search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்

    ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தாசில்தார் கலைவாணன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெளியில் வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும், வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு, அறிவுரை வழங்கினர். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் போக்குவரத்து போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் ஆணையர் அறச்செல்லி தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிரவீன்குமார், சிவராமகிருஷ்ணன், சம்பத் உள்ளிட்ட குழுவினர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, கடை மற்றும் கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும், வணிக நிறுவனம் மற்றும் சிறு கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை என அபராதம் விதித்தனர். மேலும் மொத்தம் ரூ.18 ஆயிரத்து 900 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

    உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை ஆண்டிமடம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடைவீதியில் உள்ள வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஆய்வு செய்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் பயணம் செய்தனர். அவர்களை நிறுத்தி ரூ.200 வீதம் 16 நபர்களுக்கு அபராதம் விதித்தார். இதன்படி ரூ.3,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்தும், முககவசம் அணிவதன் பயன் குறித்தும் அறிவுறுத்தினார். அப்போது ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரீஸ், சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
    Next Story
    ×