என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 43). கூலி தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம்போட்டார். அதை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் மாடிக்கு சென்று சிறுமியை மீட்டனர். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பிச்சை பிள்ளையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிச்சை பிள்ளையை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிச்சை பிள்ளைக்கு திருமணமாகி 4 பெண், ஒரு ஆண் என 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் உடையார்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்(வயது 28), தத்தனூர் மேலூரை சேர்ந்த ரகுநாதன்(52), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த செல்வம்(43), மணகெதி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன்(53) ஆகிய 4 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் மழவராயநல்லூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். இதில் மழவராயநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மதியழகன்(வயது 45) மற்றும் ஜெயபால் (39) ஆகியோருடைய மளிகை கடைகளில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்து புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மதியழகன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர்.
    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் தலா ஒருவருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 7 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,302 ஆக உயர்ந்துள்ளது.

    ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,619 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 488 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,096 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,989 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 400 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    செந்துறையில் கூட்டுறவு சங்க ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது 33). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செந்துறை அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடிவந்தனர்.

    தற்போது பழனிவேல் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அண்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வரும் முத்துலட்சுமி, பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்ற முத்துலட்சுமி இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு மற்றும் சாமி அறை கதவின் தாழ்ப்பாள் அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பையில் வைக்கப்பட்டு இருந்த நகை திருட்டு போனது தெரியவந்தது.

    அந்த பையில் 48 பவுன் நகை வைத்திருந்ததாகவும், அதில் 13 பவுன் நகையை காணவில்லை என்றும் முத்துலட்சுமி கூறினார். இது குறித்து அவர் செந்துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து செந்துறை போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    அரியலூர் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பட்டகாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). டீ மாஸ்டரான இவர் கடந்த 17-ந் தேதி வழக்கம்போல் டீக்கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். 

    ஒரத்தூர் பிரிவு பாதை அருகே வி.கைகாட்டி-விக்கிரமங்கலம் சாலையில் காயவைத்த தானியம் மீது போர்த்தப்பட்டிருந்த படுதா மீது சென்றதில் முருகானந்தம் ஓட்டிச்சென்ற மொபட் வழுக்கி விழுந்ததில் முருகானந்தம் கீழே விழுந்து படுகாயமடைந்தார். 

    இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முருகானந்தம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். 

    இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திமுக தலைவர் முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஒன்றிய பா.ஜ.க. பொறுப்பாளராக உள்ளார். 

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக மறுபதிவிட்டதாக தெரிகிறது. 

    இந்த நிலையில் தி.மு.க. கிளைச் செயலாளர் கோடி, குவாகம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் மீது, வேண்டும் என்றே சினமூட்டும் வகையில் பதிவு செய்து வன்முறையை தூண்டும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    வெற்றியூரில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தவமணி சுப்பிரமணியன். இவர் அந்த கிராமத்தில் எந்த திட்டங்களையும் சரிவர செய்யவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும், நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர் தனிப்பட்ட முறையில் நிலத்தகராறில் ஈடுபட்டதற்கு கூட ஊராட்சி மன்ற தலைவர் தான் காரணம் என்பது போல சித்தரித்து சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் தவமணி நேற்று வெற்றியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து, அவதூறாக செய்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கைவிட்டார். ஊராட்சி மன்ற தலைவரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தா.பழூர் அருகே சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த மதனத்தூர் காலனி பகுதியில் பொன்னார் பாலம் அருகே சிறிய அளவிலான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று மாலை 7 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி பைப் ஏற்றி வந்த சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிவிட்டு, கோவிலின் முகப்பு பகுதியில் மோதி நின்றது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள் அனைவரும் லாரியின் அடியில் சிக்கினர்.

    இதில் மதனத்தூர் காலனியைச் சேர்ந்த செல்வமணியின் மகன் செல்வகுமார் (வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் பிலவேந்திரன், சுந்தரமூர்த்தி மகன் சூரியமூர்த்தி, ராஜேந்திரன் மகன் ராஜ்கிரண் மற்றும் வாணதிரையன்பட்டினத்தை சேர்ந்த அய்யாவு மகன் பாஸ்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சூரியமூர்த்தி, பாஸ்கர் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு தேவராஜ், உதவி சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் உடனடியாக வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இறந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியே சோகமயமாக காணப்பட்டது. மேலும் சாலை மறியல் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
    வி.கைகாட்டி அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி நடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). விவசாயி. இவரது உறவினர் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்த தேவா(40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் பிரிவு சாலையில் ஏறியபோது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாரிமுத்துவை(40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூரில் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. இது பற்றி முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் மிக்சியில் மசாலா அரைத்தல் போன்றவற்றை காலையில் மின்சாரம் நிறுத்தப்படும் முன்பே செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திடீரென மின்சாரம் தடைபட்டது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது, மாலை 6 மணிக்குத்தான் மின்சாரம் வரும், என்றனர்.

    முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அறவை மில்கள் உள்பட பல வணிக நிறுவனங்களில் பணிகளும் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அவதியடைந்தனர். நகரில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின் தடை ஏற்பட்ட நிலையில், ஆக்சிஜன் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பல நோயாளிகள் சிரமப்பட்டனர். எனவே இனிவரும் காலங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவது குறித்து மின்வாரிய அதிகாரிகள் முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும்.
    மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 31), வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×