என் மலர்
கர்நாடகா தேர்தல்
- வாக்குச்சீட்டு, வாக்காளர்கள் மறைந்து நின்றபடி ஓட்டுப்போடுவதற்கான அட்டைகள், வாக்குப்பெட்டி உள்ளிட்டவற்றை தேர்தல்கள் அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.
- வீட்டில் இருந்து ஓட்டுப்போட விண்ணப்பித்த 99 ஆயிரத்து 529 பேர் மட்டுமே அவகாசம் வழங்கப்படும்.
பெங்களூரு:
நாட்டிலேயே முதல் முறை 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கர்நாடகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 12.15 லட்சம் வாக்காளர்களும், 5.71 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். வீட்டில் இருந்தே ஓட்டுப்போடுவதற்கு முதலில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்க வேண்டும். அதன்படி, வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள்.
வாக்குப்பதிவு தொடங்கியது அவர்களில், 80 வயதுக்கு மேற்பட்ட 80 ஆயிரத்து 250 பேரும், மாற்றுத்திறனாளிகள் 19 ஆயிரத்து 279 பேரும் ஆவார்கள். இதில், பெங்களூருவில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க விண்ணப்பித்திருந்த 99 லட்சத்து 526 பேருக்கான ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது. வருகிற 6-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் ஓட்டளிக்க காலஅவகாசம் உள்ளது.
அதாவது மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் வீட்டுக்கு நேற்று முதல் தேர்தல் அதிகாரிகள் சென்றார்கள். அவர்களுடன் போலீசாரும் சென்றிருந்தனர். இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான பொருட்களையும் எடுத்து சென்றனர். வாக்குச்சீட்டு, வாக்காளர்கள் மறைந்து நின்றபடி ஓட்டுப்போடுவதற்கான அட்டைகள், வாக்குப்பெட்டி உள்ளிட்டவற்றை தேர்தல்கள் அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.
முன்கூட்டியே தகவல் பின்னர் வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதை தேர்தல் அதிகாரிகள் வீடியோவும் எடுத்து கொண்டனர். அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகளின் வீட்டில் இருந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் அதிகாரிகள் எடுத்து சென்றனர். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏராளமான மாற்றுத்திறனாளிகள், 80 வயதானர்கள் வீட்டில் இருந்த படியே ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றி இருந்தனர். ஓட்டுப்போட விண்ணப்பித்தவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வருவது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
அந்த சந்தர்ப்பத்தில் வயதானவர்கள் இருந்தால், முறைப்படி வாக்குச்சீட்டுவை கொடுத்து ஓட்டுப்போட செய்வார்கள். வயதானவர்கள் வரவேற்பு ஒரு வேளை அவசர வேலைக்காக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் ஒரு அவகாசம் வழங்கப்படும். அதாவது மறுபடியும் வருகிற 6-ந் தேதிக்குள் ஒரு முறை வீட்டிற்கு தேர்தல் அதிகாரிகள் வந்து ஓட்டுப்போடுவதற்கான நடைமுறைகளை செய்து கொடுப்பார்கள். வீட்டில் இருந்த படியே ஓட்டுப்போடும் நடைமுறையை கொண்டு வந்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து ஓட்டுப்போட விண்ணப்பித்த 99 ஆயிரத்து 529 பேர் மட்டுமே இந்த அவகாசம் வழங்கப்படும். மற்ற மாற்றுத்திறனாளிகள், 80 வயதானவர்கள் வருகிற 10-ந் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஓட்டுப்போடலாம்.
- கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார்.
- பா.ஜனதா பல வளர்ச்சி பணிகளை செய்து அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இன்று 2-வது நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோலார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைய கூட்டம் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தூக்கத்தை இழக்க செய்யும். இந்த இரண்டு கட்சிகளும் வளர்ச்சி போக்கில் மிகப் பெரிய தடையாக இருக்கின்றன. அவர்களை மக்கள் கிளீன்போல்டு ஆக்குவர்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஊழல் அரசிடம் இருந்து கர்நாடக மக்களை காப்பாற்ற வேண்டும். நிலையற்ற அரசாங்கங்களுக்கு தொலைநோக்கு பார்வை இருக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா மீது உலகம் நம்பிக்கையில்லாமல் இருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக உலகம் பார்க்கிறது. பா.ஜனதா அரசை தேர்ந்தெடுக்க கர்நாடக மக்கள் தயாராகி விட்டனர். தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு மிகவும் முக்கியமானது.
