என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சந்திப்பில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு சாலையை நோக்கி சென்று கொண்டிருந்த மேட்டூர் டிராவல்ஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஜி.எஸ்.டி.சாலையில் அமைந்துள்ள வங்கியின் நுழைவு வாயில் மீது மோதி கவிழ்ந்தது.

    இதில் அதிஷ்டவசமாக லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வங்கி காவலாளியும் நுழைவு வாயிலில் இருந்து சற்று தள்ளி தொலைவில் இருந்ததால் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தி கொண்டே இருந்தனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து ரசிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியதால் கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. பார்க்கின்ற இடங்களில் எல்லாம் சுற்றுலா பயணிகள் தலைகளே தென்பட்டன.

    கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததை காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக தங்கள் பெற்றோர்களுடன் தொடர் விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததையும் காண முடிந்தது.

    கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

    தாம்பரம் கமி‌ஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனை நடை பெற்றது.


    தாம்பரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க போலீஸ் கமி‌ஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் தாம்பரம் கமி‌ஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனை நடை பெற்றது.

    இதில் தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் பிடிபட்டனர். போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 18 ரவுடிகள் பிடிபட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 103 பேர் பிடிபட்டனர். 107, 109, 110 குற்றவியல் நடை முறை சட்டத்தின் கீழும் சுமார் 100 குற்றவாளிகளிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனையின் போது கார், மோட்டார் சைக்கிள் உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர். மொத்தம் 1733 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப் பட்டதில் விதிமுறைகளை மீறிய பலரும் பிடிபட்டனர்.

    மது போதையில் வாகனத்தை ஓட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டிச்சென்ற 140 பேரும் வேகமாக சென்ற 5 பேரும் பிடிபட்டனர்.

    செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய 20 பேரும் சிக்கினார்கள். 95 லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சும், மாமல்லபுரம்- பிராட்வே ஓ.எம்.ஆர் வழித்தட பஸ்சும் கூட்டம் இல்லை என்று காரணம் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் இருந்து வெங்கம்பாக்கம், குன்னத்தூர், மணமை, கடும்பாடி, பூஞ்சேரி, வழித்தடத்தில் மாமல்லபுரம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சும், மாமல்லபுரம்- பிராட்வே ஓ.எம்.ஆர் வழித்தட பஸ்சும் கூட்டம் இல்லை என்று காரணம் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் ஷேர் ஆட்டோக்களில் மட்டுமே பயணம் செய்யும் நிலை இருந்தது. இரவு 7 மணிக்கு மேல் ஆட்டோக்களும் கிடையாது. இதனால் அப்பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு வேலைக்கு வருவோர் சிரமத்துடன் பயணம் செய்து வந்தனர்.

    தற்போது டீசல், பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டியும் பஸ் கிடையாது என்பதாலும், ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. நிறுத்தப்பட்ட கல்பாக்கம் பணிமனை தடம் எண் 115, 118, 119, 118, 519 வழித்தட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

    மாணவிகளின் புகாரையடுத்து அவர் மீது மொத்தம் 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்குகள் அனைத்தும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு மற்றும் கூடுதல் மகிளா அமர்வு கோர்ட்டில் நடந்தது.

    இந்த வழக்குகளில் 4 போக்சோ வழக்குகளுக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டும், 2 வழக்குகளுக்கு கூடுதல் மகிளா அமர்வு கோர்ட்டும் ஜாமீன் வழங்கி இருந்தது.

    முதல் போக்சோ வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கில் அவருக்கு செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

    தற்போது வரை 8-வழக்குகளில் 7-வழக்குகளுக்கு ஜாமீன் பெறப்பட்டுள்ள நிலையில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் ஜாமீன் அளிக்கப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்த முதல் போக்சோ வழக்கு விசாரணைக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா நேற்று ஆஜரானார். அப்போது நீதிபதி வழக்கு விசாரணையை இந்த மாதம் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் கொங்கனாஞ்சேரி -எழுச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    தாம்பரம், மண்ணிவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பெருங்ளளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை கொட்டியது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

    படப்பை, முடிச்சூர், ஆதனூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. இதேபோல் தாம்பரம், மண்ணிவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பல்லாவரம், பெருங்ளளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், மற்றும் வாகன ஒட்டிகள் நனைந்தபடி சென்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சிறிது நேரத்துக்கு பின்னர் மேகமூட்டங்கள் மறைந்து மீண்டும் வெயில் வாட்டியது.

