என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • கடந்த 12 ஆண்டுகளில் எந்த இடைத்தேர்தலிலும் தோல்வி அடையாத அக்கட்சி, முதல்முறையாக தோல்வி அடைந்துள்ளது.
    • மத்திய படைகள் இருந்ததால் நேர்மையான தேர்தல் நடத்துவது சாத்தியமானது.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மந்திரியாக இருந்த சுப்ரதா சஹா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.

    அதனால், அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு கடந்த 27-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேபாஷிஷ் பானர்ஜியும், பா.ஜனதா சார்பில் திலீப் சஹாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக பேரோன் பிஸ்வாசும் போட்டியிட்டனர்.

    நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் பேரோன் பிஸ்வாஸ் முன்னிலையில் இருந்தார். இறுதியில், அவர் 22 ஆயிரத்து 980 ஓட்டுகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பா.ஜனதா வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக சட்டசபையில் பூஜ்யமாக இருந்த காங்கிரஸ் கட்சி, முதல்முறையாக தனது கணக்கை தொடங்குகிறது.

    அதே சமயத்தில், இந்த தோல்வி, திரிணாமுல் காங்கிரசுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் இருந்து அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. அத்தகைய தொகுதியில், தற்போது தோல்வியை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கடந்த 12 ஆண்டுகளில் எந்த இடைத்தேர்தலிலும் தோல்வி அடையாத அக்கட்சி, முதல்முறையாக தோல்வி அடைந்துள்ளது.

    இந்த பின்னணியில், தேர்தல் தோல்வி குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சாகர்டிகி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக யார் மீதும் நான் பழி சுமத்த விரும்பவில்லை. ஜனநாயகத்தில் வெற்றியும், தோல்வியும் மாறிமாறி வரும்.

    ஆனால், பா.ஜனதா-காங்கிரஸ் இடையே கள்ள உறவு நிலவியது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். பா.ஜனதா தனது ஓட்டுகளை காங்கிரசுக்கு மடைமாற்றம் செய்துள்ளது.

    பா.ஜனதாவின் ஆதரவை கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, இனிமேல் தன்னை 'பா.ஜனதாவுக்கு எதிரான கட்சி' என்று சொல்லிக் கொள்ளக்கூடாது.

    2024-ம் ஆண்டு பாராாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். மக்கள் ஆதரவை மட்டும் பெற்று போட்டியிடுவோம். பா.ஜனதாவை தோற்கடிக்க விரும்பும் அனைவரும் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    மத்திய படைகள் இருந்ததால் நேர்மையான தேர்தல் நடத்துவது சாத்தியமானது. ஜனநாயக சக்திகளை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால், மம்தா பானர்ஜியை எளிதாக வீழ்த்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைரஸ் பாதிப்பு காரணமாக 12 பேர் பலியாகி உள்ளனர்.
    • சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக 7 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் அடினோ வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 12 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக 7 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதனை மாநில சுகாதார துறையினர் உறுதி செய்தனர். இதன்காரணமாக மாநிலம் முழுவதும் 151 ஆஸ்பத்திரிகளில் 600 குழந்தை மருத்துவர்கள் மற்றும் 5 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மாநில சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.
    • டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களும் மாற்றப்பட்டன.

    இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரியவந்தது. மேலும் டுவிட்டர் கணக்கை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
    • மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் இன்று மேற்கு வங்காள மாநிலம், கூச் பெஹாருக்கு சென்றபோது அவரது வாகனம் மீது திடீரென ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் மந்திரியின் கார் கண்ணாடி உடைந்தது. தாக்குதல் நடத்திய கும்பல் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாக மத்திய மந்திரி பிரமாணிக் குற்றம்சாட்டி உள்ளார். மந்திரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானியனின் நிலையை கற்பனை செய்து பார்த்துககொளளுங்கள. மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்தின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

    கூச் பெஹரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமாணிக், உள்ளூர் பாஜக அலுவலகத்திற்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மத்திய மந்திரி பிரமாணிக் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமீபத்தில் கூச் பெஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மத்திய மந்திரி பிரமானிக்கை விமர்சித்தார். கொலைக்கு பிறகு பழங்குடியினரின் குறைகளை போக்க மத்திய மந்திரி பிரமாணிக் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

    பிரமாணிக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்த பகுதியில் பிரமாணிக் எங்கு சென்றாலும் கருப்புக் கொடிகளை காட்டுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் உதயன் குஹா கூறியிருந்தார்.

    • டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • பி.பி.சி நிறுவனத்தின் நிதி தரவுகள் தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பி.பி.சி நிறுவனத்தின் நிதி தரவுகள் தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில்,

    "பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியல் பழிவாங்கலுடன் பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தை மட்டும் பாதிக்காது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது. ஊடகங்கள் ஏற்கனவே அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊடகங்களால் குரல் எழுப்ப முடியாது" என்று கூறியுள்ளார்.

    • மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • முறைகேடு வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியிட நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்போது மாநில கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜி, தற்போதைய கல்வி இணை மந்திரி பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.

    இந்த முறைகேடு வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் காங்கோபத்யாய் விசாரித்து வந்தார். இந்த வழக்கில், முறைகேடாக சேர்க்கப்பட்ட 1,911 'குரூப்-டி' பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    • மேற்கு வங்காள மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
    • இந்நிலையில், அங்கு மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் அலிபுர்துவார் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் சுமன் கஞ்சிலால். பாஜகவை சேர்ந்தவர்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன் சுமன் கஞ்சிலால் அக்கட்சியில் இணைந்தார்.

    விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. திரிணாமுல் கட்சியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின் பா.ஜ.க.வில் இருந்து இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    • மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திட்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணிருல் கான் என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    • இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.
    • ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    கொல்கத்தா :

    இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து தினமும் 150க்கும் அதிகமான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் சஞ்சீவ் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, இதுப்பற்றி அவர் கூறுகையில் "இண்டிகோ இப்போது ஐதராபாத்தில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.

    இண்டிகோ விமான நிறுவனம் தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டில் 49 நகரங்களுக்கும், வெளிநாடுகளில் 8 நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • எல்.ஐ.சியில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை பாஜக தங்கள் கட்சி நலனுக்காக செயல்படுத்துகிறது.
    • எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்கப்படும் விதத்தைப் பார்த்தால் அச்சம் ஏற்படுத்துகிறது.

    கொல்கத்தா:

    எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அரசாங்கம் நீண்ட நாட்களுக்கு நீடித்தால் எல்.ஐ.சி. அதிக அளவில் பாதிக்கப்படும். எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்கப்படும் விதத்தைப் பார்த்தால் அச்சம் ஏற்படுத்துகிறது. எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள மக்களின் பணம் பா.ஜ.க.வுக்கு உதவியாக உள்ள அவர்களது நண்பர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளில் நீங்கள் செலுத்திய பணம் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பதே உங்களுக்குத் தெரியாது என தெரிவித்தார்.

    • மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மம்தா குற்றச்சாட்டு
    • வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது.

    போல்பூர்:

    மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

    இந்த பட்ஜெட் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதம், மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட். ஒரு வகுப்பினருக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அம்சங்கள் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    ×