
தாம்பரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனை நடை பெற்றது.
இதில் தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் பிடிபட்டனர். போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 18 ரவுடிகள் பிடிபட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 103 பேர் பிடிபட்டனர். 107, 109, 110 குற்றவியல் நடை முறை சட்டத்தின் கீழும் சுமார் 100 குற்றவாளிகளிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது கார், மோட்டார் சைக்கிள் உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர். மொத்தம் 1733 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப் பட்டதில் விதிமுறைகளை மீறிய பலரும் பிடிபட்டனர்.
மது போதையில் வாகனத்தை ஓட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டிச்சென்ற 140 பேரும் வேகமாக சென்ற 5 பேரும் பிடிபட்டனர்.
செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிய 20 பேரும் சிக்கினார்கள். 95 லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.