என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • தேர்தல் நெருங்கும்போது குடியுரிமை சீர்திருத்த சட்டம் பற்றி பா.ஜ.க. பேசுகின்றனர்.
    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது என குற்றம் சாட்டினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்துவா சமூக மக்களை நானும், திரிணாமுல் காங்கிரசும் அதிக கவனம் எடுத்துப் பாதுகாத்து வருகிறோம். அவர்கள் கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள். நீண்டகாலம், நாங்கள் அவர்களை கவனித்து வருகிறோம். ஆனால், தேர்தல் நெருங்கும்போது பா.ஜ.க. அவர்களிடம் சென்று நாங்கள் உங்கள் நண்பர்கள் எனக்கூறி குடியுரிமை சீர்திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) பற்றி பேசி குழப்பி விடுகின்றனர்.

    இந்த சி.ஏ.ஏ. சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், இந்த சட்டத்தின் கீழ் விதிகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. அதனால் இதுவரை யாருக்கும் இச்சட்டத்தின்படி குடிமக்கள் அந்தஸ்து வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

    மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி கிடைக்கிறது. மத்திய அரசு எங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பாக்கி தொகையை இன்னும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    • நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

    கொல்கத்தா :

    அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

    அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும்.
    • உலக அளவில் 5-வது பெரிய மொழியாகவும் உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி ஹடே கோரி நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய் மொழிைய படிக்க வேண்டும். மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் பெங்காலி மொழியில் ஆர்வம் காட்டுகிறார்.பெங்காலி மொழி, ஆசியாவிலேயே 2-வது பெரிய பேசும் மொழியாகவும், உலக அளவில் 5-வது பெரிய மொழியாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
    • தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.

    இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

    அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.

    வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

    கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது.

    தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.

    மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

    • அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின்போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று குந்தன்கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது
    • மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.

    கொல்கத்தா:

    பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்கிறது. அதுபற்றிய விசாரணை தொடங்கப்பட்டவுடன், மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது.

    முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அரசியல் சட்டத்துக்குட்பட்டு பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும். கொல்கத்தா ஐகோர்ட்டின் சில தீர்ப்புகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராததற்காக அவர்கள் போராடுவது வெட்கக்கேடு என்று அவர் பேசினார்.

    • இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பேரிடர் பாதித்த ஜோஷிமத் நகரத்தின் நிலைமை மிகவும் ஆபத்தானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் தேவையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? ஜோஷிமத்தில் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது. அதற்கு மலைநகரில் வசிப்பவர்கள் பொறுப்பல்ல. பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை.

    மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    • பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை அளித்து வருகிறது.
    • மேற்கு வங்காளத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    அதில் பேசுகையில், மத்திய அரசை மம்தா பானர்ஜி விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கு தேவையான நிதியை வழங்காமல் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. அதே சமயத்தில், பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு சரியாக நிதியை அளித்து வருகிறது. மேற்கு வங்காளத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளது.மத்திய அரசின் நிதி இல்லாமல்தான் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கு வங்காள அரசு அமல்படுத்தி வருகிறது.

    இதுபோல், சமீபத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. மாநில அரசை துன்புறுத்தவே அப்படி அனுப்பி வைத்தது. எந்த பா.ஜனதா தலைவரின் வீட்டில் மின்மினிப்பூச்சி நுழைந்தால் கூட மத்திய குழு அனுப்பிவைக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்துக்கோ, டெல்லி அல்லது குஜராத்துக்கோ ஏன் அனுப்பப்படவில்லை?

    ஆனால், அற்ப விஷயங்களுக்கு கூட மேற்கு வங்காளத்துக்கு மத்திய குழுவை அனுப்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. ஒரு முக்கியமான கட்சி.
    • மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமராக திறன் அவருக்கு இருக்கிறது.

    நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென், கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த பாராளுமன்ற தேர்தல், பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஒற்றை குதிரை பந்தயம் போல அமையும் என நினைத்தால் அது தவறு. இந்தத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்பது தெளிவு.

    தி.மு.க. ஒரு முக்கியமான கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக முக்கியமான கட்சி. சமாஜ்வாடி கட்சியும் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமர் ஆக முடியுமா என்று கேட்டால், அதற்கான திறன் அவருக்கு இருக்கிறது.

    ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிரான பொது அதிருப்தி சக்திகளை அவர் ஒருங்கிணைக்கும் வழியில் இழுக்க முடியுமா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பிர்பூம்:

    மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்த போது சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சாப்பாட்டில் பாம்பு இருந்ததை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • பா.ஜ.க. கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.
    • கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.

    கொல்கத்தா :

    இந்தி நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், 'ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, சமீபகாலத்தில் நாடு கண்ட மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரை ஆகும். இதை, 1990-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அத்வானி நடத்திய ராமர் ரத யாத்திரையுடன் ஒப்பிடலாம்.

    தற்போது மக்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராய் உயர்ந்திருக்கிற ராகுல், இந்த யாத்திரைக்கு பின், எதிர்க்கட்சி முகாமில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். அப்பதவியில் சிறப்பாக செயல்படக்கூடியவராகவும் அவர் தெரிகிறார்' என்றார்.

    ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை 3 மாதங்களில் சத்ருகன் சின்கா புகழ்ந்து கூறியிருப்பது இது 2-வது முறையாகும்.

    வாஜ்பாய்-அத்வானி காலத்தில் பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளராக விளங்கிய சத்ருகன் சின்கா, அக்கட்சி சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசுக்கு இடம்பெயர்ந்த இவர், கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    ராகுல் காந்தியை பாராட்டியுள்ளதால் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 'இதற்கு என் மவுனமே பதில்' என்று சத்ருகன் சின்கா கூறினார்.

    ×