    கூடுவாஞ்சேரி அருகே ரெயில்வே மேம்பாலத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி நகராட்சி வள்ளுவர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(41) டிரைவர். இவர் தனது டிராக்டரில் ரக்பீஸ் ஏற்றிக்கொண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கூலித்தொழிலாளி சரவணன்(35) என்பவர் அருகில் உட்கார்ந்து கொண்டு சென்றார்.

    கூடுவாஞ்சேரி ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது அங்கிருந்த வேகத்தடையை கண்டதும் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    இதில் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். டிரைவர் கீழே விழுந்து லேசான காயத்துடன் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார்.

    விபத்துக்குள்ளான டிராக்டர் வெளியே மேம்பாலத்தின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்தரத்தில் தொங்கிய டிராக்டரை மீட்டனர். இதுகுறித்த சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருநீர்மலை பெருமாள்கோவில், விமானப்படைதளம், ரெயில் நிலையம், எம்.ஐ.டி. கல்லூரி தோற்றத்துடன் தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியை ஒட்டிய 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில் மாநகராட்சி முதல் மேயராக வசந்தகுமாரி, துணை மேயராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    அந்த லோகோவில் தாம்பரத்தில் செயல்படும் இந்திய விமானப்படை பயிற்சி மையம், 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், 3-வது முனையம் அந்தஸ்து பெற்ற தாம்பரம் ரெயில் நிலையம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டி. கல்லூரியின் தோற்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆன்மிகம், படிப்பு, போக்குவரத்து, வீரம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருநீர்மலை கோயில், 108 திவ்ய தேசங்களில் 61-வது ஸ்தலமாகும். உலக அளவில் போற்றப்படும் நமது நாட்டின் ராணுவ விமான இயக்கும் பயிற்சி, தொழிற்பயிற்சி, தள பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளும் தாம்பரம் விமானப் படை மையம் உள்ளது. எம்.ஐ.டி. கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை கல்லூரியாக, 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இஸ்ரோ குழும நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த சிவன் ஆகியோர் படித்த கல்லூரி என்ற பெருமையும் உண்டு.

    தாம்பரம் ரெயில் நிலையம் இந்திய ரெயில்வே துறையில் தென்னிந்திய அளவில் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. இது, 1931-ம் ஆண்டு நிறுவப்பட்ட ரெயில் நிலையம் ஆகும் இது போன்று தாம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளின் பெருமைகளை அடக்கிய லோகோ தாம்பரம் மாநகராட்சிக்கு புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    பத்தாண்டுகளாகப் பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்து மாதத்தில் தலை நிமிர வைத்துள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்
    மறைமலை நகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மட்டும் நாம் நிறைவேற்றிக் காட்டினால், தமிழ்நாடு தலைநிமிரும் என்பது மட்டுமல்ல, தலைசிறந்த மாநிலமாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான நிதிநிலை அறிக்கை இது.

    ஆளும்கட்சியாக இருந்தாலும் தமிழகத்துக்கு பெற வேண்டிய உரிமைகளைத் தைரியமாக வாதாடியும் போராடியும் பெறுவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.

    நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்காக சட்டமுன்வடிவைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். 

    அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் வேலையைக் கூட சரியாகப் பார்க்க ஆளுநர்  மறுப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

    தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவித்தாக வேண்டும் என்று பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடத்தில் கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறேன். 

    இதே கோரிக்கையை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் குரல் எழுப்பி வருகிறார்கள்

    இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான். அப்படித்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. மாநில அரசுகளை புறக்கணிப்பதன் மூலமாக ஒரு கற்பனையான இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள். 

    இரண்டு நாட்களுக்கு முன்னால், இந்தி மொழியை ஆதரித்தும், இந்தியர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்கள். 

    இந்தி மாநிலம் மட்டும் அவருக்கு போதுமா? இந்திய மாநிலங்கள் அனைத்தும் வேண்டாமா? என்று நான் கேள்வி எழுப்பினேன்.  நான் மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்களும் இதே கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

    கேரள மாநிலத்தில் நான் பேசுகிறபோது, ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. நினைக்கிறது என்று கடுமையாக விமர்சித்து பேசினேன். இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இது இத்தனை ஆண்டுகளாக நிலைபெறுவதற்கு இந்தத் தன்மைதான் காரணம்.

