என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டம் அருகே நள்ளிரவு ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- பக்கத்து வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 40) ராணுவ வீரரான இவர் உத்தரகாண்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ரேணுகா(37) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.இவர்கள் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் வசித்து வருகின்றனர். நேற்று காலை ரேணுகா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் தான் பிறந்த ஊரான தேவ மங்கலம் கிராம கோவில் விசேஷத்துக்கு சென்றார். ராணுவ வீரரின் வீட்டு அருகாமையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வேல்முருகன் குடும்பத்தினரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவு ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ட்ரங்க் பெட்டியில் வைத்திருந்தஇரண்டரை பவுன் நகை, ரூ.3000 ரொக்க பணம், வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடி சென்றனர். பின்னர் வேல்முருகன் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 300 பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். பக்கத்து வீட்டார் ராணுவ வீரரின் வீடு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு ரேணுகாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊர் திரும்பினார். பின்னர் ரேணுகா மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராணுவ வீரர் உட்பட அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
- இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆனிமேரி தகவல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித்திருவாதிரை விழா மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ.க்கள் க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), சின்னப்பா (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசும்போது கூறியதாவது:-கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் உலக புராதான சின்னமாகவும், பராம்பரிய சின்னமாகவும், தொன்மையான கட்டடக் கலையின் உன்னத அடையாளமாக விளங்கி வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது.கங்கைகொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப்படுகின்ற மாமன்னர் ராசேந்திர சோழன் உதித்த நாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித் திருவாதிரை விழாவாக கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.ராசராச சோழன் காலத்திலேயே இளைய அரசராக பொறுப்பேற்று பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றியை கண்டவர் ராசேந்திரசோழன். இவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய ராணுவ கட்டமைப்பாகும். அதற்கு சான்றாக அமைந்தது தான் இந்த கங்கைகொண்ட சோழபுரம்.நாட்டிலேயே கடற்படை வைத்திருந்த ஒரே மன்னர் இவரே ஆவார். அதனால் தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சிக் காலம் பொற்காலம். இவருடைய சிறப்பான ஆட்சிக் காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலத்திலேயே பெண்களை சமமாக கருதும் உயரிய சிந்தனை கொண்டவர் அவர்.எனவே தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் உள்ளிடவற்றை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதன்படி அருங்காட்சியகத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இங்கு அகழாய்வு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அகழாய்வுகளில் பலவிதமான பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மாமன்னர் ராசேந்திர சோழனின் சிறப்புகள், வரலாற்றுப் பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக் கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சித் தலைவர் சரஸ்வதி வரவேற்றார். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி தெரிவித்தார்.
- ராஜேந்திர சோழன் படம் இடம் பெறாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் கைது
- 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவிலை கட்டிய மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழா கொண்டாடப்படுகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு ஆடி திருவாதிரை விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் மாமன்னர். ராஜேந்திர சோழனுடைய புகைப்படம் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் வெளிப்புறம் என எந்த இடத்தில் வைக்கப்படவில்லை. அரசு நிகழ்ச்சியிலும் புகைப்படம் இடம்பெறாதது குறித்து இந்து முன்னணி கட்சியை சார்ந்த மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யம்பெருமாள் மாவட்ட செயலாளர், ராஜா திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா, உள்ளிட்ட 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரியலூர் மாவட்டம் சிறுவளூர், வெண்மான்கொண்டான் கிழக்கு, இரும்புலிக்குறிச்சி, வரதராசன்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
- தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளித்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் சிறுவளூர், வெண்மான்கொண்டான் கிழக்கு, இரும்புலிக்குறிச்சி, வரதராசன்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,தனித்துறை ஆட்சியர், பொது விநியோக துணை ஆட்சியர் ஆகியோர் தலைமை வகித்தனர். மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.மேலும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் அளித்தனர்.
- மதுபான கடத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
- ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்
அரியலூர்,
உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (42). கடந்த 22 ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட கூடும், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
- அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் போன்றவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது
- பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் வேண்டுகோள்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், குவாரி குழிகள் மற்றும் செயலிழந்த இடங்களை கண்டறிதல், ஆழ்துளை கிணறுகள் அடையாளம் காண மாவட்டத்திற்குள் விரிவான கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதன் மூலமாக கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த போர்வெல்கள். விரிவாகப் பராமரிக்கவும் அவற்றின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்தவதை தடுத்திடும் வகையில் கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு உடனடியாக வேலி அமைத்திட அதன் உரிமையாளர் மற்றும் குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவும் தங்கள் குழந்தைகளை அப்பகுதிக்கு விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும், தங்கள் பகுதியில் உள்ள செயலற்ற நிலையில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. .இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய உரிமையாளர்கள்/ குத்தகைதாரர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- காமராஜர் ஒற்றுமை திடலில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் காமராஜர் ஒற்றுமைத் திடலில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 1000 பேர் உள்ளிட்டோர் போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முன்னதாக, போதைப் பொருள் எதிர்ப்பு விழப்புணர்வு பேரணியானது அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜர் ஒற்றுமைத் திடலில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.சிறுவளூர்...இதே போல் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அஞ்சலக அலுவலர் அம்சா தேவி கலந்து கொண்டு, போதைப் பழக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும் . ஆரம்பத்தில் புத்துணர்ச்சி தோன்றுவது போல் இருந்தாலும் இறுதியில் அவர்களுக்கு தீர்க்க முடியாத புற்றுநோய்களையே உண்டாக்கும். கல்வி கற்கும் பருவத்தில் அத்தகைய பழக்கத்துக்கு ஆளாகாமல் தனது குறிக்கோளை அடைவதை மட்டுமே மாணவர்கள் லட்சியமாக கொள்ள வேண்டும் என்றார் .
