என் மலர்tooltip icon

    அரியலூர்

    மிக குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதால் ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி நடத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
    அரியலூர்:

    நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர்வதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (‘நீட்‘) நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘நீட்‘ தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மகாராணி. இவர் கணினி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் மஞ்சு (வயது 19). அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ள இவருக்கு, டாக்டராக வேண்டும் என்று கனவு உள்ளது.

    இதனால் அவர் ‘நீட்‘ தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் அவர் எழுதினார். பின்னர் தேர்வு முடிவை நோக்கி அவர் காத்திருந்தார்.

    இந்நிலையில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மாணவி மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம், என்ற சந்தேகம் அவருக்கு எழுந்துள்ளது.

    இது குறித்து மாணவி மஞ்சு கூறியதாவது;-

    நான் ‘நீட்’ தேர்வு எழுதியபோது 3 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை. மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதியிருந்தேன். இதனால் எனக்கு 680 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. இதனால் நீட் தேர்வு ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3 கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்காத நிலையில், 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஓ.எம்.ஆர். ஷீட்டை மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு அசல் ஓ.எம்.ஆர். ஷீட்டை காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த குமார்(வயது 47), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(61) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் வாத்திபடையாச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 55), வெள்ளாழத்தெருவை சேர்ந்த ராஜாராம்(52), திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த மோகன்(47) ஆகிய 3 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராம்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கண்டன உரையாற்றினார். தலைமைக் கழக பிரதிநிதி சைதை.குணசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் காங்குழி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலனி தெருவில், டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற பரஞ்சோதி(வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பாகல்மேடு காலனி தெருவை சேர்ந்த சின்னதுரை (75) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றபோது கைது செய்யப்பட்டார்.
    அரியலூர் அருகே மகள் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 45), மகள் சக்தி ரூபா. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஜெயந்தி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் தீ வைத்து கொண்ட அதே இடத்தில், ஜெயந்தியும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மீன்சுருட்டி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உத்திராபதி(வயது 48). கூலி தொழிலாளியான இவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகள் லதாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் லதா, அவருடன் வாழாமல் தனது தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த சண்முகத்தின் மகள் சாந்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உத்திராபதி தனது மாமானார் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்ததாகவும், இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி கோபித்துக்கொண்டு வெளியூர் சென்றதாகவும் தெரிகிறது. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற உத்திராபதி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து உத்திராபதியின் அண்ணன் கணேசன்(53) கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து, உத்திராபதியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் இருகையூர் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி. இவர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனது ஆதரவாளர்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் தன்னை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மதிப்பதில்லை என்றும், அலுவலகத்திலும், ஊராட்சியிலும் எந்தப் பணியையும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், எழுதப்படிக்க தெரியாது என்றால், ஏன் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? என்று ஒன்றிய ஆணையர் கேட்டது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

    மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்ந்த கட்டிட பணியை செய்யவிடாமல் ஊராட்சி உறுப்பினர்கள் தடை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனால் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவி, தங்களுக்கு எந்த மனக்குறை இருந்தாலும் புகார் மனு எழுதி கொடுங்கள், சட்டரீதியாக விசாரித்து உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

    தா.பழூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, போராட்டத்தை கைவிடும் படி அறிவுறுத்தினர். பின்னர் ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவியிடம், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து ஒன்றிய ஆணையர் ஸ்ரீதேவி கூறுகையில், ஊராட்சி தலைவராக தட்சிணாமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவரது மகன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையீடு செய்வதாக குற்றம்சாட்டி, இருகையூர் ஊராட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே பலமுறை மனுக்கள் அனுப்பியுள்ளனர். அது குறித்து நான் ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரித்தபோது, தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதனால் தனது மகன் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கவனித்து வருவதாக கூறினார்.

    அப்போது, தங்களுக்கு எழுத படிக்க தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி நீங்கள்தான். எனவே ஊராட்சி மன்ற தலைவர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அதனையே அவர் எழுத படிக்க தெரியாமல் ஏன் ஊராட்சி மன்ற தலைவராக வந்தீர்கள்? என்று நான் கேட்டதாக கூறுகிறார்.

    ஊராட்சி மன்ற தலைவரின் பணிகளை அவருடைய மகன் செய்யக்கூடாது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றி அதன் நகலை எனக்கு அளித்துள்ளனர். அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போது ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தாசில்தார் கலைவாணன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெளியில் வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும், வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு, அறிவுரை வழங்கினர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் போக்குவரத்து போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஆணையர் அறச்செல்லி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிரவீன்குமார், சிவராமகிருஷ்ணன், சம்பத் உள்ளிட்ட குழுவினர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, கடை மற்றும் கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும், வணிக நிறுவனம் மற்றும் சிறு கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை என அபராதம் விதித்தனர். மேலும் மொத்தம் ரூ.18 ஆயிரத்து 900 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை ஆண்டிமடம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடைவீதியில் உள்ள வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஆய்வு செய்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் பயணம் செய்தனர். அவர்களை நிறுத்தி ரூ.200 வீதம் 16 நபர்களுக்கு அபராதம் விதித்தார். இதன்படி ரூ.3,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்தும், முககவசம் அணிவதன் பயன் குறித்தும் அறிவுறுத்தினார். அப்போது ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரீஸ், சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
    உடையார்பாளையம் அருகே கடைகளில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் உடையார்பாளையம் கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவைச் சேர்ந்த தனஷ்கோடி(வயது 40), அதே பகுதியை சேர்ந்த சசிகலா (41) ஆகியோர், அவர்களது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    தா.பழூரில் சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள நந்தி நகரில், தா.பழூர் ஊராட்சி மன்ற மனைப்பிரிவு ஒப்புதல் பெறப்பட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் வணிகர்கள் மனைகளை வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு இந்த பகுதியில் புதிதாக அரசு செலவில் மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. அதேபோல் ஊராட்சி மன்றம் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தரப்பட்டது. தற்போது நந்தி நகர் பகுதியில் தார் சாலை அமைக்க ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்கப்பட்டது. அப்போது ஒருவர், சாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மனைப்பிரிவை விற்றவரிடம் இருந்து, தான் விலைக்கு வாங்கி விட்டதாகவும், அந்த இடத்தில் சாலை அமைக்கக்கூடாது, அது பொதுப்பாதை அல்ல என்று தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த மனைப்பகுதிக்கு உள்ளே செல்வதற்கு அந்த பாதையை தவிர வேறு பாதை எதுவும் இல்லை. மனையை விற்றவர் பாதையை காட்டி அனைத்து மனைகளையும் விற்பனை செய்து விட்டு, பாதையாக இருந்த பகுதியை ஊராட்சி நிர்வாகத்திற்கு பதிவு செய்து தராமல் ஒருவருக்கு விற்பனை செய்து மனை வாங்கியவர்களை ஏமாற்றி விட்டதாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் கடந்த மாதம் 17-ந் தேதி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊரக வளர்ச்சி துறை மண்டல அதிகாரி ஆறுமுகத்திடம், நந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பாதையை மீட்டு புதிதாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

    இந்நிலையில் தற்போது அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென அங்கு வந்த நந்தி நகர் மக்கள், தங்களுக்கான பாதையை விட்டுவிட்டு மற்ற பகுதியில் தார் சாலை அமைக்கப்படுவதாகவும், தங்களுக்கான பாதையை மீட்டுத்தர கோரியும், எந்திரம் முன்பு அமர்ந்து சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதையை மீட்டு தருவதாக சாலை ஒப்பந்ததாரர் உத்தரவாதம் கொடுத்ததால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வெள்ளையன், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வெள்ளையன் தளவாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், வெள்ளையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×