என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
    • தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர்.

    உப்பள்ளி

    மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை. வானமும், பூமியும் ஒன்றாக மாறிவிட்டதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையின்படி பார்த்தால், 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அந்த கட்சி எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது தெரிகிறது. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். தலித் மற்றும் விவசாயிகள் பெயரில் அக்கட்சி பொய்களை கூறி வருகிறது.

    இதற்கு முன்பு உத்தரகாண்டிலும் இதேபோன்ற பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. இதனால் அங்கு தோல்வியை தழுவியது. பா.ஜனதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். அதுபோல் கர்நாடகத்திலும் காங்கிரசின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவோம் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பது இந்துக்களை அவமதிப்பது போன்றது. தற்போது பஜ்ரங்தளத்தையும், பி.எப்.ஐ. அமைப்பையும் தடைசெய்வதாக காங்கிரஸ் கூறுகிறது. இது சமதான அரசியலின் ஒரு பகுதியாகும். மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும் நாட்டுக்காக என்ன செய்ய போகிறார்கள்?.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது. காங்கிரஸ் கட்சிதலைவர்கள் பலரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காங்கிரசும், பொய்யும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.
    • வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீடு தேடி வந்து வாக்கு சேகரிக்கும் தேர்தல் அதிகாரிகள் கொண்டு வரும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களித்து வருகிறார்கள்.

    வருகிற 6-ந் தேதி வரை வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 99 ஆயிரத்து 529 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து வாக்குகளை பெறும் பணிக்காக 250 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெற்றனர். நேற்று ஒரேநாளில் கர்நாடகத்தில் 11,461 பேர் வீட்டில் இருந்த படியே வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த 103 வயது முதியவரான மகாதேவ மகாலிங்க மாலி என்பவர் வீட்டில் இருந்து வாக்களித்திருந்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றி அந்த முதியவருக்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 103 வயதிலும் வீட்டில் இருந்து ஓட்டளித்த அவரை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    அதுபோல் முதியவர் மகாதேவ மகாலிங்க மாலி, தன்னை போன்ற முதியவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க அனுமதி வழங்கிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டையும், நன்றியையும் ராஜீவ்குமாரிடம் பகிர்ந்துகொண்டார். அத்துடன் இந்த நடைமுறை வருவதற்கு முன்பு தான் வீட்டில் இருந்து சிரமத்துடன் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது பற்றியும், வருகிற சட்டசபை தேர்தலில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் மகாதேவ மகாலிங்க மாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதித்துள்ளனர்.
    • பஜ்ரங்தள அமைப்பிலும் ஒன்றும் அறியாத இளைஞர்கள் இருக்கிறார்கள்.

    கொப்பல் :

    கொப்பல் மாவட்டத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டுள்ளனர். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி மக்களை பார்த்து கை அசைக்கிறார். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதா கட்சி என்ன செய்தது?. பா.ஜனதாவும், காங்கிரசும் கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக என்ன செய்துள்ளார்கள்.

    விவசாயிகளுக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று பிரதமர் கூறுகிறார்.எங்கள் கட்சி விவசாயிளுக்கு என்ன செய்யவில்லை என்று விளக்கமாக கூற வேண்டும். பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர், பிரதமராகி 9 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அவரது அலை எங்கும் வீசவில்லை, தற்போது குறைந்து விட்டது.

    எனவே பிரதமர் மோடியின் பிரசாரம் இந்த சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சியினர் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதித்துள்ளனர். தடை விதிப்பதால், ஏதாவது பயன் கிடைக்க போகிறதா?. பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா?. அந்த அமைப்பை சேர்ந்தவர்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

    பஜ்ரங்தள அமைப்பிலும் ஒன்றும் அறியாத இளைஞர்கள் இருக்கிறார்கள்.அந்த இளைஞர்களிடம் ஏதாவது சொல்லி, அவர்களது வாழ்க்கையை பாழாக்குகின்றனர். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு ஒரு அமைப்புக்கு தடை விதிப்பது சரியானது இல்லை.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்காமல் தற்போது சட்டதேர்தல் அறிக்கையில் தடை விதிப்பதாக கூறுவது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த நாட்டில் விவசாயிக்கு ஓய்வூதியம் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்றால் அது குமாரசாமி தான். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே தலைவர் குமாரசாமி தான். காங்கிரசின் கேலி-கிண்டல்களுக்கு மத்தியில் விவசாய கடன்களை குமாரசாமி தள்ளுபடி செய்தார். அதாவது ரூ.26 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்று குமாரசாமி முதல்-மந்திரி ஆவது உறுதி. இளைஞர்கள் எங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