காங்கிரஸ் ஒரு காலாவதியான இயந்திரம். அவர்களால் வளர்ச்சி தடைப்பட்டது. காங்கிரஸ் போலியான உத்தரவாதங்களை அளித்தது. மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு துரோகம் செய்தனர். ஆனால் பா.ஜனதா பல வளர்ச்சி பணிகளை செய்து அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு கன்ஹவுஸ் வட்டத்தில் திறந்த வாகனத்தில் ரோட் ஷோவை தொடங்கி வைக்கிறார்.
- ரோடு ஷோ காரணமாக இன்று இரவு 8 மணி வரை நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை நகரின் ராஜ்மார்க்கில் ரோடு ஷோ மூலம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சந்தித்து வருகிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக மைசூரு வரும் பிரதமர் மோடி, மைசூருவின் மையப்பகுதியில் உள்ள கிருஷ்ணராஜா, சாமராஜா, நரசிம்மராஜா தொகுதிகளின் பிரதான சாலையில் திறந்த வாகனத்தில் 4 கி.மீ. ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு பா.ஜ., சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, வழிநெடுகிலும் பா.ஜ. கட்சி கொடிகள் கட்டப்பட்டு, வழித்தடத்தில் பூக்கள் இடுவதற்காக ஒரு டன் பூக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
கட்சியினர் பாரம்பரிய உடை அணிந்து ரோடு ஷோவில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். மைசூரின் உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் அந்தந்த இடங்களில் நடைபெறுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் விவி ஓவல் மைதானத்தில் தரையிறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து எம்டிஏ வட்டம், ஜேஎல்பி சாலை, ராமசாமி வட்டம், சாமராஜா ஜோடி சாலை வழியாக கன்ஹவுஸ் சர்க்கிள் வரை காரில் பயணிக்கிறார்.
பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு கன்ஹவுஸ் வட்டத்தில் திறந்த வாகனத்தில் ரோட் ஷோவை தொடங்கி வைக்கிறார். வட்டம், ஆயுர்வேத வட்டம், ஆர்எம்சி வட்டம், நெடுஞ்சாலை வட்டம், நெல்சன் மண்டேலா சாலை முதல் மில்லினியம் வட்டம் வரையிலும், அதன்பிறகு, மிலேனி சர்க்கிளில் திறந்த வாகனத்தில் இருந்து இறங்கி, வெளிவட்ட சாலையில் மைசூர்-பெங்களூரு சாலை சந்திப்பு வழியாகச் சென்று நஞ்சன்கூடு சாலையில் இருந்து மைசூர் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
கன்ஹவுஸ் சர்க்கிளில் இருந்து தொடங்கி பன்னிமண்டப மில்லினியம் சர்க்கிள் வரை 4 கி.மீ தூரம் வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடைபெறும் சாலையின் ஒவ்வொரு அடியிலும் துணை ராணுவப் படையினருடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
800 துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல் படையினருடன் சிவில் மற்றும் போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரோடு ஷோ காரணமாக இன்று இரவு 8 மணி வரை நகரின் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கவுடில்யா சர்க்கிளில் இருந்து எம்.டி.ஏ சந்திப்பு வரை ராதாகிருஷ்ணா சாலை, எம்.டி.ஏ சந்திப்பில் இருந்து ராமசாமி சர்க்கிள் வரை ஜே.எல்.பி சாலை, ராமசாமி சர்க்கிளில் இருந்து கன்ஹவுஸ் சர்க்கிள் வரை சாமராஜா ஜோடி சாலை, பசவேஸ்வரா சர்க்கிளில் இருந்து ஹைவே சர்க்கிள் வரை சாயாஜிராவ் சாலை வரையிலும், நெல்சன் மண்டேலா சாலையில் நெடுஞ்சாலை வட்டத்திலிருந்து எல்ஐசி வட்டம் வரையிலும், பழைய மைசூர் பெங்களூர் சாலையில் எல்ஐசி வட்டத்தில் இருந்து கெம்பேகவுடா வட்டம் வரையிலும், சுற்றுச் சாலையில் கெம்பேகவுடா வட்டத்திலிருந்து மைசூர் விமான நிலையம் வரையிலும் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை கர்நாடக மாநிலம் கோலார், ராம்நகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
- டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
- பிரதமர் மோடி பற்றி மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார்.
