தங்களது செல்போனில் செல்பி வீடியோ எடுத்தனர்.
அந்தநேரத்தில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற பயணிகள் ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் மோகன், அசோக்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.
இவர்களில் அசோக் குமாரும், பிரகாசும் கல்லூரி மாணவர்கள் ஆவர். அசோக் குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். பிரகாஷ் டிப்ளமோ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தார்.
நண்பர்கள் 3 பேரும் புதிதாக அமைக்கப்பட்ட 3-வது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளனர். ரெயில் வருவதை கவனிக்காததால் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
செல்பி மோகத்தில் மாணவர்கள் உள்பட 3 பேரும் உயிரை பறிகொடுத்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 3 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போது இந்திய அணுசக்தி துறை பாவிணி என்ற பெயரில் கூடுதலாக ஒரு அணு உலை கட்டி வருகிறது. அணு உலைகளின் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்த போது அங்குள்ள பழைய தீயணைப்பு வாகனங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நவீன வசதிகள் கொண்ட இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று முதல் பயன் பாட்டிற்கு வந்தது.
இந்த தீயணைப்பு வாகனத்தில் 120அடி உயரமான ஐடிராலிக் ஏணி, ரேடார் இணைப்புடன் கூடிய அபாயமணி, பொது மக்கள், கால்நடைகள், வாகனங்கள் மீது கதிர்வீச்சு படிந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த அதிவேகமாக தண்ணீர் பீச்சி அடிக்கும் மோட்டார்கள், அணுஉலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையின் நேரடி ஆன்லைன் தொடர்பு என புதிய நவீன வசதிகள் இதில் உள்ளன.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 36). இவரது 7 வயது மகன் அஜிஸ்.
நேற்று மாலை லாரன்ஸ் தனது மகனுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். லாரன்ஸ் மட்டும் குளத்தில் இறங்கி குளித்துகொண்டு இருந்தார். அவரது மகன் அஜிஸ் கரையில் இருந்தார்.
இந்த நிலையில் குளித்தில் ஆழமான பகுதிக்கு சென்ற லாரன்ஸ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் அஜிஸ் அலறியடித்து வீட்டில் இருந்த தாய்க்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு குளத்தில் மூழ்கிய லாரன்சை தேடினர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அளித்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து லாரன்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். மகன் கண் முன்பு தந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலுர்:
கேளம்பாக்கம் அருகே உள்ள மேலக்கோட்டைய னூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). தனியார் நிறுவன ஊழயர்.
இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் கல்குவாரி சந்திப்பில் வந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் அடுத்தடுத்து மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானர். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (40) என்பவரும் பலியானார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கல்லூரி வேன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது40). கட்டிட தொழிலாளி. வீட்டில் இருந்த அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வக்கீல் பொற் செழியன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் பூவிழி, நகர ஒருங்கிணைப்பாளர் சாமு வேல், நகர செயலாளர்கள் ராமானுஜம், ஆதிசாலமன், திருநீர்மலை தமிழரசன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் அதனை சமாளிக்க விலங்குகள், பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு குரங்குகள், மயில்கள் உள்பட பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களில் சவுக்கு கம்புகள் வைத்து அவை மகிழச்சியுடன் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. கிளிகளுக்கு ஏணிப்படிகளும் அமைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க குழாய்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு குளிர்பானம் முறையில் கொடுக்கப்படுகிறது. தண்ணீர் தொட்டியில் மனித குரங்கு உல்லாச குளியல் போடுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கிறார்கள்.
பறவைகளுக்கு அதன் இருப்பிடங்களை சுற்றி சணல் கோணிப்பைகள் சுற்றி கட்டப்பட்டு ஷவர் குளியல் வைக்கப்பட்டு உள்ளன. கோடை வெயிலின் தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க ஊழியர்கள் அவ்வப்போது கவனித்து வருகின்றனர்.
சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி, யானைகளுக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியலும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளுக்கு மதியம் 11 மணி, 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
வனவிலங்குள், பறவைகளுக்கு கோடை வெயிலின் தாக்கம் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் விலங்குள் தங்களுக்கான ஷவரில் சூட்டை தணிக்க அவ்வப்போது உல்லாச குளியல் போட்டு வருகிறது.
இதேபோல் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை குளிரூட்டும் விதமாக சிறியகுழாய்கள் பாதையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து தண்ணீர் சாரல் போல் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. தினந்தோறும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்குள்ள புராதன சின்னங்களை நடந்து சென்று சுற்றிப்பார்ப்பதில் முதியோர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் பகுதிகளை முதியோர்கள், மாற்று திறனாளிகள் சுற்று பார்ப்பதற்கு வசதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது.
முதல்கட்டமாக கடற்கரை கோவிலில் இருந்து 300 மீட்டர் தூரத்திற்கு 5 பேட்டரி வாகனங்கள் இன்னும் ஓரிரு வாரத்தில், இயக்கப்பட உள்ளது. இதற்கான போட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த வாகனங்கள் சூரிய ஒளியால் சேமிக்கப்படும் மின்சாரம் மூலம், பேட்டரியால் இயங்கக்கூடியது. இதை தயாரித்த பெங்களூரு நிறுவனம், தற்போது மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஓட்டிப்பார்த்து அதற்கான ஓட்டும் பயிற்சியும் கொடுத்து வருகிறது. பேட்டரி வாகன பயணத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கொத்தனார்.
இவர் நேற்று மாலை தாம்பரம் பகுதிக்கு வந்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக கிஷ்கிந்தா சாலையில் வந்தார். பின்னர் அங்குள்ள மதுபான கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் செல்போன், பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து வெங்கடேசன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தாம்பரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த வருண் குமார், ஜான் மேத்தியூஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக 2 பேரை தேடி வருகின்றனர்.