    • 216 பாஜகவையும், 215 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
    • 14 பேருக்கு எந்த சொத்துகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களுடன், பிரமாண பத்திரத்தை வைத்து டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதாவது பணக்காரர்களில் எந்த வேட்பாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். எந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோடீசுவராக உள்ளனர் என்று அறிக்கை தயார் செய்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தில் தேர்தல்களத்தில் 2,615 வேட்பாளர்கள் இருந்தாலும், 2,586 வேட்பாளர்கள் பற்றிய சொத்து விவரங்களை சேகரித்து, அவர்கள் குறித்த தகவல்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1,087 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் ஆவார்கள். 14 வேட்பாளர்களிடம் எந்த சொத்துகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 2,560 வேட்பாளர்களில் 651 பேர் கோடீசுவரர்களாக இருந்தனர். இந்த தேர்தலில் 7 சதவீத கோடீசுவர வேட்பாளர்கள் அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் 592 வேட்பாளர்கள் (23 சதவீதம்), ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 272 வேட்பாளர்கள் (11 சதவீதம்) உள்ளனர்.

    மேலும் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை 493 வேட்பாளர்கள் (19 சதவீதம்), ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை 578 வேட்பாளர்கள் (22 சதவீதம்), ரூ.10 லட்சத்திற்கும் குறைவான சொத்துகளுடன் 651 வேட்பாளர்கள் (25 சதவீதம்) இருப்பதாக அந்த அமைப்பு பிரமாண பத்திரத்தில் அடிப்படையில் கணக்கிட்டு தெரிவித்துள்ளது. இவர்களில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 224 வேட்பாளர்களில் 216 பேரும் (96 சதவீதம்), காங்கிரஸ் கட்சி சார்பில் 221 வேட்பாளர்களில் 215 பேர் (97 சதவீதம்), ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 208 வேட்பாளர்களில் 170 பேரும் (82 சதவீதம்), ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 208 வேட்பாளர்களில் 107 பேரும் (51 சதவீதம்) ரூ.1 கோடி மறறும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகளுடன் கோடீசுவரர்களாக இருக்கின்றனர்.

    அதன்படி, முதல் 3 இடங்களில் சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கே.ஜி.எப். பாபுவுக்கு ரூ.1,633 கோடியும், பா.ஜனதா சார்பில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் எம்.டி.பி.நாகராஜிடம் ரூ.1,609 கோடியும், ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் ரூ.1,413 கோடியும் உள்ளது. 14 வேட்பாளர்களுக்கு எந்த சொத்து இல்லை என்று தெரியவந்துள்ளது.

    • பிரதமர் மோடி கலபுரகி டவுனில் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினார்.
    • பிரதமர் மோடி கலபுரகி டி.ஆர். மைதானத்தில் போலீசாரின் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

    கலபுரகி :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நாள் ஒன்றுக்கு 3 பிரசார பொதுக்கூட்டங்களிலும், ஒரு 'ரோடுஷோ' நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இது பா.ஜனதா தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருப்பதுடன் வாக்காளர் மத்தியில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலையை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி கலபுரகி டவுனில் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினார். ஊர்வலம் முடிவில் வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று மக்களை பார்த்து கையசைத்தார். முன்னதாக பிரதமர் மோடி கலபுரகி டி.ஆர். மைதானத்தில் போலீசாரின் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது சிறுவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்டு உள்ளம் மகிழ்ந்தார்.

    அதாவது பிரதமர் மோடி, சிறுவர்களிடம் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்றும், வளர்ந்த பிறகு என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ஒவ்வொரு சிறுவர்களும் நான் டாக்டர் ஆவேன், நான் போலீஸ் அதிகாரி ஆவேன் என்று தங்களது கனவுகளை பகிர்ந்தபடி இருந்தனர். அப்போது ஒரு சிறுவன் தான் உங்களுக்கு செயலாளராக இருப்பேன் என்றான்.