- தா.பழூர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
- மறியலில் ஈடுபட்ட பெண்களை தாக்கியதாக எஸ்.பி.யிடம் புகார் மனு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பேருந்து வசதி கேட்டு அமைதியான முறையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், காவல் நீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், ஸ்ரீபுரந்தான் ஊராட்சித் தலைவர் இரா.உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி டி.தண்டபானி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர் வழியாக முத்துவாஞ்சேரி கிராமத்துக்கு செல்வதற்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. இதனால் முத்துவாஞ்சேரி, காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அறங்கோட்டை, அருள்மொழி உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், மருத்துவமனை, பள்ளி}கல்லூரி என அனைத்துக்கும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதனால் மேற்கண்ட நேரங்களில் இயங்க வேண்டிய பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த 7 ஆம் தேதி தா.பழூர் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட சித்திரவேல் மனைவி விஜபபாரதி, சிங்குராஜ் மனைவி சாந்தி, தமிழ்மணி மனைவி சாவித்திரி உள்ளிட்டோரை, தா.பழூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் கண்ணத்தில் அறைந்தது மட்டுமல்லாமல், தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இதே போல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி ஆகியோரும் பெண்களை தரக்குறைவான வார்த்தையால் திட்டி 10}க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.எனவே, காவல்துறையின் கண்ணியத்தையும், நற்பெயரையும் கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் மணி மற்றும் பெயர் தெரியாத காவலர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெயங்கொண்டத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம்வரை பேரணி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன்,பரம்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா நிறுவனங்களின் தாளாளர் முத்துக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஜெகநாத், சாஹிரா பானு, சுமதி, காவல் உதவி ஆய்வாளர்கள் தன செல்வம், சுப்பிரமணி, உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சர்வதேச போதை எதிர்ப்பு நாள் உறுதிமொழி தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர்முத்தையன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவிகள் மற்றும் தொட்டியம் கொசவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பால சமுத்திரத்தில் இருந்து தொட்டியம் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைப்பெற்றது. பின்பு சர்வதேச போதை எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதேபோல் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
- திருமானூர் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
- 648 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளியில், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், திருமானூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.போட்டியை ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி தொடக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமானூர் ஒன்றிய அளவில் 50 அரசு ஆரம்ப பள்ளி, 10 அரசு உதவி பெறும் பள்ளி, 20 நடுநிலைபள்ளி, 14 அரசு உயர்நிலைப்பள்ளி, 14 அரசு மேல்நிலை பள்ளிகளிலிருந்து 648 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.போட்டிகளுக்கு நடுவர்களாக கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் வீராசாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி நன்றி கூறினார்.
- மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
- வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ் (வயது 27) கூலித் தொழிலாளி. இவருக்கும் காசிநாதன் மகள் ஷாலினி (வயது23 )என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்துக்குப் பின் சிறிது காலம் கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன.
நேற்று நள்ளிரவு பிரகாஷ் மனைவி ஷாலினியுடன் சண்டை போட்டார்.
பின்னர் கணவர் மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் தூங்க சென்றதாக தெரிகிறது.
ஆனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிரகாஷ், மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் போலீசுக்கு பயந்து வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாக விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஷாலினி உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கணவர், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் ரேவதியிடம் சண்டை போடும் சத்தம் கேட்கும். நேற்று நள்ளிரவும் பயங்கர சத்தம் கேட்டது. வழக்கமான சண்டைதானே என்று நாங்களும் இருந்து விட்டோம். ஆனால் இப்படி ஒரு முடிவை ஷாலினி எடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றனர்.
இதற்கிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருமணமாகி 4 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், உடையார்பாளையம் உதவி கலெக்டர் பரிமளம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது
- காரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்துசிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தாயாரிடம் தகவல் தெரிவித்தார். அவர் ஸ்டாலினின் தாயை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்களில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த ஸ்டாலின்.காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