ஹாசன் :
சிவமொக்கா தொகுதியில் தனக்கும், தனது மகனுக்கும் பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை என்றாலும், கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் ஈஸ்வரப்பா மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று அவர் ஹாசனில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் எங்களை குடும்ப கட்சி என்று குறை கூறுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த கட்சியில் தான் தந்தை, மகன்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர்.
அந்த கட்சியை நாங்கள் எப்படி கூற வேண்டும் என்று எச்.டி.குமாரசாமி சொல்ல வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்க ஹாசனில் போட்டியிட பவானி ரேவண்ணா டிக்கெட் கேட்டார். அப்படி கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமா?.
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஒரே குடும்பத்தினர் இருப்பதால் தான், வேறு முகம் இருக்கட்டும் என சி.எம்.இப்ராகிமை கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி கட்சியில் வைத்து இருக்கிறார்கள்.
கனகதாச ஜெயந்தியை அரசு விழாவாகவும், அந்த சமுதாய மக்கள் நலன் காக்க காகினேலே நலவாரியத்தையும் எடியூரப்பா அறிவித்தார். நாங்கள் வாக்கு வங்கிக்காக இவ்வாறு அறிவிக்கவில்லை. கனகதாசரின் சித்தாந்தம் அனைவரையும் சென்றடைய வேண்டும். அதுபோல் தான் அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பா.ஜனதா செய்து வருகிறது. ஆனால் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சமூகத்தில் சாதி விஷத்தை விதைத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி பற்றி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை கருத்து கூறியுள்ளார். இதுபோன்று பேசிய பிறகு மல்லிகார்ஜுன கார்கே கட்சி பொறுப்பில் இருப்பது சரியல்ல. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 40 சதவீத கமிஷன் கொடுக்காததால் ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் உயிரிழந்தார்.
- சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிகரித்துவிட்டனர்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரதமர் மோடியை நோக்கி எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நெருக்கடி காலத்தில் கை கழுவும் திரவம், முக கவசம், செயற்கை சுவாச கருவி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தனர். அவர்களின் ஆத்மாக்கள் நியாயத்திற்காக உங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
கொரோனா நேரத்தில் தேவையான பொருட்களை அரசுக்கு ஒப்பந்ததாரர் பசவராஜ் வழங்கினர். அவருக்கு உரிய பணத்தை இந்த பா.ஜனதா அரசு பட்டுவாடா செய்யவில்லை. இதனால் அவர் கருணை கொலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருக்கு நியாயம் கொடுக்க வேண்டியவர் மோடி அல்லவா?.
கல்லூரி உதவி ஆசிரியர், பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும். 40 சதவீத கமிஷன் கொடுக்காததால் ஒப்பந்ததாரர் பிரசாத் என்பவர் உயிரிழந்தார்.
மந்திரியாக இருந்த ஈசுவரப்பாவுக்கு 40 சதவீத கமிஷன் கொடுக்க முடியாமல் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்து பணி இடமாற்றம் பெற்றார். ஆனால் மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஒரு போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும். இத்தகைய உயிரிழப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? என்பதை பிரதமர் மோடி கூற வேண்டும்.
தனது நண்பர் அதானியின் மோசடிகள் குறித்து மோடி பேசாமல் மவுனம் காப்பது ஏன்?. உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு மத்திய அரசு 31 சதவீதம் அளவுக்கு மானியத்தை குறைத்துவிட்டது. இதன் மூலம் ஏழைகளின் வயிற்றில் கல்லை போட்டது ஏன்?. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை அதிகரித்துவிட்டனர். இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகள் மீது மோடிக்கு இவ்வளவு கோபம் ஏன்?.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
- காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை.