    இதை கேட்ட பிரதமர் மோடி ஏன் அப்பா... நீ பிரதமர் ஆக மாட்டாயா? என கேட்டதுடன் உங்களில் யாருக்காவது பிரதமர் ஆகும் ஆசை இல்லையா என வினவினார். அதற்கு சிறுவர்கள் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தனர். இருப்பினும் ஒரு சிறுவன் நான் பிரதமர் ஆவேன் என்றான். அதை கேட்டு இன்முகம் காட்டிய பிரதமர் மோடி அனைத்து குழந்தைகளுக்கும் கையசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி வாக்குப்பதிவும், மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
    • இளம் வாக்காளர்கள் மத்தியில் தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி வாக்குப்பதிவும், மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறும் என்றே தெரிவிக்கின்றன.

    அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியும் சி.எஸ்.டி.எஸ். நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தி இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஏப்ரல் 28-ந் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முதல்-மந்திரி ஆக பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    அதே சமயம் இளம் வாக்காளர்கள் மத்தியில் தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு உள்ளது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி 3-வது இடத்திலும், காங்கிரஸின் டி.கே.சிவகுமார் 4-வது இடத்திலும் உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் முதல்- மந்திரியுமான எடியூரப்பா 5-வது இடத்தில் உள்ளார். அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கும் ஆதரவு கிடைத்து உள்ளது.

    மேலும் கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 56 சதவீதம்பேர் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 38சதவீதம் பேர் வேட்பாளரை பார்த்து வாக்களிப்பதாகவும் தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் மட்டுமே முதலமைச்சருக்காக வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர்.

    காங்கிரஸ் அல்லது ஜே.டி.எஸ்.-ஐ ஆதரிக்கும் வாக்காளர்கள்தான் கட்சியை பெரிய காரணியாகக் கருதுகின்றனர். பொதுவாக பா.ஜ.க.வை விட காங்கிரசுக்கு அதிக ஆதரவு வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளை விட ஆளும் கட்சியான பா.ஜ.கவில்தான் கோஷ்டி பூசல் அதிகமாக இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதில், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு சமமான மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். ஒக்கலிகர்கள் காங்கிரசுக்கு 34 சதவீதம் மற்றும் ஜே.டி.எஸ்.சுக்கு 36 சதவீதம் ஆதரவாககவும், லிங்காயத்துகள் 67 சதவீதம்பேர் பா.ஜ.க.வை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளனர். முஸ்லீம்கள் 59 சதவீதம் காங்கிரசுக்கு வாக்களிக்க அதிக விருப்பம் கொண்டுள்ளனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க. அரசின் மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏழை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு 50 சதவீத ஆதரவும், பா.ஜ.க.வுக்கு 23 ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், வசதியான வாக்காளர்கள் மத்தியில், காங்கிரசை விட பா.ஜ.க. பிரபலமாக உள்ளது.

    பா.ஜ.க.வின் விகாஸ் சங்கல்ப் யாத்ரா மற்றும் ஜே.டி.எஸ்.-ன் பஞ்சரத்ன ரத யாத்திரையை விட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா சற்று அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக 'பொது மக்கள் கருத்து' தெரிவித்துள்ளனர்.

    மாநில மக்களின் முக்கிய பிரச்சினைகளாக என்ன வெல்லாம் உள்ளன என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அதற்கு ஏராளமான மக்கள் தங்கள் பதில்களை வழங்கி உள்ளனர்.

    அதன்படி நடக்க உள்ள கர்நாடக தேர்தலில் எதிரொலிக்கும் முக்கிய பிரச்சினையாக வேலையின்மையே இருக்கும் என்றும் 28 சதவீத மக்கள் தெரிவித்து உள்ளார்கள். 2 வது இடத்தில் வறுமை இருக்கும் 25 சதவீதம் பேர் பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கின்றனர்.

    இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு வேலையின்மையை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதே நேரம் கர்நாடக கிராம புறங்களில் வறுமையே பெரிய பிரச்சனையாக உள்ளது. இதில் வளர்ச்சி பிரச்சனைகள், விலைவாசி உயர்வு, கல்வி போன்றவை முக்கிய பிரச்சினைகள் என்று தலா 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 6 சதவீதம் பேர் ஊழலை முக்கிய பிரச்சனையாக கூறி உள்ளனர். ஒரு சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரம் 19 சதவீதம் பேர் இதர பிரச்சனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

    • கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • கர்நாடகாவின் புகழை அதிகரிக்க வேண்டுமானால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கர்நாடகம் கொண்டாடப்பட வேண்டுமெனில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    பிரதமர் மோடி நேற்று 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சித்ரதுர்கா செல்லகெரே, விஜயநகரா மாவட்டத்தின் ஹொஸ்பேட் , ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கூட்டங்களீல் பிரதமர் மோடி பங்கேற்றார். இரவு கலபுர்கியில் தங்கிய அவர் இன்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காலையில் தென்கன்னட மாவட்டத்தின் மூடபிதரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். இதற்காக மங்களூரு வந்த மோடியை விமான நிலையத்தில் பா.ஜ.க.வின் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த 25 தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் தட்சிண கன்னடா-உடுப்பியில் இருந்து 13 வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தொடக்கத்தில் கன்னட மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கர்நாடகாவை மிகப்பெரிய உற்பத்தித் திறன் கொண்ட மாநிலமாக மாற்ற தீர்மானித்துள்ளோம்.பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களையும் அழிக்கவே காங்கிரஸ் திட்டமிடுகிறது. கல்வித் துறையில் தட்சிண கன்னடா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவை அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற செய்வோம்.

    காங்கிரசுக்கு என்ன தேவை? காங்கிரஸ் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறது. காங்கிரஸ் அனைத்து திட்டங்களிலும் 85 சதவீதம் ஊழல் செய்தது.

    கர்நாடகாவின் எதிர்காலத்தை இளம் புதிய வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இளம் வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். இதை காங்கிரசால் செய்ய முடியாது.

    மாநிலத்தில் கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? மாநிலம் அழிக்கப்பட வேண்டுமா? சிந்தியுங்கள்.வளர்ச்சியை விரும்புபவர்கள் காங்கிரசை தூக்கி எறியுங்கள்.

    காங்கிரஸின் இருண்ட பக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். பயங்கரவாதிகளை காக்க காங்கிரஸ் வீதியில் இறங்கும். இதனால் மாநிலத்தில் அமைதி ஏற்படாது. காங்கிரஸ் ரிவர்ஸ் கியரில் உள்ளது. தேசவிரோதிகள் மீது போடப்பட்ட வழக்குகளை காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது.

    முழு நாடும் நமது வீரர்களை மதிக்கிறது. ஆனால் காங்கிரஸ் ராணுவ வீரர்களை மதிப்பதில்லை. இது நமது ராணுவ வீரர்களை அவமதிக்கிறது. உலக அளவில் இந்தியாவின் புகழ் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது. உங்கள் வாக்கு மூலம் இந்தியாவின் மரியாதை உலகளவில் அதிகரித்துள்ளது. உங்கள் வாக்கு மூலம் மத்தியில் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவின் புகழை அதிகரிக்க வேண்டுமானால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கர்நாடகம் கொண்டாடப்பட வேண்டுமெனில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். இந்த முறை பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்.காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு கழிப்பறை இல்லை, படிக்க பள்ளிகள் இல்லை. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணத்தில் பெரும்பாலானவை பெண் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. அதேபோன்று முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிக பயன் பெறுகின்றனர்.

    குடிசைகளில் வாழும் பெண்கள் இன்று கோடீஸ்வரர்களாகி வருகிறார்கள். நாட்டின் குழந்தைகள் ஜி 20 பற்றி பேசுகிறார்கள். ஜி 20-ல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு வளர்ச்சி பற்றி சிந்திக்கவில்லை.

    இரட்டை என்ஜின் பா.ஜ.க.ஆட்சியில் வளர்ச்சியை பார்க்கிறீர்கள். வேகமான வளர்ச்சிக்கு பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். பா.ஜ.க. மீனவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. எனவே இம்முறை பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒவ்வொரு மீனவரும் கூறி வருகின்றனர். உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா ஆகியவை வங்கித் துறைக்கு நிறைய பங்களித்துள்ளன.

    தற்போது மாநில இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். கர்நாடக இளைஞர்கள் விண்வெளியிலும் இந்தியக் கொடியை பறக்கவிட்டனர். இங்குள்ள இளைஞர்கள் ராக்கெட், செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர். இளைஞர்களுக்காக பா.ஜ.க, பல பணிகளை செய்து, இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.

    இது இளம் ஸ்டார்ட்அப்களுக்கு அதிக வாய்ப்பை அளித்துள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கான கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். நாட்டில் அடல் டிங்கரிங் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது ஸ்டார்ட்அப்களுக்கான நர்சரி வகுப்பு போன்றது.

