என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
    • தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டது. அக்கட்சி ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆளும் பா.ஜனதா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, ஆண்டுக்கு 3 சமையல் கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

    அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன்.
    • அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர், உப்பள்ளி மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பது என்னுடைய பொறுப்பு என்றும் கூறி இருந்தார். இதுகுறித்து கொப்பலில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைவேன் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்றனர். நான் உப்பள்ளி மக்களின் இதயத்தில் இருக்கிறேன். உப்பள்ளி மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியும். நான் எப்படிப்பட்டவன் என்பது பற்றி தொகுதி மக்களுக்கு தெரியும். அதனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. என்னை தோற்கடிக்க இது குஜராத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அல்ல. கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல். இதனை பா.ஜனதா தலைவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • சட்டவிரோத குடியேறிகளை விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வோம் என பாஜக வாக்குறுதி

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் பாஜக, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    அதில், கர்நாடக மாநிலத்தில் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்துவதுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வோம் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

    • கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர்களும் பதில் கருத்துக்களை கூறி பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் கருத்து மோதல், வார்த்தை போருக்கும் பஞ்சம் இல்லை.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியினர் தன் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது குறித்தும், தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு கார்கே பேசியது குறித்தும் பிரதமர் மோடி சமீபத்திய பிரசார கூட்டத்தில் பேசினார். காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு முறை இரு முறையல்ல 91 முறை அவமதித்துள்ளது என்றார். பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

    தும்கூரு மாவட்டம் துருவகெரே நகரில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    நீங்கள் (மோடி) கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தீர்கள். ஆனால் கர்நாடகத்தைப் பற்றி பேசாமல், உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறீர்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழலுக்கு எதிராக என்ன செய்யப் போகிறீர்கள்? என்பதைப் பற்றியும் நீங்கள் பிரசார கூட்டங்களில் பேச வேண்டும்.

    இந்த தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, இது கர்நாடக மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை அவமதித்தது என்று சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி பேசவே இல்லை. உங்கள் அடுத்த பிரசாரத்தின்போது, நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொடர்ச்சியாகப் பல மாநில பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் அண்மையில் ஹிமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. அந்த உற்சாகத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் சூழல் ஏற்பட்டால், யார் ஆட்சியமைப்பது என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் துருப்புச் சீட்டாக செயல்படும்.

    இத்தகைய சூழலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது.

    கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளது. பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உடன் இணைந்து கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பை ஈதினா டாட் காம் நடத்தியுள்ளது.

    தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளிலிருந்து 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் பா.ஜ.க.விற்கு 57-ல் இருந்து 65 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசைவிட 10 சதவீதம் குறைவாக 33 சதவீத வாக்குகளை பாஜக பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக தலைநகரான ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 31-ல் இருந்து 37 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் பா.ஜ.க.வுக்கு இரண்டிலிருந்து நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

    மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 40-லிருந்து 46 இடங்கள் கிடைக்கும் என்றும், தெற்கு கன்னடத்தில் காங்கிரசுக்கு 26 முதல் 32 தொகுதி வரையும், பெங்களூருவில் 16-லிருந்து 20 தொகுதி வரையும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர்.

    மேலும் கர்நாடகத்தின் மத்திய கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கும் 3-ல் இருந்து 4 தொகுதிகளும், பாஜக 19 லிருந்து 23 தொகுதிகளும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகத்தில் பாஜகவிற்கு 10 லிருந்து 14 தொகுதிகள் வரையும், காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    • பிரதமரின் மன் கீ பாத் இல்லை, அது ஜன் கீ பாத்.
    • அரசியலில் நிரந்தரமாக இருப்பேன்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி, சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி ஓட்டு கேட்கிறார்கள் என்று மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை விமர்சித்து பேசி இருந்தார். ஏனெனில் வருணா தொகுதியில் போட்டியிடும் அவர், இது தனது கடைசி தேர்தல் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.

    இதுபற்றி தான் பிரதமர் மோடி மறைமுகமாக கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து சித்தராமையா டுவிட்டர் மூலமாக பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். ராகுல்காந்தியுடன் பாரத் ஜோடா யாத்திரையில் சித்தராமையா ஓடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் சித்தராமையா கூறி இருப்பதாவது:-

    நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது, தேர்தல் அரசியலில் இருந்து மட்டும் தான். அரசியலில் நிரந்தரமாக இருப்பேன். ஆரோக்கியமாகவும் உள்ளேன். பிரதமர் மோடியுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுவதற்கும் தயாராக இருக்கிறேன். எடியூரப்பாவை வயது காரணம் காட்டி முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கினார்கள்.