மங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் உடுப்பியில் திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்தினார். சாலையின் இருப்புறங்களிலும் ஏராளமானோர் திரண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடந்த பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:
கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள், காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசுக்கு பதிலாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து இரட்டை என்ஜின் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்துக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 418 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகத்துக்கு ரூ.99 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது.
காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசு கர்நாடகத்தை அவர்களின் ஏ.டி.எம்.மாக பயன்படுத்தியது. செழிப்பு, வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதிப்படுத்த பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரித்த காங்கிரசை மக்கள் நம்ப வேண்டாம். பா.ஜனதா அரசு அந்த அமைப்பை தடை செய்து, அதன் தலைவர்களை சிறையில் தள்ளியது. பா.ஜனதாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை பயங்கரவாத செயல்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது. அதேநேரத்தில் காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
காங்கிரஸ் வெளியிட்ட உத்தரவாத அட்டை கர்நாடகத்தில் வேலை செய்யாது. காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை. இதில் அவர்களின் ஆட்சிக்கு உத்தரவாத அட்டையை யார் நம்புவார்கள், ஊழல், சமாதான அரசியல், குடும்ப ஆட்சி மட்டுமே காங்கிரசின் உத்தரவாதங்கள்.
அசாம், திரிபுரா, மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலத்தில் வெளியிட்ட காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை மக்கள் நிராகரித்து விட்டனர். கர்நாடக மக்களும் இதை பின்பற்றுவார்கள்.
பா.ஜனதா அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. லிங்காயத், ஒக்கலிகர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. அம்பேத்கர் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.
மாநில மக்கள் கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஜனதாதளம்(எஸ்) கட்சி காங்கிரசின் பி 'டீம்'. அவர்களுக்கு வாக்களிப்பது, காங்கிரசுக்கு வாக்களிப்பது போன்றதாகும். 2023-ம் ஆண்டு பா.ஜனதாவுக்கு வாக்களிப்பது இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த வெற்றி 2024-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு அடித்தளமிடும்
இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் என்றாலே ஊழல் தான்.
- கர்நாடக வளர்ச்சியின் அறிகுறி தாமரை.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெகலாவி மாவட்டம் குடச்சி, விஜயாப்புராவில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றனது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் கணக்கு ஊழல் காலத்தை கொண்டது. காங்கிரஸ் என்றாலே ஊழல் தான். காங்கிரக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன். பா.ஜனதா கணக்கில் அம்ரித் காலம் இடம் பெற்றுள்ளது. ஊழல் கதவுகள் மூடப்பட்டதால் காங்கிரஸ் கவலை அடைந்துள்ளது. அதனால் அவர்கள் மோடிக்கு கல்லறை கட்டுவதாக கூச்சல் போடுகிறார்கள்.
காங்கிரசார் எனக்கு கல்லறை கட்டுவதில் பரபரப்பாக இருக்கும் நிலையில் மக்கள் தாமரையை மலர வைக்கிறார்கள். கர்நாடகத்தில் நிலையான, பெரும்பான்மை பலத்துடன் கூடிய பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்த அமைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். கர்நாடக வளர்ச்சியின் அறிகுறி தாமரை. வளர்ச்சிக்கு பா, .ஜனதாவிடம் மட்டுமே திட்டங்கள் உள்ளன. கா்நாடகத்தின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம், அனுபவம் வாய்ந்த புதிய குழுவை பா.ஜனதா அமைத்துள்ளது. இந்த குழு கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றும். இந்த குழுவுக்கு உங்களின் ஆசிர்வாதம் தேவை. என்னை பொறுத்தவரையில் கர்நாடகம் முக்கியமான மாநிலம். அதனால் எனக்கு உங்களின் ஆசிர்வாதம் தேவை. கர்நாடகத்திற்கு நிலையான அரசியல் பலம் கொண்ட கட்சி தேவை. தனி மெஜாரிட்டியுடன் கூடிய வலுவான அரசு தேவை.