    நாட்டின் பொருளாதாரம் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளது. நாடு வளர்ச்சி அடைகிறது என்று அர்த்தம். இதற்குக் காரணம் மோடி அரசால், நமக்கு முன்னால் இருந்த இங்கிலாந்தை விட்டுவிட்டு முன்னேறினோம். இப்போது 3வது இடத்திற்கு செல்ல உங்கள் ஆசிர்வாதம் தேவை.

    கர்நாடகாவின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. எனவே மே10 -ந் தேதி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார்.

    சென்னை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றுள்ளார்கள்.

    அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் கர்நாடகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    தேர்தல் முடியும் வரை அவர்களை கர்நாடகத்திலேயே முகாமிட்டு இருக்கும்படியும் அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார். வருகிற 5-ந்தேதி முதல் 3 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.

    தமிழர்கள் பகுதியில் முகாமிட்டுள்ள நிர்வாகிகள் கூறும்போது, 'இந்த முறை தமிழர்கள் வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக விழும் என்று தெரிவித்தனர். தொகுதிகளின் நிலவரம் பற்றி கட்சி தலைமைக்கும் அறிக்கைகள் கொடுத்து வருகிறார்கள்.

    • அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.
    • வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல், இம்மாதம் 10-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகவும், வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் மாறிமாறி புகார் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன.

    ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
    • பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் விஜயாப்புரா நகர தொகுதியில் பா.ஜனதா சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால், காங்கிரஸ் சார்பில் அபிதுல் ஹமீது முஷ்ரிப், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் பத்தேனவாஸ் மகாபரி போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் பத்தேனவாஸ் மகாபரி திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயாப்புரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு அமைப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லை. நான் பிரசாரம் செய்தும் எதிர்பார்த்த அளவு எனக்கு அக்கட்சி சார்பில் ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன்.

    நான் காங்கிரஸ்கட்சிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் முழுக்க முழுக்க எனது சொந்த விருப்பத்தின் பேரில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

    • பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம்.
    • காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். சித்ரதுர்கா அருகே செல்லகெரேயில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் ஏழைகளின் குழந்தைகளுக்காக மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகளை கன்னடத்தில் எழுத பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற குழந்தைகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கான நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

    பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் கால் லட்சம் கோடி ஒதுக்கியுள்ளோம். பா.ஜனதாவின் வளர்ச்சியை காங்கிரசால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பல மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. சித்ரதுர்காவிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கினோம். செவிலியர் கல்லூரியை தொடங்கியுள்ளோம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் பல திட்டங்களை வழங்கியுள்ளோம்.

    பழங்குடியினருக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளோம். பஞ்சாரா மற்றும் லம்பாணி சமூகத்தினருக்கு உரிமை வழங்கியுள்ளோம். நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளோம். 7 சுற்று பாதுகாப்பு கோட்டை போல 7 விதமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். முதலில் ஆவாஸ் யோஜனா, எரிவாயு, தண்ணீர். 2-வது திட்டம் பிரதி மனேகு ரேஷன், மூன்றாவது திட்டம் ஆயுஷ் மான் பாரத் திட்டம். 4-வது திட்டமாக முத்ரா யோஜனாவும், 5-வது திட்டமாக பீமா யோஜனாவும், 6-வது யோஜனாவாக பெண்களுக்கான பாதுகாப்பும், 7-வது திட்டமாக ஜன்தன் யோஜனாவையும் செயல்படுத்தியுள்ளோம்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன. பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ரெயில்வே, சாலை, விமான நிலையங்கள் அமைக்க வேகம் கொடுத்தோம். கர்நாடகாவில் 9 தொழில் மண்டலங்களை அமைப்போம். சித்ரதுர்காவிலும் 1 தொழிற்பேட்டை அமைப்போம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் காங்கிரசும், ஜே.டி.எஸ்.சும் வெவ்வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவை ஒன்றுதான். இரண்டு கட்சிகளும் குடும்ப அரசியலையும் ஊழலையும் செய்கின்றன. சமுதாயத்தை உடைக்கிறார்கள்.

    இரண்டு கட்சிகளின் முக்கியத்துவமும் மாநில வளர்ச்சி அல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியும். எனினும் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களையும் அழித்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் என்னை 90 முறை திட்டியுள்ளனர்.

    மே 10-ந் தேதி தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த முறை பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கவேண்டும். தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க சொல்லுங்கள். உங்கள் ஆசீர்வாதம் எனக்கு பலம் தருகிறது. இது என்னை அதிக வேலை செய்ய உத்வேகம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×