    தற்போது எடியூரப்பாவுக்கு வயதாகி இருந்தாலும், அவரை முன்னிலைப்படுத்தியே பா.ஜனதா பிரசாரம் செய்கிறது. இது எடியூரப்பா மீது இருக்கும் கவுரவமா?, அல்லது அனுதாபமா?. பிரதமரின் மன் கீ பாத் இல்லை, அது ஜன் கீ பாத்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.
    • பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    ராமநகர் :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி பேளூர், சென்னப்பட்டாவில் பிரசாரம் செய்கிறார். அது பற்றி எனக்கு தெரியும். சென்னப்பட்டணா குமாரசாமியின் கர்ம பூமி. மண்டியா மாவட்டத்தில் குமாரசாமி போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறினர். ஆனால் குமாரசாமி, நான் எனது கர்ம பூமியான சென்னப்பட்டணாவில் தான் போட்டியிடுவேன் என்று கூறி தேர்தலில் நிற்கிறார். சென்னப்பட்டணா மக்களுக்காக எனது உயிரை கொடுப்பேன் என்று குமாரசாமி கூறி இங்கு போட்டியிடுகிறார்.

    குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தினார். அவர் அமல்படுத்திய திட்டங்கள் நாட்டில் வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அறிவித்தவர், குமாரசாமி. கஷ்டப்பட்டு 2 முறை அவர் முதல்-மந்திரியாக இருந்தார். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கொடுத்த அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு ஆட்சி செய்தார்.

    சித்தராமையாவால் விவசாய கடன் தள்ளுபடியை செய்ய முடியவில்லை. ஆனால் குமாரசாமி கூட்டணி ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இதனால் மக்கள் குமாரசாமியை கைவிட மாட்டார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி வைத்து செயல்படுகிறது. வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா மேலிடம் திடீரென்று வேட்பாளராக சோமண்ணாவை நிறுத்தியுள்ளது. சித்தராமையாவை எதிர்த்து விஜயேந்திராவை நிறுத்தாதது ஏன்?. நாங்கள் மேற்கொண்ட பஞ்சரத்ன யாத்திரை மூலம் எங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடகம்-மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை உள்ளது.
    • இந்த இரு கட்சிகளாலும் நாட்டு மக்களுக்கு தீர்வுகாணவில்லை.

    மண்டியா :

    மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர்களும், காங்கிரஸ் தேசிய தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இங்கு நிலவும் பிரச்சினைகள் பற்றி பேசவில்லை. கர்நாடகத்தில் துரதிர்ஷ்டம் அவர்கள் ஒருவரை ஒருவர் பற்றி குற்றம்சாட்டி பேசி வருகிறார்கள். காங்கிரசார், பிரதமரை விஷப்பாம்பு என்று கூறுகிறார்கள்.

    பதிலுக்கு பா.ஜனதாவினர் காங்கிரசாரை தாக்கி பேசுகிறார்கள். கர்நாடகத்தின் பிரச்சினைகள் பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் யாரும் பேசுவதில்லை. கர்நாடகம்-மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்சினை உள்ளது. இதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. மவுனமாக இருக்கிறார்கள். இரு தேசிய கட்சிகளும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த என்னென்ன செய்யப்போகிறோம் என பேசுவதில்லை. இந்த இரு கட்சிகளாலும் நாட்டு மக்களுக்கு தீர்வுகாணவில்லை.

    ஜனதாதளம் (எஸ்) கட்சி அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதாக மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். எங்கள்கட்சிக்கு 20 இடங்கள் தான் கிடைக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. யார்-யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கிறது என பார்ப்போம்.

    நடிகை சுமலதா எம்.பி. சிறந்த தலைவர். பெரிய கட்சிக்காரரும் கூட அவர். நாங்கள் சிறிய கட்சி என்பதால் அவரை பற்றி பேச முடியாது. எங்களுக்கு நேரம் வரும் போது பேசுகிறேன். நான் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது லாட்டரியை ஒழித்தேன். சாராயத்தை ஒழித்தேன். அவர்களுக்கு தெரியும் யாருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் 10-ந் நடக்கிறது.
    • பா.ஜனதா மிகப்பெரிய கட்சி.