கர்நாடகத்தை வளர்ச்சியில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பா.ஜனதாவால் மட்டுமே வலுவான நிலையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியும். இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்றும், அதனால் தன்னை வெற்றி பெற வைக்குமாறும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் (சித்தராமையா) கேட்கிறார். காங்கிரஸ் என்ன ஒரு மோசமான நிலைக்கு சென்றுள்ளது பாருங்கள். கர்நாடக மக்கள் சேர்ந்துபோன, தோல்வி அடைந்த காங்கிரசை ஆதரிக்க மாட்டாா்கள் என்று எனக்கு தெரியும். பா.ஜனதா பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு கர்நாடகத்தை கட்டமைப்பதற்கான தேர்தல் ஆகும். இதற்கான திட்டங்கள் பா.ஜனதாவிடம் உள்ளன. அத்தகைய திட்டங்கள் காங்கிரசிடம் இல்லை. அதற்கான ஆர்வமும் இல்லை.
இவ்வாறு மோடி பேசினார்.
- கர்நாடக சட்டசபைக்கு 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வாக்களியுங்கள்.
உப்பள்ளி :
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், உப்பள்ளி-தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நேற்று பிரியங்கா காந்தி வந்திருந்தார். இதற்காக ஹெலிகாப்டரில் குந்துகோலுக்கு பிரியங்கா காந்தி வருகை தந்தார்.
ஹெலிபேட் பகுதியில் சுற்றி நின்ற மக்களை சந்தித்து, அவர்களுடன் கைகுலுக்கி பிரியங்கா காந்தி பேசினார். பின்னர் குந்துகோல் அருகே உப்பள்ளி-லட்சுமேஷ்வரா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஜி.எஸ்.எஸ். வித்யா பீட்டா வரை பிரியங்கா காந்தி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று குசுமாவதி சிவள்ளிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து பிரியங்கா காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அந்த ஊர்வலத்தின் போது பிரியங்கா காந்தி பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவதியை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளேன். மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 4 ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. எந்த பணிகளையும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. ஊழலில் ஈடுபடுவதை மட்டும் பா.ஜனதாவினர் குறிக்கோளாக வைத்திருந்தனர்.
தற்போது சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா தலைவர்கள் உங்களை பார்க்க வருகிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சி அடையவில்லை என்பது உங்களுக்கும் தெரியும். விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்காக தான் காங்கிரஸ் கட்சி உத்தரவாத அட்டையை வீடு, வீடாக வழங்கி வருகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, 10 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தனர். மாநிலத்தில் 2½ லட்சம் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் கர்நாடக மக்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடப்பதாகும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
பின்னர் அவர், நவலகுந்துவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், "நான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்பட பல பிரதமர்களை பார்த்துள்ளேன். அவர்கள் மக்களின் துயரங்களை கேட்பார்கள். ஆனால் மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான். பா.ஜனதா அரசு மக்களையோ, அவர்களின் வாக்குகளையோ, ஆளும் மாநிலத்தையோ மதிப்பதில்லை. ஊழல் செய்தவர்களுக்கு தேர்தலில் பா.ஜனதாவில் டிக்கெட் கொடுத்துள்ளனர். ஆனால் நேர்மையானவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டரையும், லிங்காயத் சமுதாயத்தையும் அக்கட்சி மதிக்கவில்லை.
மக்களை மதிக்காத கட்சி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லது இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தலைவர்களாக்குவது மக்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பள்ளி நிர்வாகம், ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் ஊழல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும் எதுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
- காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
- இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா தேர்தல் வெறும் வெற்றிக்காக மட் டும் அல்ல. கர்நாடகாவை நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைந்தால்தான் முன்னேற்றம் அடைய முடியும்.
இந்த தேர்தல் மாநிலத்தின் பங்கை தீர்மானிக்கும் கர்நாடகாவை நம்பர் 1 ஆக மாற்ற இரட்டை என்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியமானது. பா.ஜனதா ஆட்சியை மீண்டும் ஏற்க கர்நாடக மக்கள் தயாராக உள்ளனர். கர்நாடகாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம்.
காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநில விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
முடிக்கப்படாமல் இருந்த பல்வேறு நீர்பாசன திட்டங்களை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்.
நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியுள்ளது. அந்த கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் என்னை மீண்டும் அவமரியாதை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை என்னை 91 முறை வெவ்வேறு வழிகளில் அவமரியாதை செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி என்னை ஒவ்வொரு முறை திட்டும்போது அது துடைத்து எறியப்படுகிறது. அவர்கள் என்னை தவறாக பயன்படுத்தட்டும். நான் கர்நாடகா மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.
அம்பேத்கரை கூட காங்கிரஸ் அவமரியாதை செய்கிறது. வீர் சாவர்க்கரை அவமரியாதை செய்வதை நாம் பார்க்கிறோம். சாமானியர்களை பற்றி பேசுபவர்களையும் ஊழலுக்கு எதிராக பேசுபவர்களையும் காங்கிரஸ் வெறுக்கிறது.
காங்கிரசின் முறைகேடுகளுக்கு வாக்குகள் மூலம் பதிலளிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான பொருளாதாரத்தில் நலவுற்ற மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
நிமான்ஸ் ஆஸ்பத்திரி போல் 500 படுக்கைகளை கொண்ட நரம்பியல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களுக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். 6 ஆயிரத்து 6 கிராம பஞ்சாயத்துகளில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய உயர்தர ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, இளம் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் 5 சதவீத நிதி ஒதுக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் மானியம், சிறு தொழில் தொடங்குவோருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
போலீசாரின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். புதிதாக வக்கீல் தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட காவலாளிகளுக்கு மாதம் ரூ.2,000, பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ள மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது.
- காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.
பெலகாவி :
கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது பா.ஜனதா கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கார்கேவின் பேச்சுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெலகாவி மாவட்டம் இண்டல்காவில் நடந்த பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி 100 ஆண்டு வாழவேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே, மோடியை விஷப்பாம்பு என்று கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வயதில் மூத்தவர், ஒரு கட்சியின் பெரிய பதவியில் இருப்பவர், பல பொறுப்புகளை வகித்தவர் இவ்வாறு பேசுவது வெட்ககேடானது.
காங்கிரசின் தலைவராக இருந்தாலும் நீங்கள் ராகுல்காந்திக்கு செருப்பாக தான் இருக்கிறீர்கள். எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புக்கு காங்கிரஸ் துணையாக உள்ளது. குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?. பா.ஜனதா பற்றியும், பிரதமர் மோடியை பற்றியும் பேசுவதை நிறுத்திவிட்டு சொந்த கட்சி பிரச்சினைகளை முதலில் பாருங்கள். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. காங்கிரசால் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்க முடியுமா?.
இவ்வாறு அவர் கூறினார்.
- சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது.
- எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம்.
யாதகிரி :
யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு சமுதாயத்தை உடைக்க முயன்றது. வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க நினைத்த முயற்சியும் காங்கிரசுக்கு கைகொடுக்கவில்லை. தற்போதும் காங்கிரசார் மீண்டும் தவறு செய்கிறார்கள். இடஒதுக்கீடு விவகாரத்தில் அக்கட்சி தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
கர்நாடகத்தில் காவி அலை வீசுகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்திற்கு வரட்டும். உள்ளூர் தலைவர்களும் வரட்டும். ஆனால் காவி அலையை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி நாட்டை ஆண்டுள்ளது. இனி அந்த கட்சியின் விளையாட்டும், பொய்யும் மக்களிடம் எடுபடாது.
சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்புக்கு ரூ.130 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்தவில்லை. அதனை அமல்படுத்த காங்கிரசாருக்கு வலிமை இல்லை. நாங்கள் எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். சமுதாயத்தை உடைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை.
எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கியுள்ளோம். தேன்கூட்டில் கை வைக்காதீர்கள் என்றனர். ஆனால் தேனீக்கள் கடித்தாலும் பரவாயில்லை என மக்களுக்கு எனது தலைமையிலான பா.ஜனதா அரசு நல்லது செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உடைந்துவிட்டது. அனைத்து சமுதாயத்தினரும் பா.ஜனதாவை ஆதரிக்கின்றனர். இதனால் காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தருவது உத்தரவாத அட்ைட அல்ல. தேர்தலுக்கு பிறகு அது இருக்காது. ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






