என் மலர்
செங்கல்பட்டு
- செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் ஆர்ச் வளைவு உள்ளது.
- கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வல்லம் பதி கல்பாக்கம் சாலையில் மேலமையூர் அம்மன் கோவில் "ஆர்ச்" வளைவு உள்ளது.
இதன் அருகே சாலை யோரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது. ஆனால் உடல் கிடந்த இடம் அருகே எந்த ரத்தக்கறையும் இல்லை.
மர்ம கும்பல் அவரை வேறு எங்கோ வெட்டி கொலை செய்து விட்டு இங்கு சாலையோரம் உடலை வீசி தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நேற்று இரவு அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்து சென்ற வாகனங்களை பற்றியும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை செங்கல்பட்டு அருகே கொலையாளிகள் எரித்து சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பி.ஏ.4, பி.ஏ.5 தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
- பொது இடங்களில் கூடுபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
நாவலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் யாருக்கும் ஆக்சிஜன் தேவையோ அல்லது தீவிர சிகிச்சை தேவையோ என்ற அளவிலான பாதிப்புகள் இல்லை. என்றாலும் இப்போது பி.ஏ.4, பி.ஏ.5 என்ற தொற்று மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டாலும் அந்த குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாதிக்கிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் கூடுபவர்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். முககவசங்கள் அணிந்து கொள்வதன் மூலமே தொற்றின் பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டு கொள்ள முடியும்.
முதல் தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி பாக்கியிருப்பவர்களுக்காகவும், தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார - மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிற வகையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதம் 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
இந்த தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இது நம்மை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல, நமக்கு வந்தால் நமது குடும்பத்தாரையும், ஒட்டுமொத்தமாக அக்கம் பக்கத்தில் இருக்கிற அனைவரையுமே பாதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மதுராந்தகம் ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலை செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரேணுகா வெற்றி பெற்றார்.
மதுராந்தகம்:
ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. 27-ந் தேதி வரை மனுதாக்கல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் பாக்கம், சிலாவட்டம் ஆகிய இரண்டு ஊராட்சிகளை உள்ளடக்கிய 15-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரேணுகா வெற்றி பெற்றார்.
அவர் மரணம் அடைந்ததால் 15-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு அதிமுக சார்பில் யோகசுந்தரி மாசி, திமுக சார்பில் சுதா, பாமக சார்பில் சந்திரா கிருஷ்ணன் மற்றும் பிரதான கட்சியின் மாற்று வேட்பாளர்களும் மதுராந்தகம் ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகலை செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
- தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 10-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இதேபோல் திம்மாவரம் ஊராட்சியில் 4-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் எல்லம்மாள் மரணம் அடைந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 9-ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டு பெட்டிகள் சரி பார்க்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
நேற்று காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வி.இளங்கோவன் தேர்தல் அலுவலரும் வட்டார வளர்ச்சி அலுவலருமான சாய்கிருஷ்ணனிடம் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றியகுழு தலைவர் உதயா கருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்தானம், அருள்தேவி, கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை.
- கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் குப்பை எனது பொறுப்பு.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் இன்று காலை பேரூராட்சி நிர்வாக இணை இயக்குனர் மலையான் திருவடிகாரி தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை என்று மக்காத குப்பை தரம் பிரித்து கையாளுவது குறித்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ் வந்த்ராவ், வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் "குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரிக்க அறிவுறுத்தினர்., தொடர்ந்து கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை பயன்பாடு பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
- காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகி உள்ளது.
- அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில நெல்மூட்டைகளை வைக்க போதி இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
வெடால் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கடுக்கலூர், கடப்பாக்கம், தென்னேரிபட்டு, ஒத்திவிளாக்கம், வயலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது.
இதில் 32 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்பட்டன. மீதம் உள்ள 8 ஆயிரம் நெல்மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே போதிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகி உள்ளது. மேலும் பல மூட்டைகளில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் அனைத்து மூட்டைகளும் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில நெல்மூட்டைகளை வைக்க போதி இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நேரடி கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை அரசு சேமிப்பு கிடங்குக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கல்பாக்கம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
- புகாரின் பேரில் வாலிபரை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (வயது 24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதனை நம்பி மாணவி நெருங்கி பழகினார். அப்போது ஆசை வார்த்தை கூறி விக்ரம் மாணவியிடம் பலமுறை உல்லாசமாக இருந்தார். இதில் தற்போது மாணவி 2 மாதம் கர்ப்பமானார். இது பற்றி அவர் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய விக்ரமை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மாமல்லபுரம் அருகே அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
- 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையில் 70 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு அணுமின் நிலைய நிர்வாகம் இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
10 ஆண்டுகளாக பதவி உயர்வும் செய்யவில்லை. பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் நிழல்கூறை இல்லாமல் வெயிலில் நின்று 8மணி நேரம் வேலை செய்யும் சூழ்நிலைக்கு மாற்று ஏற்பாடு, டி.ஏ.இ மருத்துவமனையில் மருத்துவ வசதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணிக்கு கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். 30-க்கும் மேற்பட்ட கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் கல்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
- சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது.
- மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் ஒன்றியம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கல்பனா ஷங்கர் மற்றும் முதுநிலை துணைத் தலைவர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில்,முதுநிலை பொது மேலாளர் மோசஸ் சாமுவேல் வழிகாட்டுதலின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட சர்வதேச உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவானது ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பகுதி அளவிலான இணையம் , பெல்ஸ்டார் நிதி நிறுவனம்
ஆகியோர் உதவியோடு நடைபெற்றது .இதில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மாவட்ட மேலாளர் இன்பநாதன் உலக சுற்றுச்சூழல் தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார், தங்கராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி, சுரேஷ் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். முழு சுகாதார திட்டத்தை பற்றி சிறப்புரையாற்றினார்கள், ஊராட்சிமன்ற தலைவர். ஸ்ரீதர் விழாவுக்கு தலைமை தாங்கினார், அருணகிரி துணைத் தலைவர் , கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற செயலர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், ஜெய் வசந்தி, செந்தமிழ்ச்செல்வி, செலின் ராணி, அன்னை இந்திரா அப்துல் கலாம் பகுதி அளவிலான இணையத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பணியாளர். ஜெயலட்சுமி விநாயகமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு பேரணி, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்பு பொது இடங்களை தூய்மை பணி இணைந்து நடத்தப்பட்டது.
- விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
மதுராந்தகம்:
நாமக்கல்லில் இருந்து 1 லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது.
அச்சரப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த 1 லட்சம் முட்டைகளும் உடைந்து நாசமானது. முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பி னார். சாலை நடுவே லாரி கவிழ்ந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாலையில் சிதறிய முட்டைகளால் விபத்து ஏற்படாமல் தடுக்க அதனை முழுவதும் அகற்றினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