    உப்பள்ளி :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதற்கு முன்பாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதாகவும், பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இதன் காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளார். ஜே.பி.நட்டா கூறி இருப்பது குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக எங்கள் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, அவ்வாறு கூறி இருக்கிறார். அதனை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பேன். பா.ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த கடுமையாக உழைப்பேன். பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பா.ஜனதா கட்சியை பொறுத்தமட்டில் யார் முதல்-மந்திரியாக இருக்கிறாரோ, அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதா முதல்-மந்திரியாக நான்(பசவராஜ் பொம்மை) இருந்து வருகிறேன். எனது தலைமை மற்றும் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து செயல்படுவோம். அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், பா.ஜனதா மேலிட தலைவர்களும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வந்த போது, கட்சியின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பா.ஜனதா கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். பா.ஜனதா மிகப்பெரிய கட்சி. அந்த கட்சியின் பொறுப்பை, எனக்கு வழங்கி இருப்பது நான் செய்த புண்ணியம் ஆகும்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கர், 50 காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்த தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். ஒரு திருடர்களின் மனசு, திருடர்களுக்கு மட்டுமே தெரியும். கர்நாடகத்தில் மழை வெள்ளத்தின் போது பிரதமர் மோடி வரவில்லை என்று பிரியங்கா காந்தி கூறி இருக்கிறார். அவர் யாரோ எழுதி கொடுத்ததை பேசுகிறார்.

    மல்லிகார்ஜுன கார்கே மூத்த தலைவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும் உள்ளார். பிரதமர் மோடி பற்றி தரம் குறைவாக பேசி வருகிறார். கர்நாடகத்தில் ஒரு நாளுக்கு 5 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாகவும் கூறி இருக்கிறார். ஒரு மூத்த தலைவர், தனது அனுபவத்தின்படி பேச வேண்டும். பிரதமர் மோடி பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு யானை பலம் கிடைத்துள்ளது.

    அதனை சகித்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஒரே நாளில் 5 இடங்களில் பிரசாரம் செய்யும் சாமர்த்தியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. பா.ஜனதாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார்
    • எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார்.

    இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தன்னை பற்றி இதுவரை 91 முறை அவதூறாக பேசி உள்ளதாக கூறினார்.

    இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை பற்றி 91 முறை அவதூறாக பேசியதாக கூறி உள்ளார். அந்த அவதூறு புகார்கள் ஒரே பக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை பட்டியலிட்டால் புத்தகங்களாக தயாரித்து அவற்றை பதிப்பித்துவிடலாம்.

    பொதுமக்களை சந்திக்கும் பிரதமர்கள், மக்களின் பிரச்சினைகளை குறித்து கேட்காமல், தனது வேதனைகளை மட்டுமே கூறுகிறார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டிற்காக கடினமாக உழைத்தனர்.

    ஆனால் பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார். தைரியம் இருக்கிறதா. எனது சகோதரர் ராகுல் காந்தியிடம் கற்று கொள்ளுங்கள். நீங்கள் வேதனையாக பேசினாலும், துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார். ராகுல் காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார்' என்றார்.

    • பாம்பும் அதன் விஷமும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
    • காங்கிரசின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என மோடி பேச்சு

    கோலார்:

    கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரத்தில் தலைவர்களுக்கிடையிலான வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் தொடர்ந்து பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. 

    இந்நிலையில், கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மல்லிகார்ஜூன கார்கேவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி கடும் சிரமத்தை எதிர்கொள்கிறது. அதன் காரணமாகவே எனக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என் மீதான தாக்குதலை அதிகரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் இன்று மிரட்டல் விடுக்கின்றனர். எனக்கு கல்லறை தோண்டப்படும் என்று சொல்கிறார்கள்.

    இப்போது கர்நாடக தேர்தலில், பாம்பும் அதன் விஷமும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆனால் பாம்பு என்பது சங்கரரின் (சிவன்) கழுத்தை அலங்கரிக்கிறது. எனக்கு என் நாட்டு மக்கள் சிவனின் வடிவம். அதனால் மக்களின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பாக நான் நன்றாக இருக்கிறேன்.

    மகான்களின் பூமியான கர்நாடக மாநில மக்கள் காங்கிரசின் மோசமான செயல்பாடுகளுக்கு வாக்குகள் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம், மே 10ஆம் தேதி வாக்குகள் மூலம் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×