என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கொள்ளிடக்கரை பகுதியில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உத்தரவின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்தி வந்த அணைக்குடம் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் மகன் விஜய் (வயது 23), சங்கர் மகன் விக்னேஷ் (16) ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஜெயங்கொண்டத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வில்வராஜா(வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கயல்விழி. இவர், கல்லூரி படிப்பு சம்பந்தமான தேர்வு எழுதுவதற்காக பெங்களூரு சென்றுள்ளார்.

    இதையடுத்து அவரும், வில்வராஜாவும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த வில்வராஜா, நேற்று காலை வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, வில்வராஜாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர் அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத உலகினை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர், அதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அரசு கலை கல்லூரிக்கு சென்று ஊர்வலத்தை முடித்தனர். இதில் அரியலூர் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தைல மரத்தோப்பில் துப்பட்டாவால் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மாங்கொட்டை தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார்.நேற்று காலை ஊருக்கு வந்த அவர், பின்னர் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

    இந்தநிலையில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தைல மரத்தோப்பில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் மாயகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயகிருஷ்ணன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடுகூர்கோனார்குளம் அருகே மறைத்து வைத்து ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மது பாட்டில்களை விற்றது கடுகூரை சேர்ந்த ஆதிமூலம் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் மண்ணுழி சுடுகாடு பகுதியில் மது விற்ற அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் 2 பேரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
    மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 378 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், திருமானூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள சுள்ளங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு மாட்டு வண்டி மூலம் கொள்ளிட கரையோரம் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். ஆனால் தற்போது மணல் அள்ளுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் தங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அதற்குரிய கட்டணத்தை நிர்ணயித்து மணல் அள்ள அனுமதி அளித்து குடும்பத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நதியா. இவர்களுக்கு சந்துரு, சூர்யா (வயது 9) ஆகிய 2 மகன்கள். சூர்யா 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணியும், நதியாவும் தனது வீட்டிற்கு செல்லும் பாதையான கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றி கொண்டிருந்தனர். சந்துருவும், சூர்யாவும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்தநிலையில் தண்ணீரில் சந்துருவும், சூர்யாவும் அடித்து செல்லப்பட்டனர். அப்போது சந்துருவும், சூர்யாவும் தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வேகமாக ஓடி ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த சந்துருவை உடனடியாக மீட்டார். ஆனால் சூர்யாவை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து சந்துருவை மீட்டு கரைக்கு கொண்டு வந்த சுப்பிரமணி தனது மற்றொரு மகன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான் என்ற தகவலை அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். அதன்பேரில் ஓடி வந்த அக்கம், பக்கத்தினரும் ஆற்றுக்குள் குதித்து சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து தகவலறிந்த திருமானூர் போலீசார், அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆகியோர் வந்து ஆற்றுக்குள் இறங்கி சூர்யாவை தீவிரமாக தேடும் பணியில் இரவு 7 மணி வரை ஈடுபட்டனர். ஆனாலும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் சூர்யாவை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் நிறுத்திவிட்டனர்.

    இதையடுத்து நேற்று காலை அரியலூர் தீயணைப்பு படைவீரர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சூர்யாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் நீச்சல் வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணியளவில் சூர்யாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை யடுத்து திருமானூர் அனைத்து கட்சியினர் திருமானூர் பஸ் நிலையத்திலிருந்து மவுன ஊர்வலமாக வந்து இறந்த சூர்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் நீர்பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், ஏற்கனவே மணல் குவாரி அமைந்திருந்த இடத்தில் ஆழமாக மணல் எடுத்ததால் கடந்த மாதம் ஆற்றில் வந்த நீர் அந்த பள்ளத்தில் தேங்கி விட்டது. இதனால் அந்த சிறுவன் இறந்து போனான். கடந்த காலத்தில் பலர் இறந்து போனார்கள். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கிராம ஊராட்சி சார்பில் ஆபத்ததான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பார்கள். அதிக ஆழத்தில் மணல் எடுப்பதால் உயிர் சேதம் ஏற்படுகிறது என்று கூறினார். 
    ஆண்டிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து முனை பிரச்சார இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17ஆம்தேதி முதல் 23-ம்தேதி வரை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வருகை வந்த பிரச்சார இயக்கத்தினருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைக்க வேண்டும். 

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கருக்கை கிராமத்தில் 33 விவசாயிகளுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும், ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், அப்பகுதி விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தின் நிர்வாகிகள் பேசினர். 

    பிரசார இயக்கத்திற்கு அசோக்ராஜ் தலைமை வகித்தார். வழக்கறிஞர் லாரன்ஸ், பிரபு கிளைச் செயலாளர்கள் ஞான சேகரன், கவர்னர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயற்குழு உறுப் பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, திருத் துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. உலக நாதன், மாநில செய லாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஆனந்தன், சின்னதுரை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    பிரச்சாரமானது ஆண்டிமடத்தில் துவங்கி ஜெயங்கொண்டத்தில் நிறைவடைந்தது. முன்னதாக மாதர் சங்க நிர்வாகி தமயந்தி வரவேற்றார். முடிவில்  ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் நன்றி கூறினார்.
    தினத்தந்தி செய்தி எதிரொலியாக இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தியில் நேற்று முன் தினம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.

    இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரி வித்தனர். மேலும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைக்காரர் களால் ரோட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதி கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் தனியார் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண விழா, கோவில் திருவிழா, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் வைத்து ரோட்டை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கடைவீதி, நான்கு ரோட்டில் நாலாபுறமும் குற்ற கண்காணிப்புக்காக போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    மேலும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் சுமார் 10 மாதத்திற்கு முன்பு சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக, போலீசார் கேமராவில் பார்க்கும் போது பதாகைகள் மறைத்து விட்டது. இதனால் மர்ம நபர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மேலும் கடைவீதிகளில் ரோட்டு ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடை களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டின் நடுவே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதுடன் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தியும், பதாகைகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    செந்துறை அருகே கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் விருத்தாசலம் புதுக்குப்பத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மனைவி ஆனந்தவள்ளி (36) என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேரும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள பழைய வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது இரவு நேரத்தில் ஆனந்த வள்ளிக்கு செல்போன் மூலம் மற்றொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்து உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூர் அருகே திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி. கேபிள் இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுக்க சென்றுள்ளார்.

    அப்போது மின் கம்பத்தில் ஏறி கேபிள் வயரை சாலையின் குறுக்கே தூக்கி எறிந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் வயர் சிக்கி அறுந்து மின்சாரம் செல்லும் மின்கம்பியில் பட்டுள்ளது. இதில் கேபிளை பிடித்து கொண்டிருந்த சிவா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவரது இடது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கேபிள் வயரை அறுத்த டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×