    எனவே, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் நமக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. 

    நம்முடைய சமூகநீதியை மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. நம்முடைய மாநில சுயாட்சியை மற்ற மாநிலங்களும் பேசத் தொடங்கி இருக்கிறது. 

    நாம் இதுவரை பேசிய மொழி உரிமையை பிறமாநிலத் தலைவர்களும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். நம்முடைய பல்வேறு திட்டங்களை, பிறமாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார்.



    வார்டு பிரச்சினைகள் தொடர்பாக முதல் கூட்டத்திலேயே காரசாரமாக விவாதிக்க உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்தும் கடும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆகும். இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தது.

    இதனால் தி.மு.க.வை சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதையொட்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் நாளை காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு 171 ‘சப்ஜெக்ட்’ வைக்கப்படுகிறது.

    மாநகராட்சிக்கு தனியாக சின்னம் தயாரிக்கப்பட்டு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    வார்டு பிரச்சினைகள் தொடர்பாக முதல் கூட்டத்திலேயே காரசாரமாக விவாதிக்க உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்தும் கடும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது.

    கல்குவாரி பகுதிகளிலிருந்து அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இயங்கும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அமைக்க வனத்துறையினர் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

    வண்டலூர்:

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையோரத்தில் உள்ள கல்குவாரி பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்டு ரோட்டில் மணல் திட்டு மற்றும் புழுதி காணப்படுவதால் தொடர் விபத்து ஏற்பட்டு வந்தது.

    இதில் கடந்த மாதம் ஒரு கர்ப்பிணி ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய கல்லூரி பேருந்தை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த போலீஸ் உயர்அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    அதன் எதிரொலியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, தாம்பரம் ரேஞ்சர் வித்யாபதி, நெடுஞ்சாலைத்துறை மாவட்ட உதவி பொறியாளர் கோமதி, வண்டலூர் துணை தாசில்தார் ராஜா, தாம்பரம் போலீஸ் துணை கமி‌ஷனர் சி.பி.சக்கரவர்த்தி, போக்குவரத்து துணை கமி‌ஷனர் குமார் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் விபத்து நடந்த பகுதி மற்றும் வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் ஊரப்பக்கம்,நல்லம்பாக்கம் சாலை 14 கிலோ மீட்டர் கொண்டது.

    இதில் காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரை 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை 300 மீட்டரும், மேலும் நல்லம்பாக்கம் கிராமம் முதல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரை 2 கிலோ மீட்டர் கொண்ட சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த சாலை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு 12அடி தார் சாலையாக அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தாம்பரத்திலிருந்து கொளப்பாக்கம், நல்லம்பாக்கம் வழியாக கீரப்பாக்கம் வரை 55டி என்ற 2 மாநகர பேருந்துகள் இயங்கி வந்தது.

    இதில் ஒரு வழி சாலையான ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் கல்குவாரி மற்றும் கிர‌ஷர்களுக்கு இயங்கி வந்த லாரிகளால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2006-ம் ஆண்டு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் இருவழி சாலையாக நெடுஞ்சாலைத்துறை அமைத்தது. இதில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையை அமைக்க இருமடங்கு இடம் கொடுத்ததால்தான் சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என்று வனத்துறை தொடர்ந்து கூறி வந்தது. இதனால் சாலை அமைக்க முடியாததால் அனைத்து பேருந்துகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.

    இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கல்குவாரி பகுதிகளிலிருந்து அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இயங்கும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அமைக்க வனத்துறையினர் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

    இதுபற்றி சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சாலையை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் கருத்துக்களை தயாரித்து அதனை ஆன்லைனில் பதிவு செய்தால் சாலை அமைக்க நாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று எங்களது மேலிடத்திற்கு சட்டப்படி பரிந்துரை செய்வோம்” என்றார்.

    மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் சிக்னல் அமைக்கவும், சிசிடிவி கேமரா பொருத்தவும், சாலையோரத்தில் மின்விளக்குகள் பொருத்தவும், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதிக வேகத்துடன் செல்லும் டிரைவர்கள் மீது வழக்கு தொடரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

